இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட்டின் பயிற்றுவிப்பின் கீழ் சிரேஷ்ட வீரர்கள் பொறுப்புடன் விளையாடுவது மகிழ்ச்சியளிப்பதாக இலங்கை அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் நவீட் நவாஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தினேஷ் சந்திமால் 118 ஓட்டங்களைப் பெற்று ஓய்வறை திரும்பியபோது, தனது பொறுப்பு இன்னும் முடிவடையவில்லை என பயிற்றுவிப்பாளர் சந்திமாலிடம் தெரிவித்ததாகவும், அவர் சொன்ன வார்த்தையிலிருந்து புத்துணர்ச்சி பெற்ற அவர், 206 ஓட்டங்களைக் குவித்து இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் என உதவிப் பயிற்றுவிப்பாளர் மேலும் கூறினார்.
டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை பாரிய முன்னேற்றம்
இலங்கை அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் நவீட் நவாஸ் Cricbuzz இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
‘தினேஷ் சந்திமால் சதத்தைப் பூர்த்தி செய்த நாள் ஆட்ட நேரம் முடிந்தவுடன், உங்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை இந்தப் போட்டியில் பார்க்க விரும்புகிறேன் என நான் சொன்னேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 165 ஓட்டங்கள் தான் அவருடைய முந்தைய அதிகபட்ச ஓட்டங்களாக காணப்பட்டது. எனவே, இந்தப் போட்டியில் அதை அவர் முறியடிக்க வேண்டும் என்பதை நாங்கள் இலக்காககக் கொண்டோம். அவர் 165 ஓட்டங்களைக் கடந்தபோது, அவரை மீண்டும் யாராலும் தடுக்க முடியவில்லை.
இதனிடையே, கிறிஸ் சில்வர்வுட்டின் தலைமையிலான இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் குழாம் அணியில் உள்ள சிரேஷ்ட வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
‘நீங்கள் தான் அணிக்கு சொந்தக்காரர்கள் என்று நாங்கள் அவர்களிடம் சொன்னோம். சிரேஷ்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டுக்கு அளப்பெரிய சேவை செய்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அணியின் உரிமையை எடுத்துக் கொண்டு, இது எனது அணி, நான் இந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவும் Cricbuzz இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலில், சிரேஷ்ட வீரர்கள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறியிருந்தார்.
அத்துடன், புதிய தலைமைப் பயிற்சியாளர் சில்வர்வுட் அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் நல்ல நம்பிக்கையை வளர்த்து வருகிறார் என்று அவர் கூறினார்.
இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு வெற்றிக்காக விளையாடுவார்கள் என்றும் உதவிப் பயிற்சியாளர் நவீட் நவாஸ் தெரிவித்துள்ளார்.
‘இலங்கையின் தற்போதைய நிலைமை அனைவருக்கும் தெரியும். நாங்கள் அணியாக சிறப்பாகச் செயற்படுவது பற்றியும், மக்கள் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது பற்றியும் பேசினோம்.’ என தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை அணியின் அடுத்த சவால் குறித்து நவீட் நவாஸ் கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தான் வலுவான அணி. நாங்கள் அந்த அணியுடன் விளையாடுவதை மிகப் பெரிய சவாலாக எடுத்துக்கொள்கிறோம். ஏனெனில் இந்தப் போட்டியும் ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியாகும்’ என்று அவர் கூறினார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<