இவ்வருடம் இடம்பெறவுள்ள 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான சர்வதேச போட்டிகளுக்காக இலங்கையின் 16 வயதின் கீழ் தேசிய அணியை தெரிவு செய்வதற்கான வீரர்கள் தெரிவு மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த வீரர்கள் தெரிவு, ஜனவரி 7ஆம் திகதி, 8ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளன.
இதன் முதல் கட்டமாக, ஜனவரி 07ஆம் திகதி (இன்று) காலை ஒரு தொகுதியினருக்கான வீரர்கள் தெரிவு இடம்பெறும். கொழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் இடம்பெறும் இன்றைய தெரிவுக்கு 2000ஆம் அண்டு பிறந்த வீரர்கள் பங்கு கொள்ளலாம்.
அதேபோன்று 08ஆம் திகதி (நாளை) கொழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் இடம்பெறும் இரண்டாம் கட்ட வீரர்கள் தெரிவுக்கு 2001ஆம் ஆண்டு பிறந்த வீரர்கள் பங்கு கொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதி அதே மைதானத்தில் இடம்பெறும் மூன்றாவதும் இறுதியுமான கட்ட அணித்தேர்வில் 2002ஆம் மற்றும் 2003ஆம் அண்டு பிறந்த வீரர்கள் கலந்துகொள்ளலாம். இந்த அனைத்து தெரிவுகளும் காலை 7.30 மணியில் இருந்து இடம்பெறும் என்று இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வுகளின் பின்னர், 16 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய அணியின் இறுதிக் குழாம் இம்மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் தெரிவுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டிவிஷன் I சம்பியனாக முடிசூடிய புனித ஜோசப் கல்லூரி
குறித்த வீரர்கள் தெரிவு நிறைவின் பின்னர் அறிவிக்கப்படும் இறுதி அணி, இந்த வருடம் மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெறும் நான்கு நாடுகளின் 16 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான சர்வதேச இளையோர் போட்டிகளில் கலந்துகொள்ளும். கொழும்பில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டிகளில் இலங்கை, ஜப்பான், பூட்டான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் பங்குகொள்ளவுள்ளன.
அதன் பின்னர் இவ்வருடத்தின் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இடம்பெறும் 16 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்து சம்மேளனக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளிலும் இவ்வணி பங்குகொண்டு விளையாடவுள்ளது.
எனவே, இன்று ஆரம்பமாகி இடம்பெறும் இந்த வீரர்கள் தேர்வில் குறித்த வயதுக்கு உட்பட்ட வீரர்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை கால்பந்து சம்மேளனம் அனைத்து கால்பந்து கழகங்கள் மற்றும் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்களிடமும் கேட்டுள்ளது.