ஆசிய இளையோர் தகுதிகாண் போட்டியில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்

308

எதிர்வரும் 2022இல் குவைத்தில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட முதலாவது இளையோர் தகுதிகாண் போட்டிகள் கடந்த வார இறுதியில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த தகுதிகாண் போட்டியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே, இம்முறை இளையோர் தகுதிகாண் போட்டிகளில் தமிழ் பேசுகின்ற வீரர்களும் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

ஆசிய இளையோர் மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் நவம்பரில்

இதில், கடந்த சனிக்கிழமை (13) நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீராங்கனை சிவபாதம் சுவர்ணா முதலிடத்தைப் பெற்றார்.

இப்போட்டியில் இருவர் மாத்திரமே பங்குபற்றியதுடன் மற்றைய வீராங்கனை தனது முயற்சிகளில் தோல்வி அடைந்தார்.

எனவே, குறித்த போட்டியில் 2.60 மீட்டர் உயரத்தை சுவர்ணா தாவியபோதிலும் ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிக்கான 2.80 மீட்டர் என்ற அடைவு மட்டத்தை அவரால் நெருங்கமுடியவில்லை.

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மற்றும் ஜோன் டார்பட் உள்ளிட்ட போட்டிகளில் பெண்களுக்கான உயரம் பாய்தல் மற்றும் கோலூன்றிப் பாய்தலில் அவர் வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காலி மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் சார்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய ரபையுதீன் சபீக் 50.12 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

WATCH – “கோலுன்றிப் பாய்தலில் சாதித்துக் காட்டுவேன்” – என்.டக்சிதா

குறித்த போட்டியில் 52.67 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்து வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் சக்ய குமார முதலிடத்தையும், 41.74 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்த மருதானை புனித ஜோசப் கல்லூரியின் டி.ஐ வைட் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், ஆண்களுக்கான 2,000 மீட்டர் தடைதாண்டி ஓட்டப் போட்டியை 7 நிமிடங்கள் 44.57 செக்கன்களில் நிறைவுசெய்த பதுளை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தைச் சேர்ந்த எஸ். பிரேமகுமார் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியில் யுவன் தனன்ஜய (வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி) முதலிடத்தையும் திலிப் குமார (தியபோகந்துர மகா வித்தியாலயம்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதுஇவ்வாறிருக்க, பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 18.71 செக்கன்களில் நிறைவுசெய்த மட்டகளப்பு, செட்டிப்பாளையம் மகா வித்தியாலய வீராங்கனை ஜே. வஷானன்ஞலி இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

10,000 மீட்டர் ஆதிக்கத்தை மீண்டும் கைப்பற்றிய சண்முகேஸ்வரன்

குறித்த போட்டியில் கேகாலை ஜோசப் மகளிர் கல்லூரி மாணவி ஷைனி காவிந்தியா (18.10 செக்.) முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இந்தப் போட்டித் தொடரின் மூலம் இதுவரை 3 வீரர்கள் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெற்றுள்ளனர்.

இதில் பெண்களுக்கான 800 மீட்டரில் பங்குகொண்ட கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலையின் நிர்மாலி விக்ரமசிங்க (2 நிமிடங்கள் 14.45 செக்), பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலையின் ஷெஹாரா கருணாரத்ன (ஒரு நிமிடம் 06.12 செக்.), ஆண்களுக்கான உயரம் பாய்தலில் கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லூரியின் ஜி.எல் அர்னவிலு (1.94 மீட்டர்) ஆகிய மூவரும் இவ்வாறு ஆசிய இளையோர் மெய்வல்லுனர் தொடருக்கான அடைவுமட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இரு பாலாருக்குமான 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் எந்தவொரு வீரரும் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவுமட்டத்தை பூர்த்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<