ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியின் இரண்டாம் கட்டம் முடிவுகள்

284
Yupun, Janaka & Ushan

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாம் கட்டப் போட்டிகள் நேற்றைய தினம் (12) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

இதில், இலங்கையின் இளம் மெய்வல்லுனர் வீரர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்ற ஆண்களுக்கான நீளம் பாய்தலில் ஜானக பிரசாத் விமலசிறி, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் உஷான் திவங்க மற்றும் ஆண்களுக்கான 100 மீற்றரில் யுபுன் அபேகோன் ஆகிய வீரர்கள் தமது சிறந்த தூரங்கள் மற்றும் நேரப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசிய மட்டத்தில் முதல் 10 இடங்களிலுமுள்ள வீரர்களுக்காக மாத்திரம் நடைபெற்ற இப்போட்டிகளில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டி முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

இதில் இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் இறுதிப் போட்டியில் 7 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஜானக பிரசாத் விமலசிறிக்கும், கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை பல்கலைக்கழக மெய்வல்லுனர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தனுஷ்க பியரத்னவுக்கும் பலத்த போட்டி நிலவியது.

ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்

எனினும், போட்டியின் முதல் சுற்றிலேயே 8.10 மீற்றர் உயரத்தைப் பாய்ந்த ஜானக விமலசிறி, ஆசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தைப் (7.95 மீற்றர்) பூர்த்தி செய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதே நேரம் இறுதியாக நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவிலும் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் ஜானக விமலசிறி பங்கேற்றிருந்தார்.

இதன்படி, பொதுநலவாய விளையாட்டு விழாவின் போது நீளம் பாய்தல் போட்டியில் 7.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரத்தைப் பதிவு செய்திருந்த ஜானக விமலசிறி, நேற்று நடைபெற்ற போட்டியில் மீண்டும் அந்த சாதனையை புதுப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், பிரசாத்துக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த தனுஷ்க பியரத்ன 7.65 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து இரண்டாவது இடத்தையும், இலங்கை விமானப் படையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அமில ஜயசிறி 7.63 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.


உயரம் பாய்தலில் திவங்க அபாரம்

இலங்கையின் இரண்டாவது சிறந்த உயரம் பாய்தல் வீரராக கருதப்படும் 20 வயதுடைய உஷான் திவங்க கடந்த மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரின் போது 2.20 மீற்றர் உயரத்தை தாவி, உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் தன்னுடைய சொந்த சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

எனினும், கடந்த வாரம் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.16 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்ற அவர், நேற்று நடைபெற்ற போட்டியில் 2.24 உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்திருந்தார்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 12 இலங்கை வீரர்கள்

எனினும், 2.28 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்காக மேற்கொண்ட 3 முயற்சியிலும் அவர் தோல்வியைத் தழுவினார்.

அத்துடன், உஷான் திவங்கவின் இந்த சாதனையானது தேசிய மட்டத்தில் 2 ஆவது சிறந்த உயரமாக பதிவாகியது. முன்னதாக உயரம் பாய்தலின் தேசிய வீரர் மஞ்சுள குமார, 14 வருடங்களுக்கு முன் 2.27 மீற்றர் உயரத்தையும், முன்னாள் வீரரான நளின் பிரியந்த 2.21 மீற்றர் உயரத்தையும் பதிவு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


100 மீற்றரில் யுபுனுக்கு முதலிடம்

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.31 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை இராணுவ வீரர் யுபுன் அபேகோன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இது அவரது அதி சிறந்த தனிப்பட்ட நேரப் பதிவாகும்.

தற்போது இத்தாலியில் வசித்து வருகின்ற யுபுன் அபேகோன், கடந்த வருடம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தெற்காசியாவின் அதிவேக வீரரும், இப்போட்டியின் தற்போதை சம்பியனுமாகிய ஹிமாஷ ஏஷான் முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றார். ஆனால் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக நேற்றைய போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு மலேசிய பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த இலங்கையின் மற்றுமொரு அதி சிறந்த குறுந்தூர ஓட்ட வீரரான வினோஜ் சுரன்ஜய டி சில்வா, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.27 செக்கன்களில் நிறைவு செய்து தனது தனிப்பட்ட சிறந்த நேரப் பதிவுடன் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.


சட்டவேலி ஓட்டத்தில் இரேஷானி முன்னிலை

பெண்களுக்கான சட்டவேலி ஓட்டத்தில் நடப்புச் சம்பியனான லக்‌ஷிகா சுகந்தி மற்றும் இரேஷானி ராஜசிங்க ஆகியோர் மாத்திரம் போட்டியிட்டிருந்தனர்.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு வீரர்கள்

எனினும், விறுவிறுப்புடன் நடைபெற்ற இப்போட்டியை 13.95 செக்கன்களில் நிறைவு செய்த இரேஷானி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இது அவரது அதி சிறந்த தனிப்பட்ட நேரப் பதிவாகும்.

அத்துடன், உபாதை காரணமாக கடந்த ஒரு வருடங்களாக எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காத இரேஷானி ராஜசிங்கவின் இந்த நேரப் பெறுமதியானது, பெண்களுக்கான சட்டவேலி ஓட்டத்தில் இலங்கையின் 4 ஆவது அதி சிறந்த நேரப் பெறுமதியாகவும் இடம் பெற்றது. இதற்கு முன்னர் முன்னாள் வீராங்கனைகளான ஸ்ரீயானி குலவன்ச, சொனாலி மெரில் மற்றும் பிரதீபா ஹேரத் ஆகிய வீராங்கனைகள் 14 செக்கன்களுக்கு குறைவான நேரத்தில் சட்டவேலி ஓட்டப் போட்டியை நிறைவு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இரேஷானிக்கு பலத்த போட்டியைக் கொடுத்த லக்‌ஷிகா சுகந்தியும் போட்டியை 13.99 செக்கன்களில் நிறைவு செய்து தனது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுமதியுடன் 2 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.


கனிஷ்ட வீரர்களும் அபாரம்

கடந்த வாரம் நிறைவுக்கு வந்த தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பதக்கங்களை வென்ற ஒரு சில வீர, வீராங்கனைகளும் நேற்று நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்றிருந்ததுடன், தமது தனிப்பட்ட நேரப் பெறுமதிகளையும் பதிவு செய்திருந்தனர்.

இதில் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 100 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த சானுக சந்தீப, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.67 செக்கன்களில் நிறைவு செய்து 5 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இது அவரது அதி சிறந்த தனிப்பட்ட நேரப் பெறுமதியாகும்.

Uthayawani – Bronze medal in Jeveling Throw – South Asia Junior Athletic Championship – 2018

Uploaded by ThePapare.com on 2018-05-09.

இதேநேரம் பெண்களுக்கான 100 மீற்றரில் கலந்து கொண்ட மற்றுமொரு கனிஷ்ட வீராங்கனையான ஷர்மிலா ஜேன் (12.19 செக்.) 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இது அவரது அதி சிறந்த தனிப்பட்ட நேரப் பெறுமதியாகும்.

எனவே ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வினோஜ் சுரன்ஜய டி சில்வா மாத்திரம் புதிய தேசிய சாதனை படைத்து ஆசிய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெற்றார். எனினும், பெரும்பாலான போட்டிகளில் வீரர்கள் ஆசிய அடைவு மட்டத்தினை நெருங்கியிருந்தாலும், நீளம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்ட ஜானக பிரசாத் விமலசிறி மாத்திரம் ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதியைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.