இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இறுதி 2 வீரர்கள் குழாமில், கிளிநொச்சி வீரரான செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் இணைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலிங்கவின் பாணியில் பந்துவீசும் செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் முதற்தர உள்ளூர் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், நேரடியாக லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடும் முகமாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
Read – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மேலும் 3 தமிழ் வீரர்கள்
இறுதியாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் வலைப் பந்துவீச்சாளராக அணியில் இணைக்கப்படுவதாக அறிவித்திருந்தது. எனினும், அவரது திறமையை கணித்துக்கொண்ட அந்த அணி நிர்வாகம், விஜயராஜை தங்களது இறுதி குழாத்துடன் இணைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளது.
இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசுகின்ற கிளிநொச்சியைச் சேர்ந்த செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் முதல்முறையாக தேசிய மட்டத்தில் முன்னணி அணியொன்றுக்கு இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் என வர்ணிக்கப்படும் இவர், தனது கிராமத்தில் இடம்பெறுகின்ற மென்பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன்காரணமாக இலங்கை தேர்வுக்குழுவின் அப்போதைய தலைவராக இருந்த சனத் ஜயசூரியவின் அழைப்பின் பேரில் அவ்வப்போது இலங்கை வீரர்களுக்காக இடம்பெற்ற ஒருசில வலைப்பயிற்சிகளில் கலந்துகொண்டார்.
எனினும், அவரால் தேசிய ரீதியில் எந்தவொரு கழகத்துக்காவும் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கிவில்லை. எனவே, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, ஆரம்பத்தில் வலைப் பந்துவீச்சாளராக அழைத்து, தற்போது குழாத்தில் ஒரு வீரராகவும் இவரை இணைத்துள்ளது.
Watch – LPL தொடரின் ஏற்பாடுகள் பூர்த்தியா? Ravin Wickramaratne – நேர்காணல்
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஏற்கனவே தெய்வேந்திரம் டினோஷன், விஜயகாந்த் வியாஸ்காந் மற்றும் கனகரட்னம் கபில்ராஜ் ஆகிய மூன்று யாழ் வீரர்களை குழாத்தில் இணைத்துள்ளதுடன், நான்காவது தமிழ்பேசும் வீரராக செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் இணைக்கப்பட்டுள்ளார்.
முதன்முறையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடரில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவராக இலங்கை தேசிய அணியின் அதிரடி சகலதுறை வீரர் திசர பெரேரா செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க