ரினௌனை வீழ்த்தி சீ ஹோக்ஸ் முதலிடத்திற்கு முன்னேற்றம்

386
DCL Roundup

டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் 14 ஆவது வாரத்திற்கான நான்கு போட்டிகள் புதன்கிழமை (30) நடைபெற்றன. இதில் ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்ற நேவி சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டதோடு மைதானத்திற்கு ரசிகர்கள் நுழைந்ததால் ரெட் ஸ்டார் மற்றும் ப்ளூ ஸ்டார் அணிகளுக்கு இடையிலான போட்டி கடைசி நிமிடங்களில் கைவிடப்பட்டது.

ரினௌன் விளையாட்டுக் கழகம் எதிர் நேவி சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம்

வெலிசரை கடற்படை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வருகை அணியான ரினௌன் போட்டி ஆரம்பிப்பது தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இடையே மாலை 3.30 மணிக்கு போட்டி ஆரம்பமானது.

எனவே, போட்டி ஆரம்பித்த விரைவிலேயே நேவி சீ ஹோக்ஸ் அணிக்கு முன்னிலை பெற முடிந்தது. மொஹமட் அஸ்மிர் 3 ஆவது நிமிடத்தில் அபாரமாக கோல் ஒன்றை புகுத்தினார்.

எனினும் முதல் 20 நிமிடங்களில் ரினௌன் அணி போட்டிக்குள் நுழைவதில் கடும் நெருக்கடியை சந்தித்தது. இந்நிலையில் மரியதாஸ் நிதர்ஷன் பந்தை எதிரணி பெனால்டி பெட்டிக்குள் கடத்திச் சென்றபோதும் நேவி சீ ஹோக்ஸ் பின்கள வீரர்களின் அரணை அவரால் முறியடிக்க முடியவில்லை.   

இந்நிலையில் 23 ஆவது நிமித்தில் கடற்படையின் ஆதிக்கம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டது. ரினௌன் மத்தியகள வீரர் ஹகீம் காமிலிடம் இருந்து பந்தை பறித்த தனுஷ்க மதுஷங்க எதிரணி கோல்காப்பாளரை முறியடித்து பந்தை வலைக்குள் செலுத்தினார்.

முதல் பாதி: நேவி சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் 2 – 0 ரினௌன் விளையாட்டுக் கழகம்

முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்ற நேவி சீ ஹோக்ஸ் இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.

67 ஆவது நிமிடத்தில் வைத்து ஹகீம் செய்த மற்றொரு தவறை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட மதுஷங்க எதிரணி தற்காப்பு அரணை மீறி பந்தை கோல்காப்பாளருக்கு மேலால் செலுத்தி கோலொன்றைப் பெற்றார்.

கடைசி நிமிடங்கள் வரை நான்காவது கோலையும் புகுத்த கடற்படை அணி போராடியபோது ரினௌன் அணி கோலின்றி ஏமாற்றத்துடன் போட்டியை முடித்துக் கொண்டது.

இதன் மூலம் 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற நேவி சீ ஹோக்ஸ் அணி டயலொக் சம்பியன்ஸ் லீக் புள்ளிப்பட்டியலில் 13 போட்டிகளில் 30 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது. முதலிடத்தில் இருந்த டிபென்டர்ஸ் கால்பந்து கழகம் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. ரினௌன் கழகம் 7 ஆவது இடத்தில் நீடிக்கிறது.

முழு நேரம்: நேவி சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் 3 – 0 ரினௌன் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

நேவி சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் – மொஹமட் அஸ்மிர் 3′ தனுஷ்க மதுஷங்க 23′, 67′


கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் எதிர் நீர்கொழும்பு யூத் கால்பந்து கழகம்

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மேலதிக நேரத்தில் ஏ. மைக்கல் பெற்ற கோல் மூலம் நீர்கொழும்பு யூத் கால்பந்து கழகத்திற்கு எதிரான போட்டியில் கிறிஸ்டல் பெலஸ் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

டயலொக் சம்பியன்ஸ் லீக் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நீர்கொழும் யூத் அணி கிறிஸ்டல் பெலஸை வீழ்த்த கடைசி வரை போராடியதை பார்க்க முடிந்தது. நாவலப்பிட்டி, ஜயதிலக்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கிறிஸ்டெல் பெலஸ் அணி சார்பில் அஹமட் ஆதில் 34 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை புகுத்தினார்.

எனினும் நீர்கொழும் யூத் அணியின் கோல் பெறும் முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில் முதல் பாதியில் கிறிஸ்டல் பெலஸ் அணியினால் முன்னிலை பெற முடிந்தது.

முதல் பாதி: கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் 1 – 0 நீர்கொழும்பு யூத் கால்பந்து கழகம்

இரண்டாவது பாதியிலும் கிறிஸ்டல் பெலஸ் அணியின் கால்களிலேயே பந்து அதிகம் சுழன்றது. எனினும் 55 ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ரொஷான் பாதிலெட் போட்ட ஓன் கோல் (own goal) மூலம் நீர்கொழும்பு யூத் அணி போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட நீர்கொழும்பு அணி எதிரணிக்கு அதிக இடைவெளிகள் கொடுக்காமல் தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியது. இதன் மூலம் 90 நிமிடங்கள் முடியும்போது 1-1 என்று போட்டி சமநிலையில் இருந்தபோதும் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் ஏ.மைக்கல் புகுத்திய கோல் கிறிஸ்டல் பெலஸ் அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.

முழு நேரம்: கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் 2 – 1 நீர்கொழும்பு யூத் கால்பந்து கழகம்

கோல் பெற்றவர்கள்

கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் – அஹமட் ஆதில் 34′, ஏ.மைக்கல் 90+4′

நீர்கொழும்பு யூத் கால்பந்து கழகம் – ரொஷான் பாதிலெட் 55′ (ஓன் கோல்)


மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம்

கடைசி நிமிடத்தில் போடப்பட்ட ஓன் கோல் மற்றும் கோல் மூலம் விமானப்படை விளையாட்டுக் கழகம் மற்றும் மாத்திறை சிட்டி அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டி 2-2 என சமநிலையில் முடிவுற்றது.

மாத்தறை கால்பந்து வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் இடையில் பதற்றத்துடன் நீடித்ததால் மூன்று வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றனர். எனினும் சிறப்பாக ஆடிய பி. ப்ரின்ஸ் 19 ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தி மாத்தறை சிட்டி அணியை முன்னிலை பெறச் செய்தார்.       

முதல் பாதி: மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம் 1 – 0 இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டத்தில் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்த இலங்கை விமானப்படை அணி 61 ஆவது நிமித்தில் பதில் கோல் திருப்பியது. கவிந்து இஷான் அந்த கோலை போட்டார். போட்டி 1-1 என சமநிலை பெற்ற நிலையில் கடைசி 20 நிமிடங்களிலும் விறுவிறுப்பு அதிகரித்தது.

எனினும் முழு நேர முடிவில் இரு அணிகளாலும் வெற்றி கோல் போட முடியாத நிலையில் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் ஆட்டம் முழுமையாக திசை திரும்பியது. மேலதிக நேரத்தின் முதலாவது நிமிடத்தில் பி.ப்ரின்ஸ் மற்றொரு கோலை புகுத்தி மாத்தறை சிட்டி அணிக்காக வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து கொண்டிருந்த நிலையில் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மாத்தறை சிட்டி வீரர் ஏ. இசாக் புகுத்திய ஓன் கோல் போட்டி சமநிலையில் முடிய காரணமானது.

முழு நேரம்:  மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம் 2 – 2 இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம் – பி. ப்ரின்ஸ் 19′, 90+1

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் – கவிந்து இஷான் 61′, ஏ. இசாக் 90+6


ரெட் ஸ்டார் கால்பந்து கழகம் எதிர் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம்

களுத்துறை, வர்னொன் பெர்னாண்டோ அரங்கில் நடைபெற்ற போட்டியின் 83 ஆவது நிமித்தில் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவித்ததால் போட்டி கைவிடப்பட்டது. எனினும் போட்டி தடைப்படும்போது ரெட் ஸ்டார் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.  

இதன்போது ரெட் ஸ்டார் அணிக்காக ஏ.ஐ. அபுமாரே 11 ஆவது மற்றும் 27 ஆவது நிமிடங்களில் கோல் புகுத்தியதோடு ப்ளூ ஸ்டார் அணி சார்பில் ஏ.ஐ. சிமசி 17 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி இருந்தார்.

முன்னதாக கிறிஸ்டல் பெலஸ் அணிக்கு எதிராக நாவலப்பிட்டியில் நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டியில் ப்ளூ ஸ்டார் அணி பார்வையாளர்களால் தாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க