ஸ்கொட்லாந்துடனான இறுதி வாய்ப்பை பயன்படுத்துமா இலங்கை?

950

உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 21 ஆம் திகதியும் எடிங்பேர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணம் நெருங்கிவரும் நிலையில், திமுத் கருணாரத்னவின் தலைமையில் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது. 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு பின்னர் திமுத் கருணாரத்ன ஒருநாள் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் பிரகாசித்திருந்த காரணத்தால், உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

2019 உலகக் கிண்ணத்தில் கால்பதிக்கும் இளம் நட்சத்திரங்கள்

கிரிக்கெட் உலகின் வல்லரசைத் தீர்மானிக்கும் 12ஆவது உலகக் கிண்ணத் தொடர் இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி

அதேநேரம், இறுதியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி கொண்டதுடன், தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றிருந்தது. இந்த தொடரில் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்திய காரணத்தால், லசித் மாலிங்கவிடம் இருந்த தலைவர் பதவி திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைவருடன் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக களமிறங்கவுள்ள இலங்கை அணி, உலகக் கிண்ணத் தொடருக்கான சிறந்த தயார்படுத்தலாக இந்த தொடரை அமைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த இலங்கை அணி, தங்களுடைய உலகக் கிண்ண குழாத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த வருடத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் மொத்தமாக 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள போதும், ஒரு வெற்றியேனும் இதுவரையில் இலங்கை அணியால் பெற முடியவில்லை. அதேநேரம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 6 போட்டிகளில் மாத்திரமே இலங்கை வெற்றிபெற்றுள்ளது.

எனினும், ஸ்கொட்லாந்து அணியை பொருத்தவரை, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து தாங்கள் விளையாடிய 12 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியை தக்கவைத்துள்ளது. இதில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பலம் மிக்க இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 371 ஓட்டங்களை விளாசி, 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தக்கவைத்திருந்தது. இவ்வருடம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ள ஸ்கொட்லாந்து அணி குறித்த போட்டியில் டக்வத் லூவிஸ் முறைப்படி 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவியிருந்தது.

அவிஷ்க குணவர்தனவின் இடத்தை நிரப்ப வரும் சமிந்த வாஸ்

இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ், அடுத்த மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம்

இவ்வாறு சிறப்பாக பிரகாசித்து வரும் ஸ்கொட்லாந்து அணி இலங்கை அணிக்கு இந்த தொடரில் சவால் கொடுக்கக்கூடிய அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கை அணி இந்த தொடரில் தங்களுடைய வெற்றியை விடவும், உலகக் கிண்ண தொடருக்கான தங்களுடைய முதன்மை பதினொருவரை தீர்மானிக்கும் வகையில் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளினதும் கடந்தகால மோதல்கள்

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்களை பொருத்தவரை, இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. குறித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கை அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் போது, ஸ்கொட்லாந்து அணியை இலங்கை அணி, 183 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்ததுடன், 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ண லீக் போட்டியில் 148 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது.

எனினும், இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2017 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு முன்னரான ஒருநாள் பயிற்சி போட்டியின் போது, ஸ்கொட்லாந்து அணி, இலங்கை அணிக்கு அதிர்ச்சி தோல்வியை வழங்கியிருந்தது.

ஒரு பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்த போதும், ஒரு போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் 288 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கிய ஸ்கொட்லாந்து அணி வெறும், 42.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

குசல் மெண்டிஸ்

இலங்கை அணியை பொருத்தவரை எதிர்பார்க்கக்கூடிய வீரராக குசல் மெண்டிஸ் உள்ளார். குறிப்பாக கடந்த சில மாதங்களாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி வரும் போதும், குசல் மெண்டிஸ் மாத்திரம் ஓரளவு ஓட்டங்களை பெற்று வருகின்றார். இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 202 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். அத்துடன், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால், அதேபோன்ற சூழ்நிலையில் மெண்டிஸால் அதிக ஓட்டங்களை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷ் அணியை இலங்கைக்கு அனுப்பமாட்டோம் – நஸ்முல் ஹசன்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இலங்கை மற்றும் பங்களாதேஷ்

கெலம் மெக்லோட்

ஸ்கொட்லாந்து அணியின் அனுபவம் வாய்ந்த மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான கெலம் மெக்லோட் இலங்கை அணிக்கு மிகப்பெறும் சவாலை கொடுக்கக்கூடிய துடுப்பாட்ட வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 89 பந்துகளில் சதம் கடந்திருந்த இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 140 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

அத்துடன் கடந்த இரண்டு வருடங்களில் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெலும் மெக்லோட் 63.06 என்ற சராசரியில் 946 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணிக் குழாம்கள்

இலங்கை குழாம்

திமுத் கருனாரத்ன (அணித்தலைவர்), லஹிரு திரிமான்ன, அவிஷ்க பெர்னாந்து, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனன்ஜய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், மிலிந்த சிறிவர்தன, திசர பெரேரா, இசுரு உதான, ஜீவன் மெண்டிஸ், லசித் மாலிங்க, நுவன் பிரதீப், ஜெப்ரி வென்டர்ஸே, சுரங்க லக்மால்,

காத்திருப்பு வீரர்கள் – ஓஷத பெர்னாந்து, வனிந்து ஹசரங்க, கசுன் ராஜித, அஞ்செலோ பெரேரா

ஸ்கொட்லாந்து குழாம்

கெய்ல் கோட்ஷர் (அணித்தலைவர்), டெய்லன் பட்ஜ், ஸ்கொட் கெமரோன், மெதிவ் க்ரொஸ், அலெஸ்டைர் ஈவன்ஸ், மிச்சல் ஜோன்ஸ், மிச்சல் லீஸ்க், கெலம் மெக்லோட், கெவின் மெயின், ஜோர்ஜ் முன்சே, சப்யான் ஷெரிப், டொம் சோல், க்ரைக் வெல்லஸ், மார்க் வாட், ப்ரெட் வெல்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க