19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ணப் போட்டிகளில் இன்று 2 சதங்கள்

342
Singer Trophy U19 division 1

2016/17 ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பிரிவு 1 இற்கான நான்கு போட்டிகள் இடம்பெற்றன. இன்றைய போட்டிகளில் இரண்டு சதங்கள் பெறப்பட்டுள்ளன. 

அந்த வகையில் இந்த சுற்றுப்போட்டிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரிவு 1இற்காக (டிவிசன் 1) 28 பாடசாலை அணிகளும், பிரிவு 2இற்காக (டிவிசன் 2) 16 பாடசாலை அணிகளும், பிரிவு 3இற்காக  (டிவிசன் 3) 4 பாடசாலை அணிகளுமாக மொத்தம் 48 பாடசாலை அணிகள் கலந்து கொள்கின்றன. இப்பிரிவுகளில் முன்னிலை பெறும் 16 பாடசாலை அணிகள் இருபதுக்கு-20 போட்டித்தொடருக்கு தெரிவு செய்யப்படும். அந்த வகையில் இன்று பிரிவு 1 இற்காக 4 போட்டிகள் இடம்பெற்றன .

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரிபுனித திரித்துவ கல்லூரி

ப்ளூம் பீல்ட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித திரித்துவ கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி 63 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணிக்காக தசுன் டெமஷ 62 ஓட்டங்களையும், ஷேஷாட் அமீன் 39 ஓட்டங்களையும், மெத்சித் ஜெயமந்த 34 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் சன்முகநாதன் சனோகீத் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், விமுக்தி நேத்மால் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மொஹமட் ஸீப் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய புனித திரித்துவ கல்லூரி முதல் நாள் ஆட்ட முடிவில் 32 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. அதிகூடிய ஓட்டங்களாக கலன டீ சொய்சா 23 ஓட்டங்களையும், ஹசித்த பாயாகோட 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட பசிந்து ஆதித்யா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டி தொடர்ந்து நாளையும் இடம்பெறும்.

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி: 208/10 – தசுன் டெமஷ 62, ஷேஷாட் அமீன் 39, மெத்சித் ஜெயமந்த –34, சனோகீத் 32/3, விமுக்தி நேத்மால் 35/3, மொஹமட் ஸீப் 24/2

புனித திரித்துவ கல்லூரி: 75/5 – கலன டீ சொய்சா 23, ஹசித்த பாயாகோட 18, பசிந்து ஆதித்யா 26/2


ஜனாதிபதி கல்லூரிமரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

இவ்விரு பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டி கொழும்பு சர்ரே விலேஜ் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதனை தொடர்ந்து துடுப்பாட களம் இறங்கிய ஜனாதிபதி கல்லூரி 61.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் முறையே ஹிருன டில்ஷான் 57, மலக்கா டீ சில்வா 46 மற்றும் ஷாலக்க பண்டார 31 என அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். சிறந்த முறையில் பந்து வீசிய சன்க பூர்ண 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் லசித்த 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் தமது இன்னிங்ஸை ஆரம்பித்த மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, இன்றைய ஆட்ட நேர முடிவில் சிறப்பாக துடுப்பாடி 31 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆட்டமிழக்காமல் துஷான் குருகெ 74 ஓட்டங்களையும், ஷெஹான் மனீஷ 31 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர். யோஹான் லியனகே 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

ஜனாதிபதி கல்லூரி: 205/10 – ஹிருன டில்ஷான் 57, மலக்கா டீ சில்வா 46, ஷாலக்க பண்டார 31, சன்க பூர்ண 54/5, லசித்த 21/2

மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி: 122/2 – துஷான் குருகெ 74*, ஷெஹான் மனீஷ 31, யோஹான் லியனகே 15/2


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் புனித தோமஸ் கல்லூரி

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. சிறப்பாக துடுப்பாடிய டிலங்க மதுரங்க 143 ஓட்டங்களை விளாசினார். திலான் நிமேஷ் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். போட்டியில் 65ஆம் ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களை பெற்றிருந்த வேலையில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி ஆட்டத்தினை இடை நிறுத்திக்கொண்டது. பந்து வீச்சில் டெஹான் ஸ்சாப்ட்டர் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து களம் இறங்கிய புனித தோமஸ் கல்லூரி, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 25 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சிறப்பாக பந்து வீசிய அவிந்து பெர்னாண்டோ 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி: 305/8 – டிலங்க மதுரங்க 143, திலான் நிமேஷ் 78, டெஹான் ஸ்சாப்ட்டர் 34/2

புனித தோமஸ் கல்லூரி: 49/3 – அவிந்து பெர்னாண்டோ 15/2


புனித சில்வெஸ்டர் கல்லூரிஅநுராதபுரம் மத்திய கல்லூரி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அநுராதபுரம் மத்திய கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய புனித சில்வெஸ்டர் கல்லூரி 65 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்தியது. சிறப்பாக துடுப்பாடிய மஞ்சித் ராஜபக்ச ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களையும், அவிந்து ஹேரத் 94 ஓட்டங்களை புனித சில்வெஸ்டர் கல்லூரி சார்பாக பெற்றுகொண்டனர். பந்து வீச்சில் இசுறு அனுராத 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மதுரங்க சந்துவாரத்னே 94 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து களம் இறங்கிய அநுராதபுரம் மத்திய கல்லூரி, மிகவும் மோசமான துடுப்பாட்டத்தால், 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அநுராதபுரம் மத்திய கல்லூரிகாக டில்ஷான் மாத்திரம் அதிக பட்சமாக 29 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். தனது சிறப்பான பந்து வீச்சில் தூஷித் டீ சில்வா 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடன், மஞ்சுல பெரேரா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், உசிந்து 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் தமக்கிடையே பகிர்ந்து கொண்டனர்.

புனித சில்வெஸ்டர் கல்லூரி: 284/7மஞ்சித் ராஜபக்ச 111*, அவிந்து ஹேரத் 94, இசுறு அனுராத 49/3, மதுரங்க சந்துவாரத்னே 94/2

அநுராதபுரம் மத்திய கல்லூரி: 39/10 – டில்ஷான் 29*, தூஷித் டீ சில்வா 26/4, மஞ்சுள பெரேரா 15/3, உசிந்து 6/2

 schoolscricketcrawler