கேனோன் ஆர்.எஸ் டி சேரம் கிண்ணத்தை மீண்டும் சொந்தமாக்கிய திரித்துவக் கல்லூரி

259
Trinity vs Thomas

கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸ புனித தோமியர் கல்லூரிகளுக்கு இடையிலான ரக்பி போட்டியில் திரித்துவக் கல்லூரி அணி 29-14 என வெற்றி பெற்று கேனோன் ஆர்.எஸ் டி சேரம் கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது.

கொழும்பு CR&FC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, கேனோன் ஆர்.எஸ் டி சேரம் கிண்ணத்திற்குரிய இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடைபெறும் வருடாந்த போட்டியாகும்.

சென்ற வருடம் புனித தோமியர் கல்லூரி, திரித்துவக் கல்லூரியை மலையகத்தில் வைத்து வென்று கிண்ணத்தை சுவீகரித்தது. அதற்கு பதிலடியாக இம்முறை கொழும்பு மண்ணில் வைத்து வென்று, மீண்டும் ஒருமுறை கிண்ணத்தை மலையகம் நோக்கி எடுத்துச் செல்கிறது திரித்துவக் கல்லூரி.

பொர்னியோ செவன்ஸ் ரக்பி கிண்ணத்தினை சுவீகரித்த இலங்கை மகளிர் அணி

இப்பருவகால போட்டிகளில் இதுவரை எந்தப் போட்டியிலும் தோல்வியுறாத நிலையில் திரித்துவக் கல்லூரி பங்குகொண்டது. மறுமுனையில் வெஸ்லி அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த நிலையில், மீண்டெழும் எதிர்பார்ப்பில் தோமியர் கல்லூரி இன்று களமிறங்கியது.

போட்டி ஆரம்பித்ததிலிருந்து திரித்துவக் கல்லூரி எதிர்பார்த்தது போலவே ஆதிக்கம் செலுத்தியது. போட்டி ஆரம்பித்து 23 செக்கன்களில் திலுக்ஸ தங்கே முயற்சி செய்த பொழுதும் சிறிய தவறினால் திரித்துவக் கல்லூரி முதல் ட்ரையை தவறவிட்டது. தொடர்ந்து பந்தை பெற்றுக்கொண்ட தோமியர் கல்லூரிக்கு வாய்ப்பு கிடைத்த பொழுதும், டயோன் டயஸ் பந்தை நழுவ விட்டதனால் ட்ரை நழுவிப் போனது.

தொடர்ந்து இரு அணிகளும் மாறி மாறி பந்தை நொக் ஒன் செய்ததனால், இரு அணிகளும் எந்த ஒரு புள்ளியையேனும் பெற்றுக்கொள்ளவில்லை. தோமியர் கல்லூரி சார்பாக சிறப்பாக விளையாடிய ஹான்ஸ் வல்போல தமது அணிக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், சில தவறுகளின் காரணமாக தோமியர் கல்லூரி ட்ரைகளை வைக்கத் தவறியது.

மற்றுமொரு சிறந்த சந்தர்ப்பம் தோமியர் கல்லூரிக்கு கிடைத்த பொழுதும், டயோன் டயஸிற்கு வழங்கப்பட்ட பந்து FORWARD PASS என்பதன் காரணமாக அவ்வாய்ப்பும் பறிபோனது.

20ஆவது நிமிடத்தில் திரித்துவக் கல்லூரி தமது முதலாவது ட்ரையை பெற்றுக்கொண்டது. திலுக்ஸ தங்கேவின் உதவியுடன் பந்தை பெற்றுக்கொண்ட அமித் குலதுங்க, ட்ரை வைத்தார். லஷேன் விஜேசூரிய கொன்வர்சனை வெற்றிகரமாக உதைக்க, திரித்துவக் கல்லூரி முன்னிலை பெற்றது. (7-0)

அதன் பிறகு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய திரித்துவக் கல்லூரி, இரண்டாவது ட்ரையையும் வைத்து அசத்தியது. போயகொடவின் மூலம் பந்தை பெற்றுக்கொண்ட தங்கே, சிறப்பாக செயற்பட்டு பந்தை ஷீக்கிற்கு வழங்கினார். ஷீக் திரித்துவக் கல்லூரி சார்பாக 2ஆவது ட்ரையை வைத்தார். இம்முறையும் லஷேன் விஜேசூரிய கொன்வர்சனை தவறவிடவில்லை. (14-0)

முதல் பாதி முடிவடைவதற்குள் மற்றுமொரு ட்ரையை பெற்றுக்கொண்ட திரித்துவக் கல்லூரி, முதல் பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இம்முறை 35ஆவது நிமிடத்தில் லஷேன் விஜேசூரிய ட்ரை வைத்தார். எனினும் லஷென் கொன்வெர்சன் உதையை தவறவிட்டார்.

முதல் பாதி: திரித்துவக் கல்லூரி 19- 00 புனித தோமியர் கல்லூரி

இரண்டாவது பாதி ஆரம்பித்ததிலிருந்து ஆதிக்கம் செலுத்திய தோமியர் கல்லூரி, சில நிமிடங்களிலேயே தமது முதல் ட்ரையை வைத்து தமது ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. 22 மீட்டர் எல்லையினுள் கிடைக்கப்பெற்ற பெனால்டியினை துரிதமாக பெற்றுக்கொண்ட ஹன்ஸ் வல்பொல, கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். டயோன் டயஸ் இலகுவான கொன்வர்சனை தவறவிடவில்லை (19-07)

பாடசாலை ரக்பி லீக் தொடர்: நான்காம் வாரத்திற்கான முன்னோட்டம்

தொடர்ந்து தோமியர் கல்லூரிக்கு வாய்ப்பு கிடைத்த பொழுதும், மயோன் ஜயவர்தன பந்தை நழுவவிட்டு சிறந்த வாய்ப்பை தவறவிட்டார். அதன் பின்னர் தோமியர் கல்லூரியின் 5 மீட்டர் எல்லையினுள் பந்தை பெற்றுக்கொண்ட திரித்துவக் கல்லூரியின் தலைவர் நாதன் சாங், தமது அணி சார்பாக ட்ரை வைத்தார். எனினும் லஷேன் கொன்வெர்சனை மீண்டும் ஒரு முறை தவறவிட்டார். (24-07)

தோமியர் கல்லூரி 17 புள்ளிகள் பின்னிலையில் காணப்பட்டாலும், போட்டியை விட்டுக்கொடுக்காது சிறப்பாக விளையாடி அதில் சிறிதளவு வெற்றியையும் கண்டது. திரித்துவக் கல்லூரியின் இரண்டு வீரர்கள் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, சில நிமிடங்களுக்கு திரித்துவக் கல்லூரி 13 வீரர்களுடன் விளையாடியது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட தோமியர் கல்லூரியானது ரோலிங் மோல் மூலமாக ட்ரை வைத்தது. இம்முறை மயோன் ஜயவர்தன தோமியர் கல்லூரிக்கு ட்ரை வைத்தார். (12-14)

10 புள்ளிகள் வித்தியாசத்தில் போட்டி நடைபெற்ற பொழுது இரண்டு அணிகளும் உத்வேகத்துடன் விளையாடின. இறுதியில் திரித்துவக் கல்லூரியே வெற்றியை சுவீகரித்தது. இறுதி நிமிடத்தில் திரித்துவக் கல்லூரியின் அமித் இறுதி ட்ரையை வைத்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். (29-14)

போட்டியில் இரண்டு அணிகளும் பல தவறுகளை செய்வதை காணக்கூடியதாக இருந்தது. இரு அணிகளுக்கும் ட்ரை வைக்க பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும், வீரர்களின் தவறுகளின் காரணமாக அவ்வாய்ப்புகள் நழுவவிடப்பட்டன. இறுதியில் திரித்துவக் கல்லூரி இவ்வருடத்தில் தமது 4ஆவது போட்டியையும் வென்றது.

முழு நேரம்: திருதுவக் கல்லூரி 29 – 14 தோமியர் கல்லூரி

புள்ளிகள் பெற்றோர்

திரித்துவக் கல்லூரி

ட்ரை – அமித் குலதுங்க, அவிஷ்க ஷீக், லஷேன் விஜேசூரிய, நாதன் சான், அகித்  

கொன்வர்சன் –   லஷேன் விஜேசூரிய 2

தோமியர் கல்லூரி

ட்ரை – ஹன்ஸ் வல்பொல, மயோன் ஜயவர்தன  

கொன்வர்சன் – டயோன் டயஸ் 2