தடைப்பட்டிருந்த பாடசாலைகளுக்கு இடையிலான சிங்கர் ரக்பி லீக் தொடரின் போட்டிகள் அனைத்தும் அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் நடைபெறுமென தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டிகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு
கடந்த வாரம் நடைபெற்ற …
சிங்கர் ரக்பி லீக் தொடரின் ஏழாம் வாரப் போட்டிகளின் போது இடம்பெற்றிருந்த கலகலப்பு சம்பவங்களினால், இலங்கை ரக்பி நடுவர்கள் சம்மேளனம் சில பாடசாலை அணிகள் பங்கேற்கும் ரக்பி போட்டிகளுக்கு தங்களது நடுவர்களை அனுப்புவதில்லை என முடிவு செய்திருந்தது. இதனால், பாடசாலைகள் இடையிலான சிங்கர் ரக்பி லீக் தொடரின் போட்டிகள் யாவும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
எனினும், விளையாட்டு அமைச்சின் அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்று முடிந்த கலந்துரையாடல் ஒன்றின் அடிப்படையில் தடைப்பட்ட ரக்பி போட்டிகளை மீள நடாத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த கலந்துரையாடலில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, ரக்பி நடுவர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் என பல தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.
“நாங்கள் (ரக்பி லீக் தொடருக்கான) தடையினை வரும் திங்கட்கிழமை தளர்த்துவோம். எனவே, நடுவர்களுக்கு திங்களில் இருந்து விசில் ஊத முடியுமாக இருப்பதோடு நீங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குரிய வேலைகளை செய்ய முடியும்.“ என குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது ரக்பி போட்டிகளில் பங்கேற்கும் பாடசாலைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியான முறையில் பேண வேண்டும் என வலியுறுத்திக் கூறப்பட்டிருந்தது. இதேவேளை, போட்டிகளில் அசம்பாவித சம்பவங்களோ அல்லது பார்வையாளர்கள் மூலம் இடையூறுகளோ ஏற்பட்டால் அதற்கு போட்டியினை நடாத்தும் பாடசாலையே பொறுப்பாகும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரக்பி நடுவர்கள் சம்மேளனத்துடன் கலந்தாய்வு செய்த பின்னர் பாடசாலை ரக்பி போட்டிகளுக்கு வெளிநாட்டு நடுவர்களை கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் கூறியிருந்தார். இலங்கையில் நடைபெறுகின்ற கழக ரக்பி போட்டிகளுக்கு வெளிநாட்டு நடுவர்கள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
அதோடு அமைச்சர், ரக்பி நடுவர்களுக்கான கொடுப்பனவுகளை போதுமான அளவு வழங்கி அதன் மூலம் அவர்களுக்கு நுட்பரீதியிலான (Technical) உதவிகளை மேலும் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை ரக்பி நடுவர்கள் சம்மேளனத்தின் தலைவரான நிசாம் ஜமால்டீன் இந்த கலந்துரையாடலில் குறிப்பிடும் போது, கடந்த ஆண்டுகளில் ரக்பி நடுவர்கள் பாடசாலை, கழக ரக்பி போட்டிகளுக்கு மத்தியஸ்தம் செய்த காரணத்தினால் அவர்களின் தரம் உயர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
அழைப்பு தொடரின் ஆரம்ப போட்டியில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பலப்பரீட்சை
கொழும்பு சுகததாச உள்ளக…
கடந்த வார கலகலப்புச் சம்பவங்களை புறந்தள்ளிவிட்டு ரக்பி போட்டிகளை இனி வரும் காலங்களில் போதியளவான பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் நடாத்த பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதோடு, போட்டிகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் பார்வையாளர்களினை கைது செய்யும் அதிகாரத்தினையும் அமைச்சர் கலந்துரையாடலின் போது வழங்கியிருந்தார்.
அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கும் இந்த ரக்பி லீக் தொடரில் இசிபதன கல்லூரிக்கும், றோயல் கல்லூரிக்கும் இடையிலான போட்டியும் புனித ஜோசப் கல்லூரிக்கும் பேதுரு கல்லூரிக்கும் இடையிலான போட்டியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. எனினும், இப்போட்டிகள் நடைபெறும் திகதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
பாடசாலை ரக்பி லீக் தொடரின் மேலதிக விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<