இலங்கை ரக்பி ரசிகர்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் சுற்றுப் போட்டி இன்னும் மூன்று வாரங்களில் ஆரம்பமாகவிருந்த நிலையில், அதனை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாதம் 24ஆம் திகதி முதல் இப்பருவகாலத்திற்கான போட்டிகள் ஆரம்பமாக ஏற்பாடாகியிருந்த போதிலும், கடந்த வருடங்கள் போன்று மார்ச் மாதத்தின் இறுதி வாரம் வரை தொடரை பிற்போட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் மூலம் ThePapare.com இற்கு தகவல் கிடைத்துள்ளது.
கழகங்களுக்கிடையில் இடம்பெறவுள்ள க்லிபர்ட் கிண்ண சுற்றுப் போட்டியும் இத்தொடரும் ஒரே காலப்பகுதியில் நடைபெற இருப்பதால் போட்டிகளுக்கான மைதானங்களை ஒதுக்கீடு செய்வதில் குழப்பங்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகின்றது. அத்துடன் இத்தொடரிற்கான அனுசரணையாளர்களை தீர்மானிப்பது தொடர்பிலும் சில பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
வழமையாக பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி பருவகாலத்தின் முதல் சுற்றுப் போட்டியாக அணிக்கு எழுவர் கொண்ட சுற்றுத் தொடர் பெப்ரவரி மாதத்தில் இடம்பெறும். எனினும் இவ்வருடம் லீக் தொடரை முன்கூட்டியே ஆரம்பிக்க முடிவு செய்த பாடசாலைகள் ரக்பி சங்கம், அணிக்கு எழுவர் கொண்ட தொடரை ஒத்திவைத்தது. சர்வதேச மட்ட கனிஷ்ட ரக்பி தொடர்களிற்கு வீரர்களை தயார்படுத்தும் நோக்கத்துடன் இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இக்காலப்பகுதியில் கழக மட்ட ரக்பி போட்டிகள் மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறவுள்ளதால் லீக் தொடரை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பான இறுதி முடிவை இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளது.