வெஸ்லி கல்லூரி எதிர் சயன்ஸ் கல்லூரி
நான்காம் வாரத்திற்கான முதல் போட்டி 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை CR & FC மைதானத்தில் வெஸ்லி கல்லூரி மற்றும் சயன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.
இரண்டு அணிகளும் கடந்த வாரம் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியை சுவீகரித்திருந்தன. சயன்ஸ் கல்லூரி இப்பருவகாலத்திற்கான முதலாவது வெற்றியை கடந்த வாரம் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்திருந்தது. அப்போட்டியில் 11 ட்ரைகள் வைத்து இலகு வெற்றியை பெற்றுக் கொண்ட அவ்வணி, இவ்வாரம் நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளது. இவ்வருடம் முற்றிலும் இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியாக காணப்படும் சயன்ஸ் கல்லூரி, முதற் பிரிவில் (டிவிஷன் 1) பிரபல அணிகளிடமிருந்து கடும் சவாலை எதிர்நோக்கவுள்ளது.
சந்திமாலின் சதத்துடன் மீண்ட இலங்கை : அபார ஆட்டத்தைக் காட்டிய பங்களாதேஷ் ஆரம்ப வீரர்கள்
வெஸ்லி கல்லூரியானது கடந்த வாரம் முற்றிலும் மாறுபட்ட, புத்துணர்ச்சி மிக்க விளையாட்டுப் பாணியை வெளிப்படுத்தி புனித தோமியர் கல்லூரிக்கு அதிர்ச்சியளித்து ஒலிவர் ஈ. குணதிலக கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. தொடரின் முதல் போட்டியில் பெற்றுக் கொண்ட படுதோல்வி, வீரர்களின் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அதனை தொடர்ந்து பயிற்றுவிப்பாளர் ஜீவன் குணதிலகவின் பதவி விலகல் என பல பின்னடைவுகளை சந்தித்திருந்த போதிலும், இரண்டாம் பாதியில் அபார ஆட்டத்தின் மூலம் போட்டிக்குள் மறுபிரவேசம் செய்த வெஸ்லி கல்லூரி அசத்தலான வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
இந்நிலையில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிக்காட்டி வரும் சயன்ஸ் கல்லூரியுடன் வெற்றியை பெறும் எதிர்பார்ப்புடன் வெஸ்லி கல்லூரி விளையாடவுள்ளது.
ஸாஹிரா கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி
இம்முறை முதல் பிரிவிற்கு முன்னேறிய இரு அணிகளான ஸாஹிரா கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஸாஹிரா கல்லூரியின் மைதானத்தில் மோதவுள்ளன.
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக முதற்பிரிவில் விளையாட தகுதி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முன்னணி அணிகளுடன் இடம்பெற்ற போட்டிகளில் திருப்திகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியது. இந்நிலையில் ஸாஹிரா கல்லூரியின் சொந்த மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் அவ்வணி கடும் சவாலை எதிர்நோக்கவுள்ளது.
பிரபல அணிகளான புனித தோமியர் மற்றும் திரித்துவக் கல்லூரி அணிகளுடன் இடம்பெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றியை நெருங்கி வந்த ஸாஹிரா கல்லூரி இப்போட்டியில் சுலபமாக வெற்றியீட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் ஸாஹிரா கல்லூரி மைதானம் அவ்வணியின் ரசிகர்களினால் நிரம்பி வழிகின்ற காரணத்தினால் எதிரணி பலத்த அழுத்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
புனித பேதுரு கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி
18ஆம் திகதி இடம்பெறும் இரண்டாவது போட்டியில் புனித பேதுரு கல்லூரியுடன் இசிபதன கல்லூரி மோதவுள்ளது. இப்போட்டி புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் இடம்பெறும்.
கடந்த வாரம் புள்ளி அட்டவணையில் இறுதி நிலையிலுள்ள டி. எஸ். சேனநாயக்க கல்லூரியுடன் வெற்றியை பெற்றுக் கொண்ட புனித பேதுரு கல்லூரி, இவ்வாரம் குழுவில் முதலிடத்தில் காணப்படும் இசிபதன கல்லூரியுடனான போட்டியில் கடும் சவாலை எதிர்கொள்ளவிருக்கின்றது. இரண்டு போட்டிகளில் புனித பேதுரு கல்லூரி வெற்றி பெற்றுள்ள போதிலும் அவ்வணி சற்று பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
இதேவேளை, ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாது குழு நிலையில் முதலிடத்தில் உள்ள நடப்புச் சம்பியனான இசிபதன கல்லூரி, தனது வெற்றியோட்டத்தை தொடரும் நோக்கில் இப்போட்டிக்குள் பிரவேசிக்கின்றது. அவ்வணியின் பின்வரிசை வீரர்கள் வேகமான ஓட்டம் மற்றும் விவேகமான நகர்வுகள் மூலம் அசத்தி வருகின்ற போதிலும், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இசிபதன கல்லூரியின் தடுப்பாட்டம் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது.
புனித பேதுரு கல்லூரியின் பலமிக்க முன்வரிசை வீரர்களை எதிர்க்கொள்ளும் போது இசிபதன கல்லூரி வீரர்களின் தடுப்பாட்டம் சிறப்பாக காணப்பட வேண்டியது அத்தியவசியமாகும்.
டி. எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர் றோயல் கல்லூரி
இறுதி நேரத்தில் முதற்பிரிவில் விளையாட தகுதி பெற்ற டி. எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர்வரும் 19ஆம் திகதி வெலிசர கடற்படை மைதானத்தில் றோயல் கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளது.
போர்னியோ தொடருக்காக மலேசிய செல்லும் இலங்கை எழுவர் ரக்பி அணி
டி. எஸ். சேனநாயக்க கல்லூரி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியதுடன் மோசமான ஆட்டத்தையே வெளிக்காட்டியிருந்தது. இவ்வாறான ஒரு நிலையில் முன்னேற்றகரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி பிரபல அணிகளுக்கு இணையாக போட்டியிடும் எதிர்பார்ப்புடன் அவ்வணி களமிறங்குகின்றது.
கடந்த வாரம் தர்மராஜ கல்லூரியுடன் இடம்பெற்ற போட்டியில் அணித்தலைவர் ஓவின் அஸ்கி பெற்றுக் கொடுத்த இறுதி நேர ட்ரொப் கோலின் உதவியுடன் வெற்றியை பெற்றுக் கொண்ட றோயல் கல்லூரி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றியை சுவீகரித்து தனது குழுவில் இரண்டாமிடத்தில் உள்ளது. றோயல் கல்லூரி கடந்த போட்டிகளில் விட்ட பிழைகளை சரிசெய்து தமது விளையாட்டுப் பாணியை மேம்படுத்தி அடுத்த வாரம் இசிபதன கல்லூரியுடன் இடம்பெறும் மிக முக்கிய போட்டிக்கு தயார் நிலையில் பிரவேசிக்க இப்போட்டி உதவியாக அமையவுள்ளது.
தர்மராஜ கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி
கடந்து பருவகாலத்தின் போது இவ்விரண்டு அணிகள் மோதிய போட்டி கைகலப்பில் நிறைவடைந்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், மீண்டும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி 19ஆம் திகதி CR & FC மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
புதிய வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் லீக் சம்பியன் ஆகும் கனவுடன் தொடரை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி, முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி ஏமாற்றியது. திறமை மிக்க பல வீரர்களை புனித ஜோசப் கல்லூரி கொண்டுள்ள போதிலும் முழுத்திறமையுடன் விளையாடத் தவறியுள்ள நிலையில் அவ்வணி தொடரின் முதல் வெற்றியினை பதிவு செய்யக் காத்திருக்கின்றது.
எதிரணியை போன்றே தர்மராஜ கல்லூரியும் இறுதி நிமிடம் வரை போராடி வெறும் 3 புள்ளிகளினால் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. தர்மராஜ கல்லூரியானது எதிரணியுடன் ஒப்பிடுகையில் பலமிக்க முன்வரிசை வீரர்களை கொண்டுள்ளது. இரண்டு அணிகளும் இப்போட்டியில் வெற்றியை பெற்று குழுவின் முதல் நான்கு இடங்களில் ஒன்றினை கைப்பற்றும் நோக்குடன் போட்டிக்குள் பிரவேசிக்கின்றன.
இறுதி நிமிடத்தில் தர்மராஜ கல்லூரியை வெற்றி கொண்ட றோயல் கல்லூரி
புனித தோமியர் கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி
புனித தோமியர் கல்லூரி மற்றும் திரித்துவக் கல்லூரி அணிகள் மோதும் கெனன் டி சேரம் கிண்ணத்திற்கான போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி CR&FC மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.
கடந்த வாரம் வெற்றி பெறும் நோக்குடன் வெஸ்லி கல்லூரியை எதிர்கொண்ட புனித தோமியர் கல்லூரி, இரண்டாம் பாதியில் ஒரு புள்ளியேனும் பெற இயலாத நிலையில் அதிர்ச்சித் தோல்வியை தழுவியது. தற்போது குழுவின் இரண்டாவது இடத்தில் காணப்படும் அவ்வணி கெனன் டி சேரம் கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இப்பருவகாலத்தில் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்ற திரித்துவக் கல்லூரி கடந்த வாரம் ஸாஹிரா கல்லூரியுடனான போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்டிருந்தது. கடந்த மூன்று போட்டிகளை போன்றே இப்போட்டியும் கொழும்பில் நடைபெறுகின்ற போதிலும், திரித்துவக் கல்லூரியே வலுமிக்க அணியாக காணப்படுகின்றது. தாக்குதல் ஆட்டத்தில் தலைசிறந்து காணப்படும் அவ்வணி தடுப்பாட்டத்தில் மேலும் முன்னேற வேண்டியுள்ளது.
லீக் தொடரின் முதல் சுற்று இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில், போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாடசாலை லீக் தொடரின் போட்டி விபரங்கள் மற்றும் உடனடி செய்திகளுக்காக தொடர்ந்தும் ThePapare.com உடன் இணைந்திருங்கள்.