சிங்கர் நிறுவன அனுசரணையில் இடம்பெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அகில இலங்கை ரீதியான பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடரில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரி அணிக்கு எதிராக யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லுரி இன்னிங்ஸ் மற்றும் 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பிரிவு 2 இல் சி குழுவுக்காக இடம்பெற்ற இந்த போட்டியில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரியும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியும் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தின.
நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பை தீர்மானித்த சென் ஜோன்ஸ் அணிக்கு கைமேல் பலன் கிடைத்தது. எதிரணி சுதாகரிப்பதற்குள் சென் ஜோன்ஸ் அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் விதுஷனின் 5 விக்கெட் மற்றும் இளம் வீரர் அன்ரன் அபிஷேக்கின் 4 விக்கெட் பெறுதிகளின் உதவியோடு சென் தோமஸ் கல்லூரியை 29.4 ஓவர்களில் வெறும் 29 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது சென் ஜோன்ஸ் கல்லூரி அணி.
பதிலளித்து ஆடத்தொடங்கிய சென் ஜோன்ஸ் அணிக்காக கரிசன் அரைசதம் கடந்து 60 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, சுகேதன் மற்றும் சௌமியன் முறையே 21 , 20 ஓட்டங்களை பெற்றனர்.
இதனால், 56.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களை பெற்றது சென் ஜோன்ஸ் கல்லூரி அணி.
சென் தோமஸ் கல்லூரி அணி சார்பில் இனுக ஏக்கநாயக்க மற்றும் விதாரு சுபசிங்க ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸ்சை சென் தோமஸ் கல்லூரி அணி சற்று கவனமாகவும் பொறுப்புடனும் ஆடினாலும் விதுஷனின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 127 ஓட்டங்களுக்குள் தமது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 19 ஓட்ட்ங்களால் தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக லக்ஷான் 33 ஓட்டங்களையும் கவிந்து மற்றும் நிக்ஷரா விஜயசிங்க ஆகியோர் தலா 21 ஓட்டங்களைையும் பெற்றனர். சென் ஜோன்ஸ் கல்லூரி சார்பில் இந்த இன்னிங்சிலும் விதுஷன் 5 விக்கெட் பெறுதியை பெற்றுக்கொள்ள அன்ரன் சரான் 2 விக்கெட்டுகளை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
போட்டியின் சுருக்கம்
சென் தோமஸ் (முதலாவது இன்னிங்ஸ்) 29 (29.4) – யோகதாஸ் விதுஷன் 5/08, அன்ரன் அபிஷேக் 4/08
சென் ஜோன்ஸ் (முதலாவது இன்னிங்ஸ்) 175 (56.3 ) – கரிசன் 60, சுகேதன் 21, சௌமியன் 20, இனுக எக்கநாயக்க 4/25, விதாரு சுபசிங்க 4/55
சென் தோமஸ் (இரண்டாவது இன்னிங்ஸ்) 127 (72.5 ) – ரவிஷ்க லக்ஷான் 33, கவிந்து சேனாரத்ன 21, நிக்ஷரா விஜயசிங்க 21, யோகதாஸ் விதுஷன் 5/44, அன்ரன் சரான் 2/26
முடிவு: சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 19 ஓட்ட்ங்களால் வெற்றி