தியகம உத்தேச கிரிக்கெட் மைதான நிர்மாணத்தை இடைநிறுத்தி, அந்த நிதியை பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்திக்கு பயன்படுத்துமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஹோமாகம – தியகமவில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச கிரிக்கெட் மைதானம் தொடர்பாக இலங்கையின் முன்னாள், இந்நாள் சிரேஷ்ட வீரர்கள் சிலருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (21) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார்.
இலங்கையின் பெரிய கிரிக்கெட் மைதானம் ஹோமாகமவில்
அலரி மாளிகையில் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹநாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, சனத் ஜயசூரிய மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பேசிய இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, இலங்கையில் மற்றுமொரு புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்று நிர்மாணிக்க தேவையில்லை என்பதை உறுதியாக தெரியப்படுத்தியதுடன், இலங்கை கிரிக்கெட்டின் அண்மைக்கால பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்ள இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு தேவையான பல்வேறு விடயங்களை முன்வைத்தார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக கடந்த வருடம் மிகப் பெரிய வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்தோம். மத்திய மாகாணத்தில் கிரிக்கெட் விளையாடுகின்ற 50 பாடசாலைகள் உள்ளன. அங்கு புற்தரை கொண்ட நான்கு ஆடுகளங்கள் தான் உள்ளன.
மேல் மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 169 கிரிக்கெட் விளையாடுகின்ற பாடசாலைகள் உள்ளன. அதில் புற்தரை ஆடுகளங்கள் கொண்ட பாடசாலைகள் 18 மாத்திரம் உள்ளன. சில பாடசாலைகளுக்கு மைதானம் உண்டு. ஆனால் செயற்கை ஆடுகளங்களில் தான் அந்த மாணவர்கள் விளையாடுகின்றனர். புற்தரை மைதானம் கிடையாது.
வட மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 26 பாடசாலைகள் கிரிக்கெட் விளையாடினாலும், ஒரேயொரு ஆடுகளம் தான் அங்கு புற்தரை கொண்டதாக உள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் எந்தவொரு பாடசாலையிலும் கிரிக்கெட் ஆடுகளங்கள் இல்லை.
இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அணிக்காக அதிக வீரர்களை உருவாக்கிய வட மத்திய மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 41 பாடசாலைகளில் 3 ஆடுகளங்கள் மாத்திரமே புற்தரை கொண்டதாக உள்ளன. தென் மாகாணத்தில் 50 பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாடப்படுகின்றது. ஆனால் புற்தரையுடன் 2 ஆடுகளங்கள் மாத்திரமே உள்ளன.
ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட்
இதனிடையே இலங்கையில் தேசிய கிரிக்கெட்டிற்கு அடுத்த படியாக ஆடப்படுகின்ற பிரதான பிரிவாக முதல்தர கழகங்களுக்கு இடையிலான தொடர்கள் இருக்கின்றன. எனவே, இலங்கையின் முதல்தர கழகங்கள் பற்றிய பேசிய மஹேல ஜயவர்தன,
”உண்மையில் இலங்கையில் உள்ள முதல்தர கழகங்களில் 9 கழகங்களுக்கு தமக்கென்ற மைதானம் கிடையாது. எமது கழகங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டியில் 2 கழகங்கள் மாத்திரம் தான் சர்வதேச தரத்திலான ஆடுகளங்களைக் கொண்ட மைதானங்களில் விளையாடுகின்றன.
அதில் ஒன்று எஸ்.எஸ்.சி மைதானம். மற்றையது பி சரா ஓவல் மைதானம். மற்றைய அணிகள் எல்லாம் தம்முடைய சொந்த மைதானத்தில் விளையாடுகின்றனர்.
எனவே, அந்த கழகங்களில் விளையாடுகின்ற வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் கிடைப்பதில்லை. சூரியவௌ, பல்லேகல, தம்புள்ளை, பிரேமதாஸ ஆகிய மைதானங்களில் எந்தவொரு கழகமட்ட போட்டிகளிலும் விளையாடுவதில்லை.
எனவே, எமது கிரிக்கெட் விளையாட்டில் மிகப் பெரிய பிரச்சினை உண்டு. முதலில் நாங்கள் அதுபற்றி சிந்திக்க வேண்டும். உண்மையில் நாங்கள் எதற்காக பணத்தை ஒதுக்குகிறாம் என்பது பற்றி பார்க்க வேண்டும்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான தனது ஆலோசனையை வழங்கிய மஹேல, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாடசாலை கிரிக்கெட்டில் இருந்து தான் அதிக வீரர்கள் வந்தார்கள். எனவே, கடந்த 10 முதல் 15 வருடங்களாக நாங்கள் பாடசாலை கிரிக்கெட் தொடர்பில் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
உண்மையில் நாங்கள் ஆடுகளங்களை திறமையான வீரர்கள் இருக்கின்ற அவ்வாறான பகுதிகளில் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 15 வருடங்களில் பிற மாவட்டங்களில் இருந்து தான் தேசிய அணிக்காக அதிக வீரர்கள் உருவாகியுள்ளார்கள். கொழும்பில் இருந்து அல்ல. எனவே, நாங்கள் இன்னமும் வெளி மாவட்டங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கவில்லை.
அத்துடன், யுத்தம் நிறைவடைந்த பிறகும் கவனிப்பாரற்று உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை கிரிக்கெட் விளையாட்டின் வீழ்ச்சிக்கான காரணத்தையும் மஹேல எடுத்துரைத்தார்.
யுத்தத்துக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை எடுத்துக் கொண்டால் அந்தப் பகுதியில் பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. உண்மையில் அந்தப் பகுதிகளில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர்.
நாங்கள் ஐ.சி.சியிடம் இருந்து 40 மில்லியன் டொலர்கள் கடனைப் பெற்று 3 அல்லது 4 வீத வட்டியுடன் அதன் தவணைக் கொடுப்பனவாக 3.5 பில்லியன் ரூபா வீதம் 15 வருடங்களுக்கு செலுத்துவதற்கு பதிலாக, அந்த நிதியில் கிரிக்கெட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தியை திட்டமிடுவது சிறந்தது.
எனவே அந்தப் பணத்தை நாங்கள் எமது பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியுமானால் நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சிறந்த முதலீடு ஆக இருக்கும்.
இதனால் சிறந்த கிரிக்கெட் வீரர்களை எம்மால் உருவாக்க முடியும். கிரிக்கெட் அணியொன்றை உருவாக்குவதென்பது ஒரு Brand ஒன்று. தற்போது எம்மிடம் அந்த Brand இல்லை.
புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னாள் நட்சத்திரங்கள்
அவ்வாறு Brand இல்லாமல் போனால் தொலைக்காட்சி உரிமத்தின் மூலம் கிடைக்கின்ற வருமானம் குறையும். தோலைக்காட்சி உரிமத்தினால் மிகப் பெரிய வருமானம் கிடைப்பதில்லை.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் காரணமாக கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு நிலையில் நாம் அடுத்த கட்டமாக எதனை செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவித்த மஹேல,
கொவிட் வைரஸுடன் எதிர்வரும் 3 வருடங்களுக்கு அனுசரணையாளர்கள் கிடைப்பது மிகவும் குறைந்து விடும். ஐ.சி.சியும் அதன் ஊழியர்களின் கொடுப்பனவுகளை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகின.
புதிய மைதானம் அமைப்பதற்கான திட்டம் இடைநிறுத்தம்!
எனவே, வீரர்களை உருவாக்கவே நாங்கள் பணத்தை செலவிட வேண்டும். இதுபோன்ற தருணத்தில் இந்தளவு தொகையை செலவழித்து சர்வதேச மைதானத்தை நிர்மாணிப்பது பொருத்தமானதல்ல” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டுடன் தொடர்புடையவர்களின் யோசனைகளை கருத்திற்கொண்டு தியகம மைதானத்தை நிர்மாணிப்பதற்கு பதிலாக பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை விருத்தி செய்யவும், தற்போதைக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய மைதானங்களின் வசதிகளை மேம்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தீர்மானிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<