வருடாந்த சமரில் திஸ்ஸ மத்திய கல்லூரியை தோற்கடித்த களுத்துறை வித்தியாலயம்

153

கிரிக்கெட்டின் பித்துக்காலமான மார்ச் மாதத்தினை அலங்கரிக்கும் பிரபல பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் இரண்டு இன்று (30) நிறைவுக்கு வந்தது.

களுத்துறை வித்தியாலயம் எதிர் திஸ்ஸ மத்திய கல்லூரி

மெங்குஸ்டீன்களின் சமர் (Battle of the Mangoosteen) என அழைக்கப்படும் திஸ்ஸ மத்திய கல்லூரி மற்றும் களுத்துறை வித்தியாலயம் இடையிலான வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் களுத்துறை வித்தியாலயம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

>>போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட…

மக்கொனவில் 61 ஆவது முறையாக ஆரம்பமான இரண்டு நாட்கள் கொண்ட இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பாடிய திஸ்ஸ மத்திய கல்லூரி அணியினர் 145 ஓட்டங்களை மட்டுமே முதல் இன்னிங்ஸில் பெற்றுக் கொண்டனர். இதேநேரம், களுத்துறை வித்தியாலயம் சார்பில் கவிந்து ஜயவிக்ரம 5 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய களுத்துறை வித்தியாலய அணியினர் 161 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். களுத்துறை அணியின் துடுப்பாட்டத்தில் கிரிஷான் விராங்க அரைச்சதம் (50) பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து 16 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பம் செய்த திஸ்ஸ மத்திய கல்லூரி அணி 126 ஓட்டங்களுடன் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. திஸ்ஸ மத்திய கல்லூரி அணியை இரண்டாம் இன்னிங்ஸில் குறைவான ஓட்டங்களுக்குள் மடக்க உதவிய விஷ்மிக்க கோஸ்டா, களுத்துறை வித்தியாலயத்திற்காக 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

தொடர்ந்து  திஸ்ஸ மத்திய கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸின் அடிப்படையில் போட்டியின் வெற்றி இலக்காக 111 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய களுத்துறை வித்தியாலய அணி குறித்த வெற்றி இலக்கை 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களுடன் அடைந்தது. களுத்துறை வித்தியாலய அணியின் வெற்றி, விவிந்து சில்வா ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்ட அரைச்சதத்தோடு (57) உறுதி செய்யப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

திஸ்ஸ மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 145 (47) – கோசல ரவிந்து 47, கவிந்து ஜயவிக்ரம 5/51

களுத்துறை வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 161 (48.3) – கிரிஷான் விரங்க 50, ரொஹான் சஞ்சய 4/44

திஸ்ஸ மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 126 (35) – எரந்த தேவ்மித் 33, விஷ்மிக்க கோஸ்டா 4/15

களுத்துறை வித்தியாலயம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 114/5 (28.1) – விவிந்து சில்வா 57*, ஹேஷான் துமின்த 2/20

முடிவு – களுத்துறை வித்தியாலயம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி


டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி எதிர் மஹாநாம கல்லூரி

தங்கங்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி மற்றும் மஹநாம கல்லூரிகளுக்கு இடையிலான இந்த வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி சமநிலை அடைந்தது.

Photo Album: D.S. Senanayake College vs Mahanama College | 13th Battle of the Golds – Day 1

வெள்ளிக்கிழமை (29) கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் 13 ஆவது தடவையாக ஆரம்பமான இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மஹநாம கல்லூரி அணி, முதலில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி வீரர்களை துடுப்பாட பணித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸினை 244 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது நிறுத்திக் கொண்டனர்.  டி.எஸ். சேனநாயக்க அணியின் துடுப்பாட்டத்தில் ஷனேல் பாஸ்கரன் (66) மற்றும் சந்தரு விக்ரமரத்ன (56) ஆகியோர் அரைச்சதங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த மஹநாம கல்லூரி அணி 196 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தவாறு தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. மஹநாம கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் பவந்த வீரசிங்க 46 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Photo Album: D.S. Senanayake College vs Mahanama College | 13th Battle of the Golds – Day 2

இதனை அடுத்து 48 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த டி.எஸ். சேனநாயக்க கல்லூரி அணி 90 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்த போது இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது. டி.எஸ். சேனநாயக்க அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் கடந்த அமித தாபரே 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 244/9d (84.2) – ஷனேல் பாஸ்கரன் 66, சந்தரு விக்கிரமரத்ன 56, மஹிந்திர ஜயத்திலக்க 38, லஹிரு விதான 3/52

மஹநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 196/9d (82.3) – பவந்த வீரசிங்க 46, சொனால் கமகே 40, பசிந்து ஆதித்ய 3/45

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி – 90/1 (19.3) – அமித தாபரே 50*, அபிஷேக் லியனாரச்சி 30

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<