இலங்கை அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு

498

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மூன்று மாதங்களில் மூன்று வெவ்வேறு அணிகளுடன் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

ஏப்ரல் மாதத்துக்கான ICC இன் சிறந்த வீரரானார் பாபர் அசாம்

இதில் முதல் தொடராக பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ள இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அமைகின்றது. 

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினுடைய (ஐ.சி.சி) ஒருநாள் சுபர் லீக்கினுடைய அங்கமாக அமைகின்ற இந்த தொடருக்காக குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி இம்மாத நடுப்பகுதியில் பங்களாதேஷ் பயணமாகின்றது.

இந்த ஒருநாள் தொடரின் பின்னர், இலங்கை வீரர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி இங்கிலாந்து மண்ணுக்கு பயணம் செய்து அங்கே அந்த நாட்டு அணியுடன் T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவிருக்கின்றனர். தலா மூன்று போட்டிகள் வீதம் அடங்குகின்ற இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது நடைபெறவுள்ள T20 போட்டிகளை இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. இன் T20 உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தலாக இரு அணிகளும் நோக்க, ஒருநாள் போட்டிகள் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கினுள் உள்ளடங்குகின்றன. 

அனுப வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கை தேர்வுக்குழு

இதனை அடுத்து தாயகம் வரும் இலங்கை கிரிக்கெட் அணி இந்திய வீரர்களுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை – இந்திய அணிகள் இடையிலான போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவிருப்பதோடு, இலங்கை – இந்திய அணிகள் இடையிலான போட்டிகளே அந்த மைதானத்தின் திருத்த வேலைகளினை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் சர்வதேசப் போட்டிகளாக அமைகின்றன. 

இந்திய அணிக்கு எதிரான சுற்றுத் தொடரினை அடுத்து இரண்டாம் பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தொடரின் திகதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

அதோடு, இலங்கை – இந்தியா ஆகிய நாடுகளிடையேயான கிரிக்கெட் போட்டிகளின் போது 50% பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்படுகின்றன. எனினும், உறுதியான முடிவுகள் கொவிட்-19 வைரஸ் தொடர்பான நிலைமைகளைக் கருத்திற்கொண்டே எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

சுற்றுத் தொடர் விபரங்கள்

இலங்கை எதிர் பங்களாதேஷ்

முதல் ஒருநாள் போட்டி – மே 23 – மிர்பூர், டாக்கா

இரண்டாவது ஒருநாள் போட்டி – மே 25 – மிர்பூர், டாக்கா 

மூன்றாவது ஒருநாள் போட்டி – மே 28 – மிர்பூர், டாக்கா

இலங்கை எதிர் இங்கிலாந்து 

முதல் T20 போட்டி – ஜூன் 23 – கார்டிப்

இரண்டாவது T20 போட்டி – ஜூன் 24 – கார்டிப் 

மூன்றாவது T20 போட்டி – ஜூன் 26 – சௌத்தம்ப்டன்

முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 29 – டேர்கம்

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 1 – லன்டன்

மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை 4 – ப்ரிஸ்டோல்

இலங்கை எதிர் இந்தியா 

முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 13 – கொழும்பு

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 16 – கொழும்பு

மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை 19 – கொழும்பு

முதல் T20 போட்டி – ஜூலை 22 – கொழும்பு

இரண்டாவது T20 போட்டி – ஜூலை 24 – கொழும்பு

மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை 27 – கொழும்பு

*இலங்கை – இந்திய அணிகள் இடையிலான போட்டி அட்டவணை தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…