ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையபடவுள்ளது என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஐசிசி இன் ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள இந்த தொடரானது அடுத்த மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளும் கண்டி-பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> நாடு திரும்பும் டில்ஷான்; இலங்கை அணியில் இணையும் பினுர
முன்னதாக இந்தப் போட்டித் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடத்தத் திட்டமிடப்பட்டாலும், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் திருத்தம் செய்யப்பட்ட புதிய போட்டி அட்டவணைக்கு அமைய, இரு நாட்டு கிரிக்கெட் சபைகளின் இணக்கத்துடன் அடுத்த மாதம் தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்படதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை 4 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இதில் 3 போட்டிகளில் இலங்கையும், ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. அத்துடன், இரண்டு அணிகளும் இறுதியாக கடந்த 2019 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணி, நவம்பர் 22ஆம் திகதி நாட்டை வந்தடையும்.
போட்டி அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி – நவம்பர் 25
- 2வது ஒருநாள் போட்டி – நவம்பர் 27
- 3வது ஒருநாள் போட்டி – நவம்பர் 30
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<