டுபாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை அணுகிய சூதாட்ட தரகர்கள்

542

கிரிக்கெட் உலகில் சூதாட்ட சர்ச்சையுடன் மிகவும் நெருங்கிய அணியாக பாகிஸ்தான் அணி விளங்குகின்றது. 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது சூதாட்ட விவகாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முக்கிய 3 வீரர்களுக்கு (சல்மான் பட், மொஹமட் ஆசிப், மொஹமட் ஆமிர்) 5 வருடப் போட்டித்தடையும், சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

அத்துடன் அதே ஆண்டு இங்கிலாந்தின் கவுண்டி அணியுடனான போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுழல் பந்துவீச்சாளர் தனீஷ் கனேரியாவுக்கு வாழ்நாள் போட்டித் தடையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இவ்வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் போதும் சூதாட்டத்தில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டு 6 வீரர்கள் மீது போட்டித் தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. இதில் சர்ஜீல் கான் மற்றும் காலித் லத்தீபுக்கு 5 வருட போட்டித் தடையும், மொஹமட் இர்பானுக்கு 6 மாதமும், மொஹமட் நவாஸுக்கு 2 மாதமும் போட்டித் தடை விதிக்கப்பட்டது.

எனினும், 2000ஆம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சலிம் மலிக் மற்றும் அதாவுர் ரஹ்மான் ஆகிய வீரர்களுக்கு வாழ்நாள் தடையும், வசீம் அக்ரம், யூனிஸ் கான், இன்சமாம் உல் ஹக், முஸ்தாக் அஹ்மட், சயீட் அன்வர் மற்றும் அக்ரம் ராசா ஆகிய வீரர்களுக்கு அபராதமும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவருகின்ற ஒரு நாள் தொடரில் ஆட்ட நிர்ணய சதியொன்று இடம்பெற்றுள்ளமை கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BPL தொடரில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள மாலிங்க

ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர…

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் கடந்த 17ஆம் திகதியன்று அதாவது 3ஆவது ஒருநாள் போட்டி நடைபெறுவதற்கு முன்னர், குறித்த ஆட்ட நிர்ணயம் நடத்தப்படவிருந்தது அம்பலமாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4 போட்டிகளில் வென்று பாகிஸ்தான் அணி 4-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. இத்தொடரில் இன்னுமொரு போட்டி மீதமிருக்க தன்னை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகியதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை உலுக்கியுள்ளது.

இந்நிலையில், தம்மைச் சந்தித்த ஒருவர், தன்னுடன் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறும், அதற்காகப் பெருந்தொகைப் பணத்தை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் கூறியதாக, பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தாம் உடனடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் அறிவித்ததாகவும் சர்பராஸ் கூறியுள்ளார்.

இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் சபை முன் ஆஜரான சர்பராஸ், மேற்படி சம்பவம் குறித்து வாக்குமூலம் ஒன்றையும் அளித்துள்ளார். இவ்வாக்குமூலத்தில் குறித்த சூதாட்ட தரகரை எவ்வளவு காலம் தெரியும்? குறித்த நபரிடமிருந்து இதற்கு முன்னரும் பணம் எடுத்திருக்கின்றீர்களா? அத்துடன் ஏதாவது பரிசுப் பொருட்களையும் வாங்கியது உண்டா?  போன்ற முக்கிய கேள்விகள் சர்பராஸிடம் வினவப்பட்டுள்ளது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,

”நான் என் குடும்பத்தினருடன் டுபாயைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது ஒரு வர்த்தக நிலையத்தில், முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவர் என்னை அணுகினார். கிரிக்கெட் ரசிகராக இருக்கலாம் என்றும், என்னிடம் கையெழுத்து வாங்கவோ, ‘செல்ஃபி’ (Selfie) எடுத்துக்கொள்ளவோ விரும்புகிறார் என்று நானும் அவருடன் பேசினேன்.

அப்போது அவர், அடுத்த போட்டியில் (மூன்றாவது போட்டியில்) ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட நான் தயாரா என்றும், தயார் என்றால் பெருந்தொகைப் பணத்தைப் பெறலாம் என்றும் ஆசை காட்டினார்.

ஆனால் அதைக் கடுமையாக மறுத்த நான், உடனடியாக அது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். இதனையடுத்து, எனக்கும் எனது அணியினருக்குமான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சர்பராஸை அணுகிய குறித்த நபர், பாகிஸ்தான் கிரிக்கெட்டுடன் மிகவும் நெருங்கிய, டுபாயில் வசித்து வருகின்ற அஸ்ரப் அன்சாரி என ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கராச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த நபர், சார்ஜாஹ் கிரிக்கெட் மைதானத்தில் கடமை புரிகின்ற ஊழியர் என்றும் தெரியவந்துள்ளது.

BPL தொடரில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள மாலிங்க

ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர …

இதேவேளை, பாகிஸ்தான் வீரரொருவரை சூதாட்ட தரகரொருவர் அணுகியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,

விளையாட்டை ஊழலாக்க நினைக்கும் முயற்சிகளை எப்படித் தவிர்க்க வேண்டும் என்று ஒரு தலைவராகவும், வீரராகவும் அணியில் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக அவர் இருந்துள்ளார். இந்த விடயம் சரியான முறைப்படி கையாளப்பட்டுள்ளது. சர்பராஸுக்கு அதிக மரியாதை கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐ.சி.சி இன் ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் அறிவிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நேற்று முதல் இதற்கான விசாரணைகளை ஐ.சி.சி ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரின் வற்புறுத்தலின் பெயரில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் பங்குபெறும் வீரர்களுக்கான விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டிருந்தன. நண்பர்களை சந்திக்கவும், பொருட்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வெளியே சாப்பிடப் போகவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சம்பவத்தால் விதிமுறைகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபடுவது மற்றும் சூதாட்ட தரகர்களினால் வீரரொருவர் அணுகப்படும் போது அதனை வெளிப்படுத்த தவறும் பட்சத்தில் குறைந்தது 6 மாத போட்டித்தடை அல்லது வாழ்நாள் தடை விதிக்கவும் ஐ.சி.சி விதிமுறைகளில் சட்டங்கள் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.