ஹரிஸ் சொஹைலின் இன்னிங்ஸே பாகிஸ்தான் வெற்றியின் திருப்புமுனை

202
©Getty image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (23) நடைபெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு ஹரிஸ் சொஹைலின் இன்னிங்ஸ் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியதாக தெரிவித்த பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட், ஹரிஸின் துடுப்பாட்டத்தை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லருடன் ஒப்பிட்டார்.  

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 30……..

தென்னாபிரிக்காவை 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்களை எடுத்தது. துடுப்பாட்டத்தில் ஹரிஸ் சொஹைல் ஒன்பது பௌண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 59 பந்துகளில் 89 ஓட்டங்களைக் குவித்தார். பின்னர் விளையாடிய தென்னாபிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில் வெறும் 8 ஓட்டங்களை எடுத்த ஹரிஸ் சொஹைலுக்கு அதன்பிறகு நடைபெற்ற லீக் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, தென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மீண்டும் களமிறங்கி அரைச் சதம் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஹரிஸ் சொஹைலின் இன்னிங்ஸை போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து சர்பராஸ் அஹமட் பாராட்டியிருந்தார்.

அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், எமது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பானதொரு தொடக்கத்தைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் சிறப்பாக விளையாடியிருந்தனர். அதன்பிறகு பாபர் அசாமும் தனது பங்கிற்கு ஓட்டங்களைக் குவித்தார்.

அதேபோல, ஹரிஸ் சொஹைலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு ஹரிஸ் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். இந்தப் போட்டியில் வெற்றிபெற அவர் தான் முக்கிய காரணியாக இருந்ததுடன், அவருடைய இன்னிங்ஸ் தான் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.

உண்மையில் கடைசி 15 ஓவர்களில் அவர் துடுப்பெடுத்தாடிய விதம், அது இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லரைப் போன்றது” என தெரிவித்தார்.  

இம்முறை உலகக் கிண்ணத்தில், பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை பல போட்டிகளுக்கும் தமது முதல் பதினொருவரில் மாற்றங்களை ஏற்படுத்தியே விளையாடியது. எனினும், இந்த முடிவு தமக்கு சாதகமாக இருந்தது என்றே சர்பராஸ் குறிப்பிட்டார்.

”இந்தப் போட்டியில் நாங்கள் அணித் தேர்வில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தோம். இந்தியாவுடனான போட்டியிலும் நாங்கள் மற்றொரு மாற்றத்துடன் தான் களமிறங்கினோம். எனவே, சில நேரங்களில் மாற்றம் என்பது அணிக்கு சாதகத்தைக் கொடுக்கும்.

இந்த வெற்றியை உற்சாக மருந்தாக கொண்டு இலங்கை முன்னேற வேண்டும் – சங்கக்கார

லீட்ஸ் நகரில் நேற்று (21) இடம்பெற்று ……….

போட்டியின் ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹமட் அமீர் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய இருவருக்கும் அனைத்து பாராட்டுக்களும் சென்றடைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதன்பின்னர் நடுத்தர ஓவர்களில் சதாப் கான் மிகவும் நன்றாக பந்துவீசியிருந்தார்என்றார்.

இதுஇவ்வாறிருக்க, நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் 5 பிடியெடுப்புகளை தவறவிட்டது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட சர்பராஸ், தனது அணியின் களத்தடுப்பு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டார்.

”நாங்கள் களத்தடுப்பில் கடினமாக உழைக்க வேண்டும். நாங்கள் பல தடவை பிடியெடுப்புகளை தவறவிட்டோம். எனவே, எஞ்சியுள்ள மூன்று போட்டிகளும் மிக முக்கியமானவை. நாங்கள் அந்தப் போட்டிக்கு முன் எமது களத்தடுப்பை சரிசய்ய வேண்டும்” என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி ஐந்து புள்ளிகளுடன் இம்முறை உலகக் கிண்ண தரப்படுத்தலில் ஏழாவது இடத்தில் உள்ளது, எனவே அந்த அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்ய நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடனான லீக் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<