உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கலப் பிரிவின் கீழ் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ATLETICAGENEVE – EAP 2022 சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை சாரங்கி சில்வா தங்கப் பதக்கம் வென்றார்.
நேற்று (11) நடைபெற்ற இப்போட்டியில் சிலி நாட்டு வீராங்கனை முனோஸ் ரோசியாவுக்கு கடைசி சுற்று வரை பலத்த போட்டியைக் கொடுத்த சாரங்கி, 6.33 மீட்டர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றார்.
உலக மெய்வல்லுனர் தரப்படுத்தலில் இது ‘C’ பிரிவு போட்டி என்பதால் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்ட அவருக்கு 60 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022 உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறுவதற்கு 1157 இலிருந்து 1170 வரை புள்ளிகளை அதிகரித்துக் கொண்டுள்ளார்.
மேலும், பெண்களுக்கான நீளம் பாய்தல் உலக தரவரிசையில் 38ஆவது இடத்தில் இருந்த சாரங்கி, இந்தப் போட்டியின் மூலம் பெற்றுக்கொண்ட புள்ளிகள் மூலம் முதல் 32 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
சர்வதேச மெய்வல்லுனர் தொடர்களில் இலங்கை வீரர்கள்
எவ்வாறாயினும், ஜூன் 14ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் பேர்னில் நடைபெறவுள்ள மற்றுமொரு சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் களமிறங்கவுள்ள சாரங்கி சில்வா, இதைவிட அதிகளவு திறமையை வெளிப்படுத்தினால் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை இன்னும் அதிகரித்துக் கொள்வார்.
இதேவேளை, ஜெனீவாவில் நடைபெற்ற ATLETICAGENEVE – EAP 2022 சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பில் மேலும் 3 வீரர்கள் களமிறங்கியிருந்தனர். எனினும், அவர்களால் எந்தவொரு பதக்கத்தையும் வெற்றி கொள்ள முடியாமல் போனது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட சுமேத ரணசிங்க 70.21 மீட்டர் தூரம் எறிந்து 4ஆவது இடத்தைப் பிடித்தார். எவ்வாறாயினும், இந்த செயல்திறன் சுமேத ரணசிங்கவின் தரவரிசையில் எந்தவொரு மாற்றத்தையும் கொடுக்காது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் தற்போது 30ஆவது இடத்தில் உள்ள சுமேதவுக்கு உலக சம்பயின்ஷிப்பிற்கான இடத்தை உறுதிப்படுத்துவதற்கு 83.04 மீட்டர் ஆக காணப்படுகின்ற அவரது தனிப்பட்ட சிறந்த பெறுபேறையாவது பெற்றுக்கொள்ள கட்டாயத்தில் உள்ளார்.
இதனிடையே, ஆண்களுக்கான 400 மீட்டர் தேசிய சம்பியனான காலிங்க குமாரகே 46.42 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 6வது இடத்தையும், பெண்களுக்கான 800 மீட்டர் தேசிய சம்பியனான கயந்திகா அபேரட்ன 2 நிமிடங்கள் 03.62 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 9ஆவது இடத்தைப் பிடித்தார்.
இதேவேளை, இந்த நான்கு வீரர்களும் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கலப் பிரிவின் கீழ் இடம்பெறுகின்ற மற்றுமொரு சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<