பெண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கை சாதனையை முறியடித்தார் சாரங்கி

409

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் இராணுவ வீராங்கனை சாரங்கி சில்வா பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.65 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய இலங்கை சாதனை படைத்தார்.

குறித்த போட்டியின் முதல் முயற்சியில் 6.53 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து தனது சொந்த இலங்கை சாதனையை முறியடித்த அவர், மூன்றாவது முயற்சியில் 6.65 மீட்டர் தூரம் பாய்ந்து மீண்டும் ஒருதடவை இலங்கை சாதனையை முறியடித்து அசத்தினார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சம்பியனான இவர், இறுதியாக கடந்த ஆண்டு துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் 6.44 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

எனவே கடந்த 2 ஆண்டு காலப்பகுதியில் மூன்று தடவைகள் அவர் இலங்கை சாதனையை முறியடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, குறித்த போட்டியில் 6.15 மீட்டர் தூரம் பாய்ந்து அன்ஞானி புலவன்ச  இரண்டாவது இடத்தையும், 6.02 மீட்டர் தூரம் பாய்ந்து ரித்மா நிஷாதி அபேரட்ன மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட வீரர்களுக்கான இந்த ஆண்டின் முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் இன்று (12) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்களை இலக்காhக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தகுதிகாண் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் சச்சினி பெரேரா பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலிலும், சாரங்கி சில்வா பெண்களுக்கான நீளம் பாய்தலிலும் இலங்கை சாதனைகளை நிகழ்த்தினர்.

அதேபோல, கனிஷ்ட பிரிவில் ஹிரூஷ ஹஷேன் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கை சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Photos – Asian Games First Trials & Juniors Trials – Day 2

இதேவேளை, கனிஷ்ட பிரிவில் போட்டியிட்டு முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட ஹிரூஷ ஹஷேன் (நீளம் பாய்தல்), கவீஷ பண்டார (110 மீட்டர் சட்டவேலி ஓட்டம்), தனுக தர்ஷன (400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டம்) மற்றும் பசிந்து மல்ஷான் (முப்பாய்ச்சல்) ஆகிய வீரர்கள் எதிர்வரும் ஜுலை மாதம் கொலம்பியாவில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்து அதில் பங்குபற்றுகின்ற வாய்ப்பையும் உறுதிசெய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<