இலங்கை மகளிர் அணியின் விக்கெட் காப்பு வீராங்கனை அனுஷ்கா சஞ்சீவினிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) போட்டிக்கட்டணத்தில் 15 சதவீதம் அபராதத்தை விதித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிருக்கான T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை மகளிர் அணி விளையாடி வருகின்றது. இதில் தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தியுள்ளது.
இலங்கை வீராங்கனைகளின் போட்டிக்கட்டணம் அதிகரிப்பு!
இந்தநிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆட்டமிழந்த வீராங்கனைக்கு எதிராக ஆக்ரோஷமாக செயற்பட்ட காரணத்தால், அனுஷ்கா சஞ்சீவினிக்கு போட்டிக்கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமின்றி கடந்த 24 மாதங்களில் அனுஷ்கா சஞ்சீவினியின் முதல் குற்றம் என்பதால், அவருக்கு ஒரு தரமிறக்கல் புள்ளியையும் ஐசிசி வழங்கியுள்ளது.
பங்களாதேஷ் அணி 10வது ஓவரில் துடுப்பெடுத்தாடும்போது அந்த அணியின் ஷோபனா மொஷ்டாரி ஆட்டமிழந்திருந்தார். இதன்போது ஆட்டமிழந்த வீராங்கனையின் அருகில் சென்று ஆக்ரோஷமான முறையில் ஆட்டமிழப்பை கொண்டாடியதாக அனுஷ்கா சஞ்சீவினியின் மீது போட்டி நடுவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
குறித்த இந்த குற்றத்தினை போட்டி மத்தியஸ்தரிடம் அனுஷ்கா சஞ்சீவினி ஒப்புக்கொண்டதன் பின்னர், மேற்குறித்த தண்டனையை ஐசிசி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<