மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின், பிளே ஒப் சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது.
இச்சுற்றில் நடைபெற்று முடிந்திருக்கும் வெளியேறல் (Eliminator) நொக்அவுட் போட்டியில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணியினால் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தப்பட்டிருக்கும் நடப்புச் சம்பியன் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி தொடரில் இருந்து வெளியேறுகின்றது.
சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி
விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வரும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட்…
கடந்த மாத ஆரம்பத்திலிருந்து மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளை ஒத்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே ஒப் போட்டிகள் செப்டம்பர் 5 ஆம் திகதியில் இருந்து தொடங்கியிருந்தன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் பிரசன்னத்துடன், ஆறு அணிகள் பங்குபெறும் இத்தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த குழுநிலை போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களினைப் பெற்றுக்கொண்ட அணிகள் தீர்மானமிக்க பிளே ஒப் சுற்றிற்கு தெரிவாகியிருந்தன.
அந்த வகையில், தொடரின் இறுதிப் போட்டிக்கு முதலில் தெரிவாகும் அணியினை தேர்ந்தெடுக்கும் பிளே ஒப் சுற்றின், தகுதிபெறல் 1 (Qualifier 1) போட்டி புள்ளிகள் அட்டவணையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட திரின்பாகோ நைட் ரைடர்ஸ் – சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிகள் இடையில் நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் 38 ஓட்டங்களால் வெற்றி பெற்ற கிரிஸ் கெயில் தலைமையிலான சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முதலாவது தெரிவாகும் அணியாக தம்மை பதிவு செய்துகொண்டிருந்தது.
தொடரில் புள்ளிகள் அடிப்படையில் மூன்றாம், நான்காம் இடங்களினை முறையே பெற்றுக்கொண்ட ஜமெய்க்கா தல்லாவாஸ் மற்றும் கயானா அமேசான் வோரியர்ஸ் அணிகள் தொடரில் இரண்டாவதாக இறுதிப் போட்டியில் இணையப்போகும் அணியினை தேர்வு செய்யும் பிளே ஒப் சுற்றின் தகுதிபெறல் 2 (Qualifier 2) போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற எலிமினேட்டர் போட்டியில் மோதியிருந்தன.
த்ரினேடாட் பிரைன் லாரா மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்த ஆட்டத்தில் ரயாட் எர்மிட் தலைமையிலான கயானா அமேசான் வோரியர்ஸ் தரப்பு குமார் சங்கக்கார தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணியினை முதலில் துடுப்பாடுமாறு பணித்திருந்தது.
இந்த அடிப்படையில் தமது துடுப்பாட்டத்தினை முதலில் தொடங்கிய ஜமெய்க்கா அணிக்கு லென்ட்டல் சிம்மோன்ஸ் நல்லதொரு ஆரம்பத்தினை தந்திருந்தார். சிம்மோன்ஸ் 25 பந்துகளுகளில் வேகமான முறையில் பெற்றுக்கொண்ட 34 ஓட்டங்களால் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தாலும் எதிரணிப் பந்து வீச்சாளர்கள் ஜமெய்க்காவின் ஏனைய முன்வரிசை வீரர்களினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில், மத்திய வரிசை வீரராக களமிறங்கிய ஜமெய்க்கா அணியின் தலைவர் குமார் சங்கக்கார பொறுப்பாக ஆடி அணியினை மீட்டெடுத்தார்.
எனினும், கயானா அணிக்காக விளையாடியிருந்த ஆப்கானிஸ்தானின் வலதுகை சுழல் வீரர் ராசித் கான் ஹட்ரிக் ஒன்றினை கைப்பற்ற ஜமெய்க்கா மீண்டும் சரிவுப்பாதையினை நோக்கி நகர்ந்திருந்தது. இதனை உணர்ந்த குமார் சங்கக்கார அதிரடியான முறையில் ஆடி அரைச்சதம் கடக்க 20 ஓவர்கள் முடிவில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.
மஹேல ஜயவர்தன நியுசிலாந்து ரக்பி அணியின் ரசிகரானது எவ்வாறு?
மஹேல ஜெயவர்தன நவீன கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர்…
இதில் இறுதிவரை களத்தில் நின்ற சங்கக்கார 38 பந்துகளில் 7 பெளண்டரிகளுடன் 57 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். கயானா அணியின் பந்து வீச்சில் ராசித் கான் 3 விக்கெட்டுக்களையும், ஸ்டீவன் ஜேக்கப்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து வெற்றியிலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவாலான 169 ஓட்டங்களினைப் பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய கயானா அணி, நியூசிலாந்து வீரர் லூக் ரோன்ச்சியின் அபார ஆட்டத்துடன், வெற்றி இலக்கை வெறும் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 17.5 ஓவர்களில் அடைந்தது.
இதில் ரோன்ச்சி வெறும் 33 பந்துகளினை மாத்திரம் எதிர்கொண்டு 5 அபார சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அதோடு, ஆரம்ப வீரராக வந்திருந்த சட்விக் வால்டனும் பெறுமதிமிக்க 39 ஓட்டங்களினைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணியின் சுழல் வீரர் மஹமதுல்லாஹ் மூன்று விக்கெட்டுக்களை ஜமெய்க்கா அணிக்காக கைப்பற்றியிருந்த போதும் அது எதிரணியினை வீழ்த்த போதுமாக அமைந்திருக்கவில்லை.
இப் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் கயானா அணி குவாலிபயர் 2 (Qualifier 2) போட்டியில் இலங்கை நேரப்படி நாளை (8) இடம்பெறும் போட்டியில் திரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியுடன் இறுதிப் போட்டிக்கான தெரிவுக்காக மோதுகின்றது.
போட்டியின் சுருக்கம்
ஜமெய்க்கா தல்லாவாஸ் – 168/8 (20) குமார் சங்கக்கார 57(38)*, லென்ட்ல் சிம்மோன்ஸ் 34(25), ராசித் கான் 3-32 (4)
கயானா அமேசான் வோரியர்ஸ் – 169/5 (17.5) லூக் ரோன்ச்சி 70(33), சட்விக் வோல்ட்டன் 39(23), மஹமதுல்லாஹ் 3-25 (4)
போட்டி முடிவு – கயானா வோரியர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி