லண்டனிலுள்ள மெரிலெபோன் கிரிக்கெட் கழகத்தினுடைய (MCC) உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக முன்னாள் இலங்கை வீரரான குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் சட்டங்களின் பாதுகாவலரும், இங்கிலாந்தில் உள்ள லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் உரிமையாளருமான மெரிலெபோன் கிரிக்கெட் கழகம் (MCC), தற்போதுள்ள உலக கிரிக்கெட் குழுவிற்குப் பதிலாக ஒரு உலகளாவிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை (World Cricket Connects Advisory Board) (Connects Board) கடந்த 2024ஆம் ஆண்டு ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, கடந்த ஆண்டு மெரிலெபோன் கிரிக்கெட் கழகம் 120 உறுப்பினர்களை உள்ளடக்கிய World Cricket Connects Advisory Board என்ற அமைப்பை உருவாக்கி இருந்தது. அதற்கு முன் அதன் பெயர் உலக கிரிக்கெட் குழு என இருந்தது. எனவே, புதிதாக உருவாக்கப்பட்ட குழுவில் 120 உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இந்த ஆலோசனைக் குழு 2024 ஆம் ஆண்டு லோர்ட்ஸில் MCC நடத்திய World Cricket Connects மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்டது, இந்த ஆலோசனைக் குழு தான் DRS ரிவ்யூ முறை மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் ஆகியவற்றை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு பரிந்துரை செய்தது. அதேபோல, குறித்த 2 பரிந்துரைகளும் தற்போது கிரிக்கெட்டில் அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய அமைப்பாக உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழு செயல்படவுள்ளது.
- குமார் சங்கக்கார தலைமையில் இலங்கை மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணி
- ஐசிசி இன் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றார் கமிந்து மெண்டிஸ்
எனவே, புதிதாக உருவாக்கப்பட்ட உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் உலக கிரிக்கெட் குழுவின் தலைவராகவும் அவர் பணியாற்றினார். அவர் 2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2021 செப்டம்பர் வரை மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார், இதன் மூலம் அந்தப் பதவியை வகித்த முதல் பிரித்தானிய நாட்டவர் அல்லாத நபர் என்ற பெருமையையும் சங்கக்காரா பெற்றுக்கொண்டார்.
இந்த உலகளாவிய ஆலோசனைக் குழுவில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷாவும் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இருப்பதால் அவரையும் இந்த ஆலோசனைக் குழுவில் சேர்த்ததன் மூலம் இந்த அமைப்பு முன்மொழியும் யோசனைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை உடனடியாக அமல்படுத்த வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் ஜெய் ஷா உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் மாற்றத்தை கொண்டு வர யோசனையொன்றை முன்வைத்தார். முக்கிய டெஸ்ட் அணிகள் அடங்கிய குழு ஒன்றையும், மற்ற அணிகளை மற்றொரு குழுவாகவும் பிரித்து இரண்டு நிலை கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை நடத்துவது குறித்து அவர் கிரிக்கெட் சபைகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது பொதுக் கூட்டம், 2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஜூன் 7ஆம் மற்றும் 8ஆம் ஆகிய திகதிகளில் லோர்ட்ஸில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
World Cricket Connects ஆலோசனைக் குழு விபரம்:
குமார் சங்கக்கார (தலைவர் – இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மற்றும் MCC இன் முன்னாள் தலைவர்)
அனுராக் தஹியா (ஐசிசி இன் தலைமை வணிக அதிகாரி)
கிறிஸ் டெஹ்ரிங் (மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி)
சவுரவ் கங்குலி (முன்னாள் இந்திய தலைவர் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர்)
சஞ்சோக் குப்தா (பிரதம நிறைவேற்று அதிகாரி – விளையாட்டு, ஜியோஸ்டார்)
மெல் ஜோன்ஸ் (முன்னாள் அவுஸ்திரேலிய சர்வதேச மற்றும் தற்போதைய ஒளிபரப்பாளர்)
ஹீதர் நைட் (இங்கிலாந்து மகளிர் அணித்தலைவி)
ட்ரூடி லிண்ட்பிளேட் (கிரிக்கெட் ஸ்கொட்லாந்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி)
ஹீத் மில்ஸ் (உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் நிர்வாகத் தலைவர்)
இம்தியாஸ் படேல் (SuperSport, MultiChoice மற்றும் DStv முன்னாள் தலைவர்)
ஜெய் ஷா (ஐசிசி தலைவர்)
கிரேம் ஸ்மித் (முன்னாள் தென்னாப்பிரிக்கா தலைவர் மற்றும் SA20 இல் லீக் ஆணையாளர்)
ஆண்ட்ரூ ஸ்ட்ரோஸ் (முன்னாள் இங்கிலாந்து தலைவர் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முன்னாள் கிரிக்கெட் இயக்குநர்)
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<