பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான டாக்கா டைனமைட்ஸ் அணி எதிர்வரும் 2016/2017 பருவகால போட்டிகளுக்காக இலங்கையின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரபல டி-20 தொடரான பங்களாதேஷ் பிரீமியர் லீக் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி முதல் டிசம்பர் 9ஆம் திகதி வரை டாக்கா மற்றும் சிட்டகொங் மைதானங்களில் இடம்பெறவுள்ளன. நான்காவது வருடமாக நடாத்தப்படும் இச்சுற்றுப்போட்டியில் மொத்தமாக 46 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் இறுதிப்போட்டி டாக்கா மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இவ்வருடத்திற்கான வீரர்களை பங்கிடும் ஏலம் செப்டம்பர் 30ஆம் திகதி இடம்பெறும்.
ஏலத்தின் முன்னரே 31 வெளிநாட்டு வீர்ரர்கள் அணி உரிமையாளர்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி ஏலமிடப்படும் வீரர்கள் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள். அன்றைய தினம் 133 உள்ளூர் வீரர்கள் மற்றும் 168 வெளிநாட்டு வீரர்கள் ஏலமிடப்படுவர்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட 31 வீரர்களில் 7 வீரர்கள் இலங்கையர்களாவர். அவர்கள் முறையே, மஹேல ஜயவர்தன (டாக்கா டைனமைட்ஸ்), குமார் சங்கக்கார (டாக்கா டைனமைட்ஸ்), திஸர பெரேரா (கொமிலா விக்டோரியன்ஸ்), நுவன் குலசேகர (கொமிலா விக்டோரியன்ஸ்), டில்ஷான் முனவீர (பரிசால் புல்ஸ்), சதுரங்க டி சில்வா (சிட்டகொங் வைகிங்ஸ்) மற்றும் தசுன் ஷானக (ரங்ப்பூர் ரைடர்ஸ்).
முன்னணி டி-20 வீரர்களான கிறிஸ் கெயில், ஷஹிட் அப்ரிடி, அண்ட்ரே ரசல், ட்வென் பிராவோ, டெரன் ஸமி, ஷொயிப் மலிக் ஆகியோரும் இத்தொடரில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏலப்பட்டியலில் இலங்கை வீரர்களான சீக்குகே பிரசன்ன (‘A’ பிரிவு – 70,000 அமெரிக்க டொலர்), சாமர கபுகெதர, உபுல் தரங்க, சஜித்ர சேனநாயக்க, கௌஷால் சில்வா (‘B’ பிரிவு – 50,000 அமெரிக்க டொலர்), ஜீவன் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன (‘C’ பிரிவு – 40,000 அமெரிக்க டொலர்), அஜந்த மெண்டிஸ், லஹிரு திரிமான்னெ, உதார ஜயசுந்தர, ரமித் ரம்புக்வெல்ல, பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக, கிஹான் ரூபசிங்க, அஞ்சலோ பெரேரா (‘D’ பிரிவு – 30,000 அமெரிக்க டொலர்) ஆகியோர் இடம்பெறுகின்றனர்.