சஞ்சு சம்சன் – சங்கக்கார இடையே வேடிக்கையான உரையாடல்

Indian Premier League 2023

925
Kumar Sangakkara Admires Sanju Samsons

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கும், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்காரவுக்கும் இடையே இடம்பெற்ற வேடிக்கையான உரையாடல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகளுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை (08) நடைபெற்ற IPL தொடரின் 11ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நிலையில், போட்டியின் பிறகு ராஜஸ்தான் வீரர்களுடனான சந்திப்பின் போது இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் வேகமான துடுப்பாட்டத்தின் உதவியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 199 ஓட்டங்களைக் குவித்தது.

அதேநேரம், டிரெண்ட் போல்ட் முதல் ஓவரிலேயே டெல்லி இன்னிங்ஸின் முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணியின் முதல் விக்கெட்டாக பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். போல்ட்டின் பந்து, ஷாவின் துடுப்பு மட்டையின் வெளிப்புற விளிம்பில் பட்டதுடன், விக்கெட் காப்பாளர் சஞ்சு சம்சன் அபாரமான முறையில் அந்தப் பிடியெடுப்பை எடுத்தார்.

அந்த பிடியெடுப்பை எடுத்ததன் மூலம், ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகின்ற இலங்கையின் அதிசிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவராக கருதப்படும் குமார் சங்கக்கார விக்கெட் காப்பில் செயல்பட்டதை நினைவுபடுத்தியதாக சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், போட்டியின் பிறகு அணித் தலைவர் சஞ்சு சம்சன் ஆற்றிய சிறப்பான பங்கையும் குமார் சங்கக்கார பாராட்டினார்.

‘அணித்தலைவர் இன்று அணியை சிறப்பாக வழிநடத்தினார். நீங்கள் முடிவுகளை எடுத்த விதம் மற்றும் பந்து வீச்சாளர்களை நீங்கள் வழிநடத்திய விதம் பார்க்க நன்றாக இருந்தது. அந்த விடயங்களைச் செய்ய நீங்கள் பயப்படவில்லை. உண்மையில் நன்றாக இருந்தது’ என தெரிவித்தார்.

இவ்வாறு சங்கக்கார சஞ்சு சம்சனைப் பாராட்டிய நிலையில், சம்சன் சங்கக்காரவைப் பார்த்து, அவரது பிடியெடுப்பை அசைவுகள் மூலம் மீண்டும் செய்து காட்டினார்.

‘மன்னிக்கவும், பிடியெடுப்பை மறந்துவிட்டேன். ஒரு அற்புதமான பிடியெடுப்பு. மிகவும் சிறப்பானது’.

அவ்வாறு சங்கக்கார சஞ்சு சம்சனுக்கு ஒரு சிறு புன்னகையுடன் பதிலளித்தார். இந்த சம்பவம் முழு அணியையும் சிரிக்க வைத்தது.

இம்முறை IPL தொடரில் இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் அணி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை எடுத்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<