இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார, இளம் வீரரான குசல் மெண்டிஸ் அவரது தற்போதைய வயதில் அடைந்திருக்கும் (சாதனை) அடைவுமட்டத்தினை தான் அப்போதைய தனது வயதில் பெற்றிருக்கவில்லை என கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
மேலும், குசல் மெண்டிஸ் தனது இளவயதில் வெளிக்காட்டிய திறமைகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சங்கக்கார பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு, தற்போதைய மெண்டிசின் வயதில் தான் இருந்த போது தான் வெளிக்காட்டிய ஆட்டத்தினை விட மிகவும் முன்னேற்றகரமான ஆட்டத்தினை அவர் காட்டுவதாகவும் கூறியிருக்கின்றார்.
குசல் மெண்டிஸ், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்றிருந்த டெஸ்ட் போட்டியொன்றில், 176 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதன் மூலம் அப்போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியிருந்த அவர் கிரிக்கெட் உலகிற்கும் தன்னால் சாதிக்க முடியும் என்பதனை வெளிக்காட்டியிருந்தார்.
ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் நாளை முதல்
மெண்டிஸ் தனது 21ஆவது வயதில் பெற்றிருந்த இச்சதமானது, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இத்தசாப்த காலத்தில் வயது குறைந்த இளம் வீரர் ஒருவரினால் பெறப்பட்ட சதமாகப் பதிவாகியிருந்தது. இன்னும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 150 ஓட்டங்களைக் கடந்த, வயது குறைந்த இளம் வீரர்களில் இரண்டாவது வீரராகவும் அச்சதம் மூலம் மெண்டிஸ் தன்னை அடையாளப்படுத்தியிருந்தார்.
தற்போது, மீள்கட்டியெழுப்பப்படும் அனுபவம் குறைந்த இலங்கை அணியில், முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக காணப்படும் மெண்டிஸ், குமார் சங்கக்கார தனது கன்னி டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்த வயதிற்கு (23) இரண்டு வயது குறைவான நிலையில் தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கக்கார, மெண்டிஸ் உடன் சேர்த்து ஏனைய சில இலங்கை வீரர்களின் அண்மைய ஆட்டங்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.
“நான் குசல் மெண்டிஸை, கடந்த வருடம் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில் பார்த்திருந்தேன். அவரது ஆட்டம் மிகவும் ரசிக்கும் விதமாக காணப்பட்டிருந்தது. அப்படியான ஒரு ஆட்டத்தினை, நான் எனது அப்போதைய வயதில் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.“
“அதே போன்று, அசேல குணரத்ன அவுஸ்திரேலிய அணியுடன் T20 போட்டிகளில் விளையாடிய விதம், லஹிரு குமார தென்னாபிரிக்க அணியியை தனது பந்து வீச்சினால் கட்டுப்படுத்தியிருந்த விதம், துஷ்மந்த சமீர நியூசிலாந்தில் பந்து வீசிய விதம், லக்ஷாக்ஷன் சந்தகன் அவுஸ்திரேலிய அணியை நிலைகுலையச் செய்ய விதம், (போன்ற) இளம் வீரர்களின் ஆட்டத்தினை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருந்தேன். இதனாலேயே, இலங்கை கிரிக்கெட் மீது ஒரு நல்லெண்ணம் காணப்படுகின்றது.”
என குமார் சங்கக்கார குசல் மெண்டிஸ் பற்றியும், ஏனைய வீரர்கள் பற்றியும் பேசியிருந்தார்.
“லாஸ்ட் மேன் ஸ்டேன்ட்” கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிகள் இவ்வாரம்
குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் திலகரத்ன தில்ஷான் ஆகிய முக்கிய வீரர்களின் ஓய்விற்குப் பின்னர், இலங்கை அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
எனினும், தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை வீரர்களின் ஆட்டம் முன்னேற்றம் அடைந்திருந்ததனை அவதானிக்க முடியுமாக இருந்தது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறி இருப்பினும் குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க மற்றும் அசேல குணரத்ன ஆகிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்தனர். இவ்வாறான வீரர்கள் இலங்கை அணிக்கு கிடைத்திருப்பது துவண்டு போயிருந்த இலங்கை கிரிக்கெட் மீண்டும் புத்துயிர் அடைந்து வருவதனை உறுதிப்படுத்துகின்றது.