அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்hகள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், வனிந்து ஹஸரங்கவினால் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனமை ஏமாற்றம் அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் லசித் மாலிங்க ஆகிய இருவரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்கவுக்கு அனைத்துப் போட்டிகளிலும் விக்கெட் எடுத்து இலங்கை அணியை வெற்றி பெறச் செய்வார் என்பதை எதிர்பார்க்க முடியாது என சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக பேர்த், ஒப்டஸ் விளையாட்டரங்கில் நேற்று (25) நடைபெற்ற T20 உலகக் கிண்ண குழு 1 இற்கான சுபர் 12 சுற்று போட்டியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடி ஆட்டத்தின் உதவியால் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில், துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை எடுத்தது. 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு வோர்னர் 11 ஓட்டங்களிலும், மிட்செல் மார்ஷ் 17 ஓட்டங்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அணித் தலைவர் ஆரோன் பிஞ்சும் நிதானமாகவே ஆட, அவுஸ்திரேலியா அணி 12.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்களை எடுத்து தடுமாறியிருந்தது. அப்போது 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டொய்னிஸ் ஆட்டத்தை அடுத்த 4 ஓவர்களில் முடித்து வைத்தார்.
- அவுஸ்திரேலிய அணிக்கு T20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றி
- “நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மாற்றங்கள் இடம்பெறுமா?” – சில்வர்வூட்
- ஆஸி. அணியினை விட நாம் நம்பிக்கையுடன் இருக்கின்றோம் – தீக்ஷன
குறிபபாக 14ஆவது ஓவரில் தசுன் ஷானகவுக்கு எதிராக இரண்டு பௌண்டரிகளை அடித்த அவர், அடுத்து ஹசரங்கவுக்கு எதிராக 2 சிக்ஸர்கள்,4 பௌண்டரிகளை விளாசினார். தொடர்ந்து மஹீஷ் தீக்ஷனவுக்கு எதிராக 2 சிக்ஸர்களை ஸ்டொய்னிஸ் பறக்கவிட்டதால், அவுஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி அவுஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வனிந்து ஹஸரங்க ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தனர்.
இதில் 4 ஓவர்கள் பந்துவீசி 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த அவர், T20 போட்டிகளில் முதல் தடவையாக 50 ஓட்டங்களை மேல் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையொன்றை படைத்தார்.
இந்த நிலையில், அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது மற்றும் வனிந்து ஹஸரங்க பந்துவீச்சில் பிரகாசிக்க தவறியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்கள் வாயிலாக விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இதில் இலங்கை அணியின் பயி;ற்சியாளர் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வனிந்து ஹஸரங்க தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
வனிந்து திறமையான ஒரு பந்துவீச்சாளர். அதேபோல, அவரது தனி முயற்சியினால் போட்டியொன்றை வெற்றியீட்டி கொடுக்கவும் முடியும். துரதிஷ்டவசமாக அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது. அதற்கு காரணம் பயிற்சிகளோ அல்லது முன் தயார்படுத்தல்களில் மேற்கொண்ட தவறுகள் அல்ல. எனவே, நாம் அவருடன் இன்னும் நெருக்கமாக இருப்பதுடன், அவருக்குத் தேவையான ஒத்துழைப்பினை நிச்சயம் வழங்குவோம். மிக விரைவில் அவர் போர்முக்கு திரும்புவார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
இதனிடையே, தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய போட்டியின் பிறகு தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். போட்டியின் நடுவில் வனிந்துவின் ஓவர்கள் எதிர்பார்த்தளவு கைகொடுக்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் அவரால் விக்கெட் வீழ்த்த முடியும் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் நாங்கள் சிறந்ததொரு போட்டியைக் கொடுத்தோம். பானுகவும், தசுனும் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும். சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்றால் எம்மால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என குறிப்பிட்டார்.
>> வனிந்து ஹஸரங்கவின் மோசமான பந்துவீச்சு தொடர்பில் கூறும் கிரிஸ் சில்வர்வூட்!
இதேவேளை, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
நாங்கள் மிகவும் கடினமான ஆடுகளத்தில் விளையாடி ஓட்டங்களைக் குவித்தோம். பந்துவீச்சில் போதியளவு நிதானம் இருக்கவில்லை. அதேபோல, திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்தவில்லை. ஒட்டுமொத்தத்தில் எமது அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டியின் மூலம் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். எனவே எஞ்சிய போட்டிகளில் உறுதியான மனநிலையுடன் விளையாடி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும். உங்களால் முடியும் என்பதை நான் அறிவேன். அதேபோல, முழு இலங்கையும் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<