கிரிக்கெட் விளையாட்டில் வீரர் ஒருவருக்கு மிக குறுகிய காலமே விளையாட முடியும் என்பதால் அந்த காலப்பகுதியை வீரர்கள் மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கையின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் உலக சம்பியனான இலங்கை கிரிக்கெட் அணி, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”இது எனது தனிப்பட்ட கருத்து. எனவே இதைப் பற்றி நான் அதிகம் கூறமாட்டேன். வீரர்களின் விளையாட்டு வாழ்க்கை மிகவும் குறுகியது. எனவே, அவர்கள் அந்த நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த விடயங்களுக்கு நீங்கள் ‘இல்லை’ என்று சொல்ல முடியாது. இறுதியில், வீரர்கள் தமது உடம்பால் எவ்வளவு தாங்கிக் கொள்ள முடியும் என்பதை தீர்மானிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட்போட்டிகளுக்கு அதிக ஈடுபாடு இருந்தாலும் தற்போது கிரிக்கெட் உலகின் குறுகிய வடிவான T20 போட்டிகளுக்கே அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. இது குறித்து கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய,
”தற்போதைய நாட்களில் பல்வேறு லீக் போட்டிகள் நடைபெற்று வருவதால் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மிகவும் பரபரப்பபாக மாறிவிட்டது. இதன் காரணமாக, பல முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரமும் மிகவும் குறைந்து விட்டது. ஆனால், எந்தவொரு வீரரும் தான் விளையாடுகின்ற காலப்பகுதியில் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
”T20i கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் தலைசிறந்த T20 வீரர்கள் உருவாகி வருகின்றனர்” என குறிப்பிட்டார்.
அத்துடன், 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள போதிலும், 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ளது.
ஆனால், 1996 உலகக் கிண்ணத் தொடரின் பெறுமதிமிக்க வீரராக மாறிய சனத் ஜயசூரிய, இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு இலங்கை நிச்சயம் தகுதி பெறும் என தெரிவித்தார்.
‘நாங்கள் முதலில் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மேலும், இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தில் களமிறங்கும் சிறந்த அணிகள் எவை என்பதை இன்னும் யூகிக்க முடியாது’ என்றும் சனத் ஜயசூரிய கூறியிருந்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<