அணித் தேர்வில் சிரமப்படும் ஜயசூரிய

1266
Sanath faced Difficulties in team selection

இலங்கை அணி வீரர்களின் தொடர்ச்சியான உபாதைகளால் நிலையான பதினைந்து பேர் குழாம் ஒன்றை தேர்வு செய்வது கடினமாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கொண்ட இந்த அணியில் உபாதைகளால் பல முக்கிய வீரர்கள் விடுபட்டுள்ளனர். அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப், சுரங்க லக்மால் மற்றும் நுவன் குலசேகர ஆகியோர் காயங்கள் காரணமாக அணித் தேர்வில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் அணித்தேர்வு குறித்து விளக்கும் ஊடக சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் பங்கேற்ற தேர்வுக் குழுத் தலைவர் ஜயசூரிய இலங்கை அணித் தேர்வில் சந்திக்கும் நெருக்கடிகள் பற்றி விளக்கினார்,

“கடந்த காலங்களில் 25 வீரர்கள் வரை உபாதைகளுக்கு உள்ளானார்கள். இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் முடியும்போது எத்தனை பேர் வெளியே போனார்கள் என்பதை பார்த்திருப்பீர்கள். நான்கு வீரர்கள் இந்த டெஸ்ட் தொடர் முடியும்போது காயத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

எனவே இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி திறன் முகாமையாளர், பயிற்சியாளர்களுடன் ஆலோசித்து இருக்கின்ற சிறந்த வீரர்களை கொண்டுவருகிறோம். இதன்போது சில வீரர்கள் சிறப்பாக செயற்படுகிறார்கள், மேலும் சில வீரர்கள் திறமையை காட்டுவதில்லை.

பதினைந்து வீரர்களைத் தேர்வு செய்து, அவர்கள் காயங்கள் இன்றி ஓர் ஆண்டு வரை விளையாடுவதை பார்க்க நானும் ஆசைப்படுகிறேன். அவ்வாறு இருந்தால் எமது பணியும் இலகுவாக இருக்கும்” என்று ஜயசூரிய குறிப்பிட்டார்.

அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் மீள முயற்சிக்கும் இலங்கை அணி

கிரிக்கெட் விளையாட்டு, இலங்கையில் அநேகமானவர்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று…

கடந்த காலங்களில் எந்த ஒரு வீரருக்கும் நிலைபெற வாய்ப்பு அளிக்காமல் அதிக புதுமுக வீரர்களை அணிக்கு தேர்வு செய்வதாக ஜயசூரிய மீது விமர்சனங்கள் இருந்து வந்தன.

இது குறித்து விளக்கிய தேர்வுக் குழுத் தலைவர் “இலங்கை அணிக்கு விளையாடிய வீரர் என்ற வகையில், வீரர் ஒருவர் அணியில் நிலை பெறுவதற்கு அவகாசம் வழங்குவதற்கு நானும் ஆசைப்படுகிறேன். அதுவே எனது எதிர்பார்ப்பும் கூட.

ஆனால் கடந்த முறை சம்பியன்ஸ் கிண்ணத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய குசல் ஜனித் (பெரேரா), அசேல (குணரத்ன), (சுரங்க) லக்மால், நுவன் பிரதீப் ஆகிய வீரர்கள் இல்லை. நுவன் குலசேகரவும் இல்லை. இந்த ஐந்து வீரர்களும் இன்று உபாதைக்கு உள்ளாகியுள்ளனர். எனவே நான் இருக்கின்ற வளத்தை வைத்துக் கொண்டு தான் செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன். இதனாலேயே நாம் அனைவரும் பொறுமையோடு செயற்படுவோம் என்று கோருகிறேன்” என்றும் ஜயசூரிய கூறினார்.

சொந்த மண்ணில் நடந்த ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்ததை அடுத்து அஞ்செலோ மெதிவ்ஸ் தனது தலைமைப் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்தே உபுல் தரங்கவுக்கு இலங்கை ஒருநாள் அணிக்கான தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.

32 வயதான தரங்க இலங்கை ஒருநாள் அணிக்கு இதுவரை 14 போட்டிகளில் தலைவராக செயற்பட்டு அதில் நான்கு போட்டிகளில் அணியை வெற்றிபெறச் செய்திருப்பதோடு எட்டு ஆட்டங்களில் தோல்வியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் இந்தியாவுடனான தொடரே அவர் இலங்கை ஒருநாள் அணியின் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் போட்டியாகும்.

13 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அவசர அழைப்பு

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்று வரும்…

இவ்வாறான ஒரு நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இலங்கைக் குழாம் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக இலங்கை ஒருநாள் அணித் தலைவர் உபுல் தரங்க குறிப்பிட்டுள்ளார்.

“ஒருநாள் தொடருக்கு எமக்கு சிறந்த அணி ஒன்று கிடைத்துள்ளது. அண்மைக்காலத்தில் வீரர்கள் பலரும் காயத்திற்கு உள்ளானார்கள். அது விளையாட்டில் ஏற்படும் ஒன்று. என்றாலும் அணித் தலைவர் என்ற வகையில் சிறந்த அணி ஒன்று கிடைத்திருப்பதாக நான் கருதுகிறேன்” என்று தரங்க கூறினார்.

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் மூன்று ஆட்டங்களிலும் மோசமான தோல்வியை சந்தித்த நிலையிலேயே இலங்கை அணி இந்தியாவுடனான ஒருநாள் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

ஆனால் இலங்கை அணி இந்தியாவை கடைசியாக ஒருநாள் போட்டி ஒன்றில் சந்தித்தபோது அதிக திறமையை வெளிக்காட்டியது. கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இந்திய அணி பெற்ற 321 ஓட்டங்களையும் இலங்கை அணி துரத்திச் சென்றே வெற்றி பெற்றது.

“அணி என்ற வகையில் நாம் இருக்கும் இடத்தை உலகத்திற்கு காட்டுவதற்கு இந்தப் போட்டித் தொடர் சிறந்த சந்தர்ப்பமாகும். குறிப்பாக மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என்று அணியில் உள்ள வீரர்களை பார்க்கும்போது நாம் தற்போது இருப்பதை விடவும் திறமையை வெளிக்காட்ட முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியா என்பது உலகில் இருக்கும் பலம்மிக்க அணியொன்று. நாம் அவர்களை இங்கிலாந்தில் வீழ்த்தினோம். அந்த உற்சாகம் முழு அணியிடமும் இருக்கிறது” என்று தரங்க நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (20) ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளது.