ஜப்பானின் கோபேயில் நடைபெற்று வரும் உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான F44 பிரிவு ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் சமித்த துலான் கொடிதுவக்கு புதிய உலக சாதனை படைத்தார்.
மாற்று திறனாளிகளுக்கான உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகிய இந்தப் போட்டித் தொடரானது இம்மாதம் 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா சார்பில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் ஐந்தாவது நாளான இன்று (21) நடைபெற்ற ஆண்களுக்கான F44 பிரிவு ஈட்டி எறிதலில் பங்;குகொண்ட சமித்த துலான் கொடிதுவக்கு, 66.49 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து அப் பிரிவுக்கான புதிய உலக சாதனையை நிலைநாட்டினார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எம். பூரியன் 2021இல் 66.29 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து F44 பிரிவில் நிலைநாட்டியிருந்த முந்தைய உலக சாதனையையே சமித்த துலான் கொடிதுவக்கு முறியடித்தார். எவ்வாறாயினும் ஒட்டுமொத்த நிலையில் சமித்த துலான் கொடிதுவக்குவிற்கு இரண்டாம் இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தது.
சமித்த துலான், கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான F44 பிரிவு ஈட்டி எறிதலில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக பாரா மெய்வல்லுனரில் சமித்தவுக்கு வெண்கலம்
- கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்
- ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கையிலிருந்து 21 வீரர்கள்
இந்தப் போட்டியில் F64 பிரிவைச் சேர்ந்த இந்திய வீரர் சுமித் 69.50 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவிகரித்தார்.
சீனாவில் 2023இல் நடைபெற்ற ஹங்சௌ 2022 ஆசிய விளையாட்டு விழாவில் சுமித் இதே பிரிவில் ஈட்டியை 73.29 மீற்றர் தூரத்திற்கு எறிந்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார். அவரது சக நாட்டவரான சந்தீப் (60.41 மீற்றர்) இன்றைய போட்டியில் வெண்கலப் பதக்கதை வென்றார்.
F42, F43, F44, F4 ஆகிய நான்கு பிரிவுகளைச் சேர்ந்த பரா மெய்வல்லுனர்கள் பங்குபற்றிய இப் போட்டி கு64 என்ற ஒற்றைப் பிரிவின் கீழ் நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான T44 பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர் நுவன் இந்திக்க வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
எனவே, இம்முறை உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை இதுவரை ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை வென்று பதக்கப் பட்டியலில் 37ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<