சிலோன் பிஸ்கட் தனியார் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளேன்ட்டி ஃபூட்ஸ் தனியார் லிமிடெட் நிறுவனத்தின் பிரபல உற்பத்தியான சமபோஷ, தொடர்ந்து எட்டாவது முறையாகவும் 15 வயதிற்குற்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடருக்கு பூரண அனுசரணை வழங்கவுள்ளது.
இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் பாடசாலைகளுக்கான கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போட்டி தொடர் இம்மாதம் (செப்டெம்பர்) 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள தொடரில் 500 ஆண்கள் அணிகளும், 150 மகளிர் அணிகளும் பங்குகொள்ளவுள்ளன. மொத்தமாக 12,000 இற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
இத்தொடரின் போட்டிகள், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 32 மைதானங்களில் நடைபெற உள்ளன. ஒக்டோபர் மாதம் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் பொலன்னறுவை நகரில் நடைப்பெற உள்ள இறுதி சுற்று போட்டிகளில் 32 ஆண்கள் அணிகளும், 24 மகளிர் அணிகளும் பங்குபற்றி விளையாடவுள்ளன. தொடரின் இறுதி நாளன்று சிறந்த வீர, வீராங்கனைகள் மற்றும் சிறந்த கோல் காப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
அண்மையில் இடம்பெற்ற இப்போட்டி தொடர் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா கருத்து தெரிவிக்கையில் ’15 வயதிற்குற்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான காற்பந்தாட்ட தொடர், போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கிடையிலான நட்புணர்வு மற்றும் போட்டி தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த தொடராக அமையும். உத்வேகம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இந்த போட்டிகள் மூலம் சிறந்த நட்சத்திர வீர, வீராங்கனைகளை அடையாளம் காணுவதற்கான சந்தர்ப்பம் நமக்கு கிடைத்துள்ளது. மேலும், கால்பந்தாட்டத்தின் மீது மாணவ, மாணவிகளுக்கு உள்ள ஆர்வத்தை அதிகரிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
கடந்த 8 வருடங்களாக இலங்கை கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிற்கு சமபோஷ நிறுவனம் பங்களிப்பு அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் போட்டி தொடருக்கு சமபோஷ பூரண அனுசரணை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்’ என தெரிவித்தார்.
பிளேன்ட்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன அங்கு கருத்து தெரிவிக்கையில், ‘எமது நிறுவனம் கால்பந்தாட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக தம்மை அர்ப்பணித்துள்ளது. விளையாட்டு என்பது வெறும் திறமையை வெளிக்காட்டுதல் மட்டுமல்லாது, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, தன்னம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வளர்க்கவும் மிகவும் முக்கியம்.
எமது தேசத்தில் உலக தரம் வாய்ந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் குறிக்கோளுடனேயே நாம் இப்போட்டிக்கு அனுசரணை வழங்குவதற்கு ஆர்வப்படுகிறோம்’ என அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் நடைப்பெற்ற 15 வயதிற்கு உற்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட தொடரில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில், திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியை வெற்றி கொண்டு, கொழும்பு ஸாஹிரா கல்லூரி சம்பியனானது. அதேபோன்று, மகளிருக்கான போட்டிகளில் இறுதிப் போட்டியில் குருநாகல் கவிசிகமுவ மத்திய கல்லூரியை வீழ்த்தி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.