தொடர் தோல்விகளால் SAFF தொடரில் இருந்து இலங்கை வெளியேற்றம்

441

இன்று இடம்பெற்ற பூட்டான் அணிக்கு எதிரான போட்டியிலும் இலங்கை இளம் அணியினர் 6-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தனர். எனவே, முதல் இரண்டு போட்டிகளிலும் பெற்ற தொடர் தோல்வியின் காரணமாக தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) 15 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது.

ஏற்கனவே முதல் போட்டியில் பங்களாதேஷிடம் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இன்றைய போட்டிக்காக இலங்கை அணியின் தலைவர் சன்தீப வாஸ் அணியில் உள்வாங்கப்படாமையினால் தலைமைப் பொறுப்பு பின்கள் வீரர் ஜீவக சமோதிற்கு வழங்கப்பட்டிருந்தது.

முதல் போட்டியில் மிக மோசமான விளையாட்டை வெளிக்காண்பித்திருந்த இலங்கை அணி, இந்தப் போட்டியில் அதற்கு மாற்றமான ஒரு திறனை வெளிப்படுத்தும் நோக்கோடு களமிறங்கியது. அதன்படி முதல் சில நிமிடங்களுக்கு இலங்கை வீரர்கள் எதிர் தரப்பினருக்கு சற்று அழுத்தம் கொடுத்து விளையாடினர்.

முதல் போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) 15 வயதின்…

ஆட்டத்தின் நான்கு நிமிடங்களே கடந்த நிலையில் அணித் தலைவர் ஜீவக சமோத் உபாதைக்கு உள்ளாகி, மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலான கொழும்பு ஸாஹிராக் கல்லூரி வீரர் நபீல் நிசாம் அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.  

ஆட்டத்தின் 8 நிமிடங்கள் கடந்தவுடன் நிகோல் தோர்ஜி கன்டொ மூலம் பூட்டான் அணிக்கான முதல் கோல் பெறப்பட்டது.

எனினும் அதனைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் சற்று தடுத்து ஆடியமையினால் எந்தவித கோல்களும் எதிர் தரப்பினரால் பெறப்படவில்லை.  

பின்னர் மீண்டும் 20ஆவது நிமிடத்தின் பின்னர் இலங்கை வீரர்களின் விளையாட்டு மிகவும் மோசமாக வெளிக்காண்பிக்கப்பட்டது. இதன் காரணமாக 24ஆவது நிமிடம் நிகோல் தோர்ஜி கன்டொ மூலம் பூட்டான் அணிக்கு அடுத்த கோலும் கிடைக்கப்பெற்றது.

பூட்டானின் பல வீரர்களுக்கு இடையிலான சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் தோர்ஜியிடம் வந்த பந்தை அவர் இலகுவாக கம்பங்களுக்குள் செலுத்தி அணியின் கோல் கணக்கை உயர்த்தினார்.

அதன் பின்னர் 31ஆவது நிமிடத்தில் இலங்கை பின்கள வீரரின் தவறை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கிங்கா வொங்சுக் பூட்டான் அணிக்கான மூன்றாவது கோலையும் பெற்றுக்கொடுத்தார்.

மேலும் 4 நிமிடங்கள் கடந்த நிலையில் பூட்டான் அணியின் மத்திய கள வீரர் ஒருவர் நீண்ட தூரத்தில் இருந்து கோலை இலக்கு வைத்து உதைந்த பந்து கோலின் மேல் கம்பத்தில் பட்டவாறு மீண்டும் மைதானத்திற்கு வந்தது.  

அதன் பின்னர் 43ஆவது நிமிடத்திலும், 45 நிமிடங்கள் கடந்த நிலையிலும் பூட்டான் வீரர் கெல்ஸாங் ஜிக்மி அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்றார். இதன் காரணமாக முதல் பாதி நிறைவடையும்பொழுது பூட்டான் 5 கோல்களால் முன்னிலை பெற்றது.

முதல் பாதி : இலங்கை 0 – 5 பூட்டான்

இரண்டாவது பாதியில் பூட்டான் வீரர்கள் மேற்கொண்ட பல முயற்சிகள் இலங்கை பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளர் மிஹிரு ஆகியோரால் தடுக்கப்பட்டன.  

இலங்கையின் மற்றொரு வீரரான இகினம் டினியாஸ் உபாதைக்கு உள்ளாகி, அவரும் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அவருக்குப் பதிலாக உகுவெல அஜ்மீர் கல்லூரி வீரர் மொஹமட் நுஸ்கான் மைதானம் நுழைந்தார்.

எனினும், முதல் பாதியில் பூட்டான் வீரர்கள் காண்பித்த அபார ஆட்டம் இரண்டாவது பாதியில் காண்பிக்கப்படவில்லை. மறுமுனையில் இலங்கை வீரர்களின் மிக மோசமான பந்துப் பரிமாற்றங்களால் அவர்களுக்கு எந்த கோல் வாய்ப்புக்களையும் பெற முடியாமல் போனது.

ஆட்டம் நிறைவடைய அண்மித்திருந்த நிலையில், 90ஆவது நிமிடத்தில் பூட்டான் அணிக்கு கிடைக்கப்பெற்ற கோணர் உதையின்போது அவ்வணி வீரர்கள் இரண்டாவது பாதியில் தமக்கான முதல் கோலைப் பெற்றனர்.  

எனவே, போட்டி நிறைவின்போது எதிரணிக்கு 6 கோல்களை விட்டுக்கொடுத்த இலங்கை அணி, இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்து இத்தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு உள்ளாகியது. 

இத்தொடரில் இலங்கை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் எந்தவொரு கோலையும் பெறாத அதேவேளை, எதிரணிகள் இலங்கைக்கு எதிராக மொத்தமாக 10 கோல்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம் : இலங்கை 0 – 6 பூட்டான்

கோல் பெற்றவர்கள்

பூட்டன் – நிகோல் தோர்ஜி கன்டொ 9’&24’, கிங்கா வொங்சுக் 31’, கெல்ஸாங் ஜிக்மி 43’&45+1’, சித்தார்த் குருங் 90’