போராட்டத்தின் பின் நேபாளத்திடம் வீழ்ந்தது இலங்கை

SAFF Championship 2021

594

மாலைதீவுகளில் இடம்பெறும் 13ஆவது தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக போராட்டம் காண்பித்த இலங்கை அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி கண்டது.

ஏற்கனவே தமது முதல் போட்டியில் பங்களாதேஷிடம் 1-0 என தோல்வியடைந்த இலங்கை அணி, தற்போது தமது இரண்டாவது தோல்வியையும் சந்தித்துள்ளதால் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பு இலங்கைக்கு குறைந்துள்ளது.

மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் உள்ள தேசிய கால்பந்து அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் 15 நிமிடங்களிலும் இலங்கை வீரர்கள் மிக வேகமான ஒரு ஆட்டத்தை காண்பித்தனர்.

இலங்கை முதல் பதினொருவர்

முன்னைய போட்டியில் பின்களத்தை பலப்படுத்தி ஆடிய இலங்கை அணி, இந்தப் போட்டியில் தமது முன்களத்தை பலப்படுத்தியது. அதன் பலனாக ஆட்டத்தின் முதல் பகுதி இலங்கை அணியின் ஆதிக்கத்தில் இருந்தது.

18ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியில் இருந்து மார்வின் ஹமில்டன் உயர்த்தி செலுத்திய பந்தை பெற்று முன்னோக்கி எடுத்துச் சென்ற டிலன் டி சில்வா, நேபாள பின்கள வீரரைத் தாண்டி பந்தை எடுத்துச் சென்று கோலின் இடது பக்கத்தில் இருந்து எதிர் திசை கம்பத்தினால் உள்ளே செலுத்த முயற்சித்த பந்து கம்பங்களை விட்டு உயர்ந்து வெளியே சென்றது.

அடுத்த சில நிமிடங்களில் மொஹமட் சிபான் மத்திய களத்தில் இருந்து வேகமாக முன்னோக்கி எடுத்துச் சென்று எதிரணியின் கோல் எல்லையில் வைத்து பந்தை கால்களில் இருந்து தவறவிட்டார்.

ஆட்டத்தின் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்தை நேபாள் அணியின் சிரேஷ்ட வீரர் நவயங் ஷிரெஷ்டா சக வீரர் சுமன் லாமாவுக்கு வழங்க, அவர் உதைந்த பந்து சுஜான் பெரேராவின் கைகளில் பட்டு கோலின் மேல் கம்பத்தில் பட்டு மீண்டும் மைானத்திற்கு வந்தது. மீண்டும் சுஜான் வருவதற்குள் வேகமாக செயற்பட்ட சுமன் லாமா அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னர் ஆட்டத்தை நேபாளம் அணி வீரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இலங்கை வீரர்கள் கவுண்டர் அட்டாக் முறையில் வேகமாக கோலுக்கான முயற்சிகளை எடுத்தாலும் எதிரணியின் பின்களம் பலமான தடுப்பாட்டத்தை மேற்கொண்டது.

எனவே, முதல் பாதி ஆட்டம் சுமன் லாமாவின் கோலுடன் நிறைவு பெற்றது.

முதல் பாதி: இலங்கை 0 – 1 நேபாளம்  

இரண்டாம் பாதி ஆரம்பமாகும்போது இலங்கை அணியின் சிபான் மற்றும் ஆகிப் ஆகியோருக்கு மாற்று வீரர்களாக மொஹமட் பசால் மற்றும் ஜுட் சுமன் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

இரண்டாம் பாதியின் இரண்டாம் நிமிடத்தில் இலங்கை கோல் எல்லைக்கு சற்று வெளியில் நேபாளத்திற்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை அஞ்சன் பிஸ்தா பெற்றார். அவர் கோலின் இடது பக்க கம்பத்தினால் வேகமாக செலுத்திய பந்தை சுஜான் பெரேரா பாய்ந்து தட்டினார்.

மீண்டும் 51ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்தைப் பெற்ற இளம் வீரர் அயுஸ் கலன், பின்களத்தில் இருந்து ஷமோத் டில்ஷானைத் தாண்டி பெனால்டி பெட்டிக்குள் வந்து நவயங் ஷிரெஷ்டாவிற்கு பந்தை வழங்க அவர் கோலுக்கு உதைந்த பந்தை சுஜான் தடுத்தார். சுஜானின் கைகளில் இருந்து வந்த பந்தை அஞ்சன் பிஸ்தா கோலுக்குள் செலுத்தி அணியை இரண்டு கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டத்தின் 55 நிமிடங்கள் கடந்த நிலையில் டிலன் டி சில்வா எதிரணியின் கோல் எல்லைவரை பந்தை கொண்டு சென்று கவிந்துவிற்கு பந்தை பரிமாற்றம் செய்தார். கவிந்து பந்தை சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினார்.

அடுத்த நிமிடம் இலங்கை வீரர்களின் கோலுக்கான முயற்சியின் பின்னர் மத்திய களத்தில் இருந்த மார்வின் ஹமில்டனுக்கு பந்து வர, அவர் அதனை நீண்ட தூர உதையாக கோலின் வலது புறத்தினால் கம்பங்களுக்குள் செலுத்த, ஹமில்டன் இலங்கை அணிக்கான தனது கன்னி கோலைப் பதிவு செய்தார்.

அதன் பின்னர் ஆட்டத்தில் இரண்டு அணியினரதும் வேகம் அதிகரித்தது. 65 நிமிடங்கள் கடந்த நிலையில் வசீம் ராசிக் பெனால்டி பெட்டிக்கு மிக அண்மையில் பெற்ற பிரீ கிக் வாய்ப்பை பின்கள வீரர் தடுத்தார்.

அதே நிமிடத்தில் மீண்டும் இலங்கை அணியின் கோலுக்கான முயற்சி தடுக்கப்பட்டு, எதிரணி வீரர்கள் இலங்கையின் கோல் எல்லையில் வந்து மேற்கொண்ட அடுத்தடுத்த இரண்டு கோல் முயற்சிகளையும் சுஜான் தடுத்தார்.

மீண்டும் 74ஆவது நிமிடத்தில், மாலைதீவுகளுக்கு எதிரான போட்டியில் நேபாளத்திற்கு கோல் பெற்றுக் கொடுத்த மனிஷ் மங்கி மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி எடுத்து வந்து இலங்கை கோல் எல்லையில் இருந்து கோலுக்கான முயற்சியை எடுக்கும்போது சுஜான் அதனைத் தடுத்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் டிலன் எதிரணியின் எல்லையில் ஒரு திசையில் இருந்து கோலுக்குள் செலுத்திய பந்தை நேபாள அணித் தலைவர் கிரன் லிம்பு கோலுக்கு அண்மையில் இருந்து கம்பத்திற்கு மேலால் தட்டிவிட்டார்.

80 நிமிடங்கள் கடந்த நிலையில் கவிந்து இஷானுக்கு கிடைத்த கோலுக்கான அடுத்த முயற்சியையும் அவர் தவறவிட்டார்.

அடுத்த 5 நிமிடங்களில் இளம் வீரர் அயுஸ் காலன் நேபாளம் தேசிய அணிக்கான தனது கன்னி கோலை அடிக்க, அவ்வணி மீண்டும் இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றது.

பின்னர், போட்டியின் உபாதையீடு நேரத்தில் இலங்கைக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பிய பந்து நேபாள வீரரின் கைகளில் பட்டமைக்காக இலங்கைக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பெற்ற டிலன் டி சில்வா இலங்கை அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றார். இது டிலன் டி சில்வா இலங்கை அணிக்காக பதிவு செய்த தனது கன்னி கோலாக இருந்தது.

எனினும், போட்டி நிறைவில் இலங்கை வீரர்களின் இறுதி நேர போராட்டங்கள் வீணாக 3-2 என, ஒரு மேலதிக கோலினால் நேபாளம் அணி வெற்றி பெற்றது.

ஏற்கனவே, முதல் போட்டியில், போட்டிகளை நடாத்தும் மாலைதீவுகள் அணியை 1-0 என வெற்றி கொண்ட நேபாள வீரர்கள் இந்த வெற்றியுடன் தொடர்ந்து இரண்டு போட்டிகளையும் வென்று 6 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ளனர். இலங்கை இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தரப்படுத்தலில் இறுதி இடத்தில் உள்ளது.

இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் ஏழாம் திகதி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

முழு நேரம்: இலங்கை 2 – 3 நேபாளம்  

கோல் பெற்றவர்கள்

நேபாளம் – சுமன் லாமா 33’, அஞ்சன் பிஸ்தா 51’, அயுஸ் காலன் 86’

இலங்கை – மாவின் ஹமில்டன் 57’, டிலன் டி சில்வா 90+4’

இந்தியா எதிர் பங்களாதேஷ்

திங்கட்கிழமை இடம்பெற்ற முதல் போட்டியில் பலம் மிக்க இந்தியாவிற்கு எதிராக பங்களாதேஷ் வீரர்கள் 10 வீரர்களுடன் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

போட்டியின் 26ஆவது நிமிடத்தில் முன்னணி வீரர் சுனில் ஷேத்தி இந்தியாவிற்கான முதல் கோலைப் பெற்றார். இரண்டாம் பாதியில் 54ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர் கோஷ் எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் 10 வீரர்களுடன் ஆடிய பங்களாதேஷ் வீரர்கள் சிறந்த பந்துப் பரிமாற்றங்களுடன் விளையாடினர். 74ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் வாய்ப்பில் பந்து உள்வந்தபோது சக வீரர் ஹெடர் செய்ய, மீண்டும் பங்களாதேஷின் யெசின் அரபாத் பந்தை பாய்ந்து ஹெடர் செய்து போட்டியை சமப்படுத்துவதற்கான கோலைப் பெற்றார்.

எனவே, போட்டி தலா ஒரு கோலுடன் நிறைவு பெற்றது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<