தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் 2021 தொடரின் ஆரம்பப் போட்டியில் இரண்டாம் பாதியை 10 வீரர்களுடன் விளையாடிய இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் 1-0 என தோல்வி கண்டது.
பங்களாதேஷ் தேசிய கால்பந்து அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின், ஆரம்பம் முதல் பங்களாதேஷ் வீரர்கள் ஆட்டத்தில் தமது ஆதிகத்தை செலுத்தினர்.
இலங்கை அணியில் வீரர்களின் நிலைகளில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், மாற்றப்பட்ட வீரர்கள் தமது புதிய நிலைகளில் விளையாடுவதில் சற்று தடுமாற்றம் கண்டனர்.
- வெற்றியுடன் SAFF தொடரை ஆரம்பிக்குமா இலங்கை?
- SAFF சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை இறுதி குழாம் அறிவிப்பு
- தேசிய அணியுடன் இணைந்த ரூமி, தேவசகாயம்
- SAFF சம்பியன் கிண்ணம் வெல்வதே இலங்கை அணியின் இலக்கு
- இலங்கை தேசிய கால்பந்து குழாத்திற்கு புதிய வீரர்கள் இணைப்பு
முதல் பாதியில் இலங்கை வீரர்கள் கோலுக்காக மேற்கொண்ட ஒரே முயற்சியாக, வசீம் ராசிக் பங்களாதேஷ் அணியின் கோணர் பகுதியில் இருந்து பின்கள வீரர்களை தாண்டி பெனால்டி எல்லைக்குள் எடுத்து வந்த பந்தை பங்களாதேஷ் பின்கள வீரர் மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.
முதல் பாதி நிறைவுறும் தருவாயில், பங்களாதேஷ் வீரர்கள் இலங்கையின் கோல் எல்லையில் வைத்து கோலுக்கு எடுத்த முயற்சியை அணித் தலைவர் சுஜான் பெரேரா பாய்ந்து வெளியே தட்டினார்.
முதல் பாதி: இலங்கை 0 – 0 பங்களாதேஷ்
இரண்டாம் பாதி ஆரம்பமாகி, 10 நிமிடங்கள் முடிவதற்குள் இலங்கை அணியின் பெனால்டி எல்லைக்குள் வைத்து, இலங்கை பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸின் கையில் பந்து பட்டதாகக் கூறி, நடுவர் பங்களாதேஷ் அணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பை வழங்கினார்.
இதன்போது பியுஸ்லஸிற்கு போட்டியின் இரண்டாவது மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டது. எனவே, அவர் சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அந்த வாய்ப்பைப் பெற்ற பங்களாதேஷ் பின்கள வீரர் தொபொ பர்மான் பந்தை கோலுக்குள் உதையும்போது சுஜான் பெரேரா வலது பக்கத்திற்கு பாய்ந்தார். எனினும், பந்து இடது பக்கத்தினால் கோலுக்குள் செல்ல, பங்களாதேஷ் முன்னிலை பெற்றது.
இதன் பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய இலங்கை அணி, போராட்டத்தை விடவில்லை. எனினும், இலங்கை அணியினால் கோலுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. இரண்டாம் பாதியில் எடுத்த ஒரே முயற்சியாக கவித்து இஷான் மத்திய களத்தில் இருந்து உதைந்த பந்து பங்களாதேஷ் அணியின் கோல் கம்பத்தின் வலது பக்கத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.
10 வீரர்களுடன் விளையாடினாலும் இலங்கை வீரர்கள் இரண்டாம் பாதியின் பின் பகுதியில் மிகவும் ஆக்ரோசமாக விளையாடினர். எனினும், போட்டி நிறைவில் பெனால்டியினால் பெற்ற கோலினால் பங்களாதேஷ் அணி 1-0 என வெற்றி பெற்றது.
இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் 4ஆம் திகதி நேபாளம் அணியினை எதிர்கொள்ளவுள்ளது.
முழு நேரம்: இலங்கை 0 – 1 பங்களாதேஷ்
கோல் பெற்றவர்கள்
- பங்களாதேஷ் – தொபொ பர்மான் 56’(P)
மஞ்சள் அட்டை
பங்களாதேஷ் – யசின் அரபாத் 16’, ரகிப் ஹுஸைன் 76’, சுமொன் ரிசா 60’
இலங்கை – டக்சன் பியுஸ்லஸ் 7′ & 54’, ஷரித்த ரத்னாயக்க 60’, ஷமோத் டில்ஷான் 68’
சிவப்பு அட்டை
இலங்கை – டக்சன் பியுஸ்லஸ் 54’ (YC 7’)
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<