100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாளான இன்று (09) நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற இளம் குறுந்தூர ஓட்ட வீரரான மொஹமட் சபான், 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
அதேபோன்று, ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கிழக்கின் இஸட்.ரி.எம் ஆஷிக் வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கின் என்.டக்சிதா வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்று (08) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
போட்டித் தொடரின் இரண்டாவது நாளான இன்று (09) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் சபான் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 21.44 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று மற்றும் அரை இறுதிப் போட்டிகளில் அவர் முதலிடங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற மொஹமட் சபான், இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான 2ஆவது தகுதிகாண் போட்டியிலும், கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியிலும் முதலிடங்களைப் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட சபான், போட்டியை 10.91 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பிடித்தார்.
தட்டெறிதலில் ஆஷிக் அபாரம்
ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரரான இஸட்.ரி.எம். ஆஷிக், 43.323 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இறுதியாக, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது அத்தியாயத்தில் 46.85 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டக்சிதாவுக்கு வெண்கலப் பதக்கம்
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட யாழ். வீராங்கனை என். டக்சிதா. 3.40 மீட்டர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற அவர், காலில் ஏற்பட்ட உபாதைக்கு மத்தியில் போட்டியிட்டு பதக்கம் வென்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.
இறுதியாக அவர், கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான 2ஆவது தகுதிகாண் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புவிதரன், அரவிந்தனுக்கு ஏமாற்றம்
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற யாழ். வீரர் அருந்தவராசா புவிதரன், இன்று காலை நடைபெற்ற கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்டார். எனினும், அவர் மேற்கொண்ட முதல் மூன்று முயற்சிகளிலும் இலக்கை தவறவிட்டு துரதிஷ்டவசமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான 2ஆவது தகுதிகாண் போட்டியில் 5.10 மீட்டர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பிடித்த அவர், இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ஒரு மீட்டரினால் தவறவிட்டார்.
>>Photos – 100th National Athletics Championship – Day 2
இதனிடையே, ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையக வீரரான சி. அரவிந்தன், போட்டித் தூரத்தை ஒரு நிமிடமும் 51.81 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான 2ஆவது தகுதிகாண் போட்டியில் அவர் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச் சுற்றில் மொஹமட் அஷ்ரப் 2ஆவது இடத்தையும், பாசில் உடையார் 3ஆவது இடத்தையும் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<