இலங்கை சாதனையை முறியடித்த சச்சினி, ஹிரூஷ

314

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (10) ஆரம்பமாகிய ஆசிய விளையாட்டுப் விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் இராணுவ வீராங்கனை சச்சினி பெரேரா பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.65 மீட்டர் தூரம் கடந்து புதிய இலங்கை சாதனை படைத்தார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சம்பியனான இவர், இதுவரை நான்கு தடவைகள் இலங்கை சாதனையை முறியடித்துள்ளார். இறுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 3.60 மீட்டர் தூரம் கடந்து இலங்கை சாதனை நிகழ்த்தியிருந்தார்.

குறித்த போட்டியில் இலங்கை கடற்படையின் சில்வா (3.40 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், இலங்கை விமானப்படையின் ரணசிங்க (3.30 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். ‘

இதனிடையே, பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஆசிய சாதனைக்குரிய சொந்தக்காரியாக சீன நாட்டைச் சேர்ந்த லீ லீங் (4.72 மீட்டர்) வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை அமாஷா டி சில்வா பெற்றுக்கொண்டார். முன்னாள் தேசிய சம்பியனான ருமேஷிகா ரத்னாயகவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த அவர், 11.63 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்தார்.

இதில் ருமேஷிகா ரத்னாயக (11.68 செக்.) இரண்டாவது இடத்தையும், சபியா யாமிக் (11.82 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, பெண்களுக்கான 100 மீட்டர் இறுதிப்போட்டியில் முதல் 5 இடங்களையும் பெற்றுக்கொண்ட வீராங்கனைகள் போட்டியை 12 செக்கன்களுக்குள் நிறைவு செய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 4X100 அஞ்சலோட்டத்தில் இலங்கை பெண்கள் அணியை இடம்பெறச் செய்வதற்கான சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது.

இதனிடையே, விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் சமோத் யோதசிங்க முதலிடத்தையும், சானுக தர்மகீர்த்தி இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். குறித்த வீரர்கள் இருவரும் 10.53 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், போட்டியை 10.54 செக்கன்களில் நிறைவு செய்த சன்ஜய மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

மேலும், ஆண்களுக்கான 400 மீட்டரில் நடப்பு தேசிய சம்பியனான காலிங்க குமாரகே (47.00 செக்.) முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, பெண்களுக்கான 400 மீட்டரில் முதலிடத்தை 18 வயது இளம் வீராங்கனையான தருஷி கருணாரட்ன (56.17 செக்.) பெற்றுக்கொண்டார்.

இது இவ்வாறிருக்க, இந்த ஆண்டு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு கனிஷ்ட வீரர்களுக்கான தகுதிகாண் போட்டிகளும் நேற்று (10) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

Photos – Asian Games First Trials & Juniors Trials

இதில் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (11) நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தலில் ஹிரூஷ ஹஷேன், 7.67 மீட்டர் தூரம் பாய்ந்து கனிஷ்ட பிரிவில் இலங்கை சாதனை படைத்தார்.

அத்துடன், எதிர்வரும் ஜுலை மாதம் கொலம்பியாவில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்து அதில் பங்குபற்றுகின்ற வாய்ப்பையும் உறுதிசெய்தார்.

எவ்வாறாயினும், மைதான நிகழ்ச்சியைப் போல சுவட்டு நிகழ்ச்சியிலும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஹிரூஷ ஹஷேன், நேற்று (10) நடைபெற்ற கனிஷ்ட வீரர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.95 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<