பங்களாதேஷ் அணியின் மூன்று முன்னணி வீரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

433
Image courtesy - Cricrevolution

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சபீர் ரஹ்மான், மொஷ்டாக் ஹுசைன் மற்றும் நசீர் ஹுசைன் ஆகியோர் நாளை (01) ஒழுக்காற்று விசாரணைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களின் நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும்  முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களில் ரூபல் ஹுசைன், அல் அமின் ஹுசைன், சஹடாத் ஹுசைன் மற்றும் அரபாட் சன்னி ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறைக்கு சென்று வந்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், பங்களாதேஷ் வீரர்கள் மைதானத்தில் நடந்துக்கொள்ளும் விதம் மற்றும் ரசிகர்களுடன் முரண்படுதல் என தொடர்ந்தும் பல குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகின்றனர்.

“வீரர்களின் தவறுகளை திருத்திக்கொள்வதற்கு கிரிக்கெட் சபை வாய்ப்புகள் கொடுத்தும், அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இம்முறை குறித்த மூன்று வீரர்களுக்குமான குற்றம் நிரூபிக்கப்படுமானால் பாரபட்சமற்ற தண்டனை வழங்கப்படும்” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜிமுல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியில் மோசமான நடத்தைக் காரணமாக அதிகம் அடையாளம் காணப்படுபவர் சபீர் ரஹ்மான். இறுதியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி தோல்விக்கண்டிருந்தது. இந்த போட்டியின் பின்னர் சமுகவலைத்தளத்தில் ரசிகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் அணியின் சக வீரர் மெஹிதி ஹாசனுடன் முரண்பட்ட குற்றச்சாட்டுக்கும் இவர் முகங்கொடுத்துள்ளார்.

சபீர் ரஹ்மான் 2017ம் ஆண்டு உள்ளூர் போட்டியொன்றில் ரசிகர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டுக்காக அபராதம் உட்பட உள்ளூர் போட்டிகளில் 6 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டார். இதனால், தற்போது இவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்காக குறைந்தது சர்வதேச போட்டிகளில் விளையாட 6 மாத தடை விதிக்கப்படலாம் என கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நசீர் ஹுசைனின் காதலி சஹா ஹுமர்யா சுபா என்பவர், நசீர் ஹுசைன் முறையற்ற வகையில் பேசிய தொலைபேசி அழைப்பின் பதிவொன்றை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த விடயம் தொடர்பாக நசீர் ஹுசைன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு காரணமாக மொஷ்டாக் ஹுசைன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விசாரணையின் மூலம் வீரர்கள், தங்கள் பக்கத்தில் உள்ள நியாயங்களை முன்வைக்க முடியும். எனினும் வீரர்கள் தவறிழைத்துள்ளார்களா? இல்லையா? என்பதனை கிரிக்கெட் சபையின்  ஒழுக்காற்று குழு தீர்மானிக்கும். இதன்பின்னர் நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர், வீரர்கள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை வீரர்கள் தொடர்ந்தும் மோசமான நடத்தை தொடர்பான விடயங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் தண்டனைகளை கடுமையாக்க எதிர்பார்த்துள்ளதுடன், அணிக்கான புதிய உளவியலாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அறிவித்துள்ளது.