SABA சம்பியன்ஷிப் வெற்றியாளர் மகுடத்துடன் நாடு திரும்பிய இலங்கை அணி

270

டாக்காவில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன (SABA) சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளர்களாக முடிசூடியிருக்கும் இலங்கை கூடைப்பந்து அணி நேற்று இரவு (01) தாயகத்தினை வந்தடைந்தது.

ஹெட்ரிக் வெற்றியுடன் SABA சம்பியன்ஷிப் தொடரில் முன்னேறும் இலங்கை

பங்களாதேஷ் டாக்கா நகரில் நடைபெற்று வருகின்ற….

கடந்த மாதம் 27ஆம் திகதி இந்த தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடர் ஆரம்பித்திருந்தது. இந்த தொடரில் வெற்றியாளர்களாகும் கனவுடன் இலங்கை, மாலைதீவு, பூட்டான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் கூடைப்பந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.

சர்வதேச கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIBA) புதிய விதிமுறைகளின் படி தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடர், 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய கிண்ண கூடைப்பந்து தொடரின் தகுதிகாண் போட்டிகளின் ஒரு அங்கமாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் பங்கேற்ற இலங்கை கூடைப்பந்து அணி தாம் விளையாடிய முதலாவது போட்டியில் பங்களாதேஷினை 65-34 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடிந்திருந்ததுடன் நேபாளம், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளையும்  முறையே 70-57, 82-57, 71-60 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி எந்தவித தோல்விகளுமின்றி தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன தொடரின் வெற்றியாளர்களாக புதிய அத்தியாயம் படைத்திருந்தது.

இலங்கையின் கூடைப்பந்து அணி தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் வெற்றியாளர்களாக மாறியது இதுவே முதல்தடவையாகும்.

Photos : Sri Lanka, South Asian Basketball Champions 2018 – Team Arrival

waPhotos of Sri Lanka, South Asian Basketball Champions 2018…

இத்தொடரில் வெற்றியாளர்களாக மாறியுள்ள இலங்கை கூடைப்பந்து அணியும்  இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட அணியும், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கூடைப்பந்து தொடரின் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாம் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றன.

இலங்கை கூடைப்பந்து அணியின் வெற்றி பற்றி பேசியிருந்த இலங்கை கூடைப்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுசில் உடுகும்புர, “ நாங்கள் அடைந்து கொண்ட விடயத்திற்காக மிகவும் சந்தோசமடைகின்றோம். இந்த தொடருக்காக பயிற்சிகளை மேற்கொள்ள எங்களுக்கு ஒரு மாதம் மாத்திரமே முன்னர் எஞ்சியிருந்தது. எங்களது பயிற்சி வேளைகள் (Practice Sessions) மிகவும் நல்ல முறையிலும், அதிக அர்ப்பணிப்பு கொண்டதாகவும் அமைந்திருந்தது.

நாங்கள் SABA சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளர்களாக மாறுவதையே ஒரே கனவாக வைத்திருந்தோம். இந்த கனவு பற்றிய உரையாடல்களையே தொடரின் ஆரம்பத்தில் இருந்து வீரர்களுடன் நான் மேற்கொண்டிருந்தேன். தற்போது வீரர்களுக்கும், இலங்கையின் கூடைப்பந்து சம்மேளனத்திற்கும், இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் எங்களது உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இலங்கை கூடைப்பந்து அணியின் சிரேஷ்ட வீர்ரகளில் ஒருவரான ரொஷான் ரந்திம கதைத்திருந்த போது, கடைசியாக இடம்பெற்ற தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் விட்ட பிழைகளை திருத்தி ஒரு அணியாக ஒன்றிணைந்து செயற்பட்டதே இம்முறைக்கான தொடரில் முதற்தடவை வெற்றியாளர்களாக மாற காரணமாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.

காணொளிகளைப் பார்வையிட

மேலும் ரந்திம, 2021 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கூடைப்பந்து தொடரின் இரண்டாம் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாம் சுற்று கடினமாக இருக்கும் என்பதால் அதற்கு தயாராக இன்னும் அதிகம் உழைக்க வேண்டி இருப்பதன் அவசியத்தினையும் விளக்கியிருந்தார்.

இலங்கை கூடைப்பந்து அணியின் முகாமையாளர் ஹசேந்திர பெர்னாந்து பேசும் போது, வீரர்கள் நூறு சதவீத பங்களிப்பினை வழங்கியதே இலங்கையின் கூடைப்பந்து வரலாற்றில் இப்படியானதொரு வெற்றியினை பெறக் காரணம் எனக் கூறியிருந்தார்.

முதற்தடவையாக தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரினை வென்ற இலங்கை கூடைப்பந்து அணிக்கு ThePapare.com உம், தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க