கொரோனா 3ஆவது அலை மற்றும் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த தெற்காசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க அந்நாட்டு மெய்வல்லுனர் சம்மேனனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட 6 தெற்காசிய நாடுகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண தெற்காசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் உள்ள கொஹீமாவில் நடைபெறவிருந்தது. நாகலாந்து மாநிலத்தில் நடைபெறும் முதலாவது சர்வதேச மெய்வல்லுனர் போட்டியாக இது அமைந்தது.
அதேபோல, தெற்காசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் தொடருடன், இந்தியாவின் 56ஆவது தேசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் தொடரையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- டாக்கா சர்வதேச மரதனில் பங்குபற்றும் மலையக வீரர்கள்
- தெற்காசிய நகர்வல ஓட்டத்தில் பங்குபற்றும் சண்முகேஸ்வரன்
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை ஆரம்பமாகியிருக்கிறது. கடந்த வாரம் வரை ஆயிரக்கணக்கில் மக்கள் தினசரி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இலட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றோடு சேர்ந்து ஒமிக்ரோன் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது. இதில் ஒமிக்ரோன் தொற்றால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுஇவ்வாறிருக்க, இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக இந்தியாவின் 56ஆவது தேசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் தொடரையும், தெற்காசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் தொடரையும் காலவரையரையின்றி ஒத்திவைப்பதாக இந்திய மெய்வல்லுனர் சம்மேளனம் வெள்ளிக்கிழமை (07) அறிவித்துள்ளது.
இதனிடையே, குறித்த தொடருக்காக இலங்கையிலிருந்து 12 வீரர்கள் கொண்ட குழுவொன்றை பங்குபற்றச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<