தென்னாபிரிக்காவின் உள்ளூர் T20 லீக் தொடரான SA20 தொடரின் புதிய பருவத்திற்கான (2025) வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பதிரண ஜொபேர்க் சுப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
>>புதிய டெஸ்ட் தலைவரைப் பெறும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி
SA20 தொடரின் புதிய தொடரிற்கான வீரர்கள் ஏலம் நேற்று (01) நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஏலத்தில் Wildcard முறை மூலமாக மதீஷ பதிரண ஜொஹன்னஸ்பேர்க் நகரினை அடிப்படையாக கொண்ட ஜொபேர்க் சுப்பர் கிங்ஸ் அணி மூலம் இன்று (02) ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினை பிரதிநிதித்துவம் செய்யும் மதீஷ பதிரண, சென்னை அணியின் உரிமையாளர்களுக்கு சொந்தமாக காணப்படும் ஜொபேர்க் சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதன் மூலம் குறிப்பிட்ட SA20 தொடரில் முதல் முறையாக ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேநேரம் SA20 தொடரின் வீரர்கள் ஏலத்தில் இம்முறை அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக தென்னாபிரிக்க முன்வரிசை துடுப்பாட்டவீரரான ரீசா ஹென்ரிக்ஸ் மாறியிருக்கின்றார். ஹென்ரிக்ஸை MI கேப் டவுன் அணியானது தென்னாபிரிக்க 4.3 மில்லியன் ரேன்ட்களுக்கு (இலங்கை நாணயப்படி சுமார் 73 மில்லியன் ரூபாய்கள்) வாங்கியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அதேவேளை MI கேப் டவுன் அணியில் மதீஷ பதிரணவின் பந்துவீச்சுப் பாணியில் பந்துவீசுகின்ற நுவான் துஷாரவும் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்த அனுபவ விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்திக்கை பார்ல் ரோயல்ஸ் அணி மதீஷ பதிரண போன்று Wildcard வீரராக வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் புதிய பருவத்திற்கான SA20 லீக் தொடர் அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் 09ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 09ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.