தென்னாபிரிக்காவை பதம் பார்த்தார் ரூட்

551
தென்னாபிரிக்காவை பதம் பார்த்தார் ரூட்

டி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்றைய நாளில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியுசிலாந்து அணி அவுஸ்திரேலியா அணியை 8 ஓட்டங்களால் தோல்வி அடையச் செய்து இருந்தது.

அதன் பின் நடைபெற்ற 2ஆவது போட்டியில் இயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி பெப் டுப்லெசிஸ் தலைமையிலான தென் ஆபிரிக்கா அணியை எதிர் கொண்டது.

மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த சூப்பர் 10 போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயோன் மோர்கன் தென் ஆபிரிக்கா அணியை முதலில் துடுப்பாட அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று களம் இறங்கிய தென் ஆபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஹசீம் அம்லா மற்றும் குயின்டன் டி கொக் ஆகிய இருவரும் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை விளாசி ஓட்டங்களைக் குவித்தார்கள். முதல் 6 ஓவர்களில் விக்கட்டுகள் இழப்பின்றி 83 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை நொறுக்கி சிறந்த ஒரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தார்கள். முதலாவது விக்கட்டுக்காக ஹசீம் அம்லா மற்றும் குயின்டன் டி கொக் ஜோடி 43 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதன் பின் முதல் விக்கட்டாக பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழையை பொழிய விட்ட குயின்டன் டி கொக் 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 52 ஓட்டங்களை விளாசி விட்டு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த 360 பாகை என்று வர்ணிக்கப்படும் .பி.டி விளியர்ஸ் வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களை தகர்த்து விட்டு 8 பந்துகளில் 16 ஓட்டங்களைப் பெற்று விட்டு ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஆரம்பம் முதல் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக பறக்க விட்ட ஹசீம் அம்லா 31 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இவ்வாறு விக்கட் வீழ்த்தப்பட ஆடுகளம் வந்த எல்லா வீரர்களும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்து விட்டு வெளியேறினர்.

இறுதி நேரத்தில் களம் இறங்கிய ஜே.பி டுமினி மிக அபாரமாக விளையாடி 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்தார். மறு முனையில் ஜே.பி டுமினியோடு ஜோடி சேர்ந்த கில்லர்என்று வர்ணிக்கப்படும் டேவிட் மில்லரும் மிக அபாரமாக விளையாடி 12 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களைக் குவித்தார். இவர்கள் இருவரும் 5ஆவது விக்கட்டுக்காக 27 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். இறுதியில் தென் ஆபிரிக்கா அணி நிர்ணயம் செய்யபப்ட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 229 ஓட்டங்களைக் குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் மொயின் அலி 2 விக்கட்டுகளையும் வில்லே மற்றும் ஆதில் ரஷிட் ஆகியோர் தலா 1 விக்கட்டுகள் வீதம் கைபற்றினர்.

இவர்களது இந்த அணல் பறந்த ஆட்டத்தைத் தொடர்ந்து 230 என்று பாரிய வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் அலெக்ஸ் ஹெல்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ரபடா வீசிய முதல் ஓவரை எதிர் கொண்ட ஜேசன் ரோய் முதல் 2 பந்துகளில் பவுண்டரிகளை விளாசி முதல ஒவரிலேயே பந்து வீச்சாளர்களை பதம் பார்க்கத் தொடங்கினார். முதல் ஓவரில் ஜேசன் ரோய் 4 பவுண்டரிகளை பெற முதல் ஓவர் முடிவில் 21 ஓட்டங்களைப்ப் பெற்று இருந்தது இங்கிலாந்து அணி. 2ஆவது ஓவரை டேல் ஸ்டெய்ன் வீசினார். அவரின் ஓவரில் மறு முனையில் ஓட்டங்களை குவிக்கும் தாகத்தில் இருந்த அலெக்ஸ் ஹெல்ஸ் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி தனது தாகத்தை சற்றுத் தீர்த்தார். 2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி மிக அமோகமானதோர் ஆரம்பத்தைப் பெற்று விக்கட் இழப்பின்றி 44 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. 3ஆவது ஓவரில் அலெக்ஸ் ஹெல்ஸ் மேலும் ஓட்டங்களைக் குவிக்க முயன்ற போது 7 பந்துகளில் 17 ஓட்டங்களோடு எல் .பி .டப்ளியு முறையில் ஆட்டம் இழந்தார். அதன் பின் இங்கிலாந்து அணியின் ஓட்ட வேகத்தை பராமரிக்க அதிரடி ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் களம் புகுந்தார்.

ஆனால் அவர் பெரிதாக பிரகாசிக்கவில்லை அவர் 17 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அனைவரும் தமது பணிகளை செய்து இறுதியில் கடைசி ஓவரில் 1 ஓட்டங்களை பெரும் நிலை ஏற்பட்டது. அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் விக்கட்கள் வீழ்த்தப்பட இங்கிலாந்து அணி சற்று சிரமத்தை எதிர்கொண்டது. கடைசி ஓவரின் 3ஆவது பந்தை மொயின் அலி தடுத்தாட 3 பந்துகளில் 1 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. அதன் பின் 4ஆவது பந்தில் மொயின் அலி 1 ஓட்டத்தைப் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்கைக் கடக்க உதவினார். இறுதியில் இங்கிலாந்து அணி 2 பந்துகள் மீதமிருக்க 2 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டதில் ஜோய் ரூட் மிக அருமையாக விளையாடி 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 83 ஓட்டங்களைக் குவித்தார். இவரைத் தவிர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் 15 பந்துகளில் 5 பவுண்டரிகள்  மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 43 ஓட்டங்களை விளாசினார். தென் ஆபிரிக்கா அணியின் பந்து வீச்சில் அபொர்ட் 3 விக்கட்டுகளையும் ரபடா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜோய் ரூட் தெரிவு செய்யப்பட்டார். இங்கிலாந்து அணியின் இவ்வெற்றியானது டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் வரலாற்றில் 2ஆவதாக துடுப்பாடி அதி கூடிய ஓட்டங்களைத் துரத்திச் சென்று பெறப்பட்ட முதல் வெற்றியாகும். அத்தோடு சர்வதேச டி20 கிரிக்கட் வரலாற்றில் அதி கூடிய ஓட்டங்களைத் துரத்திச் சென்று பெறப்பட்ட  இரண்டாவது வெற்றி இதுவாகும் என்பது முக்கிய அம்சமாகும். 6ஆவது .சி.சி 20க்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் அடுத்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.