காமினி திஸாநாயக்க போட்டிக் கிண்ணத்திற்காக நடைபெற்று வரும் இரண்டாவது இளைஞர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் குருணாகலை மலியதேவ கல்லூரியின் இடதுகைச் சுழற்பந்து வீச்சாளர் தமித சில்வா 56 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களைப் பெற்று தென்னாபிரிக்கா 19கீ அணியை 244 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தினார்.
தென்னாபிரிக்க அணி 144 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து சிறப்பான நிலையை எட்டினாலும் இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் இறுதி 99 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
தென்னாபிரிக்க 19கீ அணியின் தலைவர் வியான் முல்டர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடுவதென தீர்மானித்தார். இலங்கை அணி கடந்த போட்டியில் விளையாடிய அனுபவ விக்கட் காப்பாளர் விஷாட் ரந்திக மற்றும் இடதுகைச் சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோருக்கு ஓய்வளித்து புனித ஆலோசியஸ் கல்லூரியின் விக்கட் காப்பாளர் நவிந்து நிர்மல் மற்றும் சகலதுறை வீரர் வனித வன்னிநாயக்கவை அணிக்குள் இணைத்துக் கொண்டது.
தென்னாபிரிக்காவின் ஆரம்ப இணைப்பாட்ட ஜோடி ரிகார்டோ வன்கொன்செலஸ் மற்றும் ரெய்னர் வன் டொன்டென் 101 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது. மத்திய இடைவேளைக்கு சற்று முன்பு உப தலைவர் சம்மு அஷான், ரிகார்டோ வன்கொன்செலஸ்சின் விக்கட்டை கைப்பற்றினார். வன்கொன்செலஸ் 9 பவுண்டரிகள் அடங்கலாக 90 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மதிய இடைவேளைக்குப்பின் தொடர்ந்த ஆட்டத்தில், சில்வா, ரெய்னர் வன் டொன்டென் மற்றும் ஜெரோம் பொஸ் ஆகியோரை விக்கட்களை அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் கைப்பற்றி இலங்கை அணிக்கு ஊக்கமளித்தார். எனினும் தென்னாபிரிக்க அணித்தலைவர் முல்டர் மற்றும் வன் ஹீர்டன் இருவரும் நான்காவது விக்கட்டிற்காக 58 ஓட்டங்களைப் பெற்று அணியை ஸ்திரப் படுத்தினர்.
எனினும் இறுதி ஆட்ட வேளையில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டு அனைத்து விக்கட்களையும் கைப்பற்றினர். 204 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களை இழந்திருந்த தென்னாபிரிக்கா 244 ஓட்டங்களுக்கு சுருண்டது. மேலும் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
முல்டர் போராடி 112 பந்துகளில் 63 ஓட்டங்களை பெற்றார். வன் ஹீர்டன் அணியின் அதிக ஓட்ட எண்ணிக்கையாக 209 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பெற்றார். இருவரும் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் திலான் ப்ரஷானின் பந்துவீச்சிற்கு ஆட்டமிழந்தனர்.
சில்வா கைப்பற்றிய 4 விக்கட்களும் LBW முறையிலேயே பெறப்பட்டது. மேலும் சில்வா இறுதி விக்கட்டினை ரன் அவுட் முறை மூலம் தனதாக்கிக் கொண்டார்.
போட்டியின் இரண்டாம் நாள் நாளை (புதன் கிழமை) நடைபெறும்.
தென்னாபிரிக்கா 19கீ- 91.2 ஓவர்களில் 244 ஓட்டங்கள். ஜோஷுவா வன் ஹீர்டன் 81, ரிகார்டோ வன்கொன்சலஸ் 53, வியான் முல்டர் 63, தமித சில்வா 4/56, திலான் ப்ரஷான் 2/60, சம்மு அஷான் 2/35.