சச்சின், யூசுப் பதானைத் தொடர்ந்து பத்ரிநாத்துக்கும் கொவிட்-19 தொற்று

228

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான் ஆகியோர் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பத்தை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக பத்ரிநாத் அறிவித்துள்ளார்.

>>சச்சின் டெண்டுல்கருக்கு கொவிட்-19 தொற்று!

சமீபத்தில் ராய்ப்பூரில் நடைபெற்ற வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு உலக T20 கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று விளையாடினார். அவரது தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி, தொடரின் இறுதிப் போட்டியில் திலகரட்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நேற்றுமுன்தினம் (27) உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில்,

”எனக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கான சிறிய அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் குறித்த தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறேன். எனக்கும், நாட்டில் உள்ள பலருக்கும் உதவிக்கரமாக இருந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

>>Video – Legends தொடரில் Dilshan & Co படைத்த சாதனைகள்..!|Sports RoundUp – Epi 154

இதனிடையே, சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து வீதிப் பாதுகாப்பு உலக T20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதானும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் சமீபத்திய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதித்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என உறுதிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

”தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டுள்ளேன். தொடர்ந்து பரிசோதனையும் மேற்கொண்டு வந்தேன். இதில், சிறிய அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்ற இருக்கிறேன். வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். மருத்துவர் ஆலோசனைப்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். பாதுகாப்புடன் இருங்கள்” என்று தெரிவித்து உள்ளார்.

>>அடுத்த பருவகாலத்திற்கான லெஜன்ட்ஸ் T20 இவ்வருட இறுதியில்

இந்தியாவுக்காக 2 டெஸ்ட் போட்டிகள், 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள பத்ரிநாத், சமீபத்தில் நடந்து முடிந்த வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு உலக T20 கிரிக்கெட் போட்டியில், வீரர்கள் உடைமாற்றும் அறையை சச்சின் மற்றும் யூசுப் பதானுடன் ஒன்றாக பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ராய்ப்பூரில் நடைபெற்ற வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு உலக T20 கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டங்கள் முதல் இறுதிப் போட்டி வரை ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மறுபுறத்தில், ஓய்வுபெற்ற இந்திய வீரர்களுக்கு மாத்திரம் தனியாக ஏன் உயிரியல் பாதுகாப்பு வலயத்தை போட்டி ஏற்பாட்டாளர்கள் உருவாக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<