2020 ஒலிம்பிக், 2022 பிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

176
(AP Photo/Mark Humphrey, file)

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான முக்கியமான சர்வதேசப் போட்டிகளிலும் ரஷ்யா தனது தேசியக் கொடியைப் பயன்படுத்தவும், தேசிய கீதத்தை இசைக்கவும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (வாடா) தடை விதித்துள்ளது.

போலியான ஆதாரங்கள் அளித்தல், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆவணங்களை அளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் இந்தத் தடையை ரஷ்யாவுக்கு விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து காலிங்க குமாரகே விடுவிப்பு

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து…………

இந்த தடையால் டோக்யோவில் நடைபெறவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்காவில் நடைபெற இருக்கும் 2021 உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் 2022இல் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ணத் தொடரில் ரஷ்யா பங்கேற்க முடியாது.

2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பல ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய தடகள வீரர்கள் மிகப் பெரிய அளவில் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது பற்றி உறுதிப்படுத்தியது. 

அதனைத்தொடர்ந்து ரஷ்ய தடகள வீரர்கள் தொடர்பான ஊக்கமருந்து சர்ச்சைகள் அதிகரித்தன. கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடர்களிலும் பல வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. 

2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய அரசே முன்னின்று வீரர்களுக்கு ஊக்கமருந்து அளித்தது குறித்த தகவலை அடுத்து, கடந்த 2015 நவம்பர் மாதம் 15ஆம் திகதி தடை விதிக்கப்பட்டது. 

இதனால் 2016 றியோ ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்களுக்கு பற்கேற்க முடியாமல் போனது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 

இந்த தடையை தொடர்ந்து, அந்நாட்டின் 168 வீரர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு தென்கொரியாவின் பியாங்யொங் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பொது கொடி ஒன்றின் கீழ் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், மொஸ்கோவில் உள்ள ஊக்கமருந்து பரிசோதனைக் கூடத்தில் வீர, வீராங்கனைகளுக்கு எடுக்கப்பட்ட ஊக்கமருந்து சோதனை மாதிரிகளில் தவறான விவரங்களையும், போலியான விவரங்களையும் அளித்ததாகக் கடந்த மாதம் தகவல் வெளியானது. 

இதுதொடர்பாக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு விசாரணை நடத்தியதில் ரஷ்ய அரசே இதில் ஈடுபட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, குறித்த தடை ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் லாசேன் நகரில் உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் செயற்குழு கூட்டம் இன்று (09) நடைபெற்றது.

இதன்போது அடுத்துவரும் நான்கு வருடங்களில் நடைபெறவுள்ள எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2022 உலகக் கிண்ணப் போட்டிகளில் ரஷ்யாவின் தேசிய கீதமும் கொடியும் அனுமதிக்கப்படமாட்டாது.   

SAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல்

நேபாளத் தலைநகர் கத்மண்டுவில்……………….

அத்துடன், ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் பட்சத்தில், பொதுவான கொடியின் கீழ் அந்த போட்டிகளில் பங்கேற்கலாம்.

மேலும், ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவது தொடர்பாக ரஷ்யாவில் உலக சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் தகுதியும் ரத்து செய்யப்படவுள்ளது. 

இந்த அனைத்து முடிவுகளுக்கும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் நிர்வாகிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதேசமயம், ரஷ்யாவைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் முக்கியமான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம். ஆனால், அவர்கள் ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கி இருக்கக் கூடாது. 

அவர்களின் ஊக்கமருந்து தொடர்பான புள்ளிவிபரங்கள் திருத்தப்பட்டு இருக்கக் கூடாது என்று சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது

SAG கிரிக்கெட்: தங்கப் பதக்கத்தை இழந்த இலங்கை ஆடவர் அணி

தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆடவர்……………

இதேநேரம், உலக சம்பியன்ஷிப் போட்டி, கால்பந்து உலகக் கிண்ண தகுதிச்சுற்று போன்றவற்றில் ரஷ்ய அணிகள் பங்கேற்கலாமா என்பது குறித்துத் தெளிவான அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை. 

இதேவேளை, இந்தத் தடை உத்தரவை எதிர்த்து ரஷ்யா அடுத்த 21 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<