பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளாக ரசல் டொமிங்கோ

294
Image Courtesy : ICC

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 44 வயதான ரசல் டொமிங்கோ நியமிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இன்று (17) அறிவித்துள்ளது.

ரசல் டொமிங்கோ பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இரண்டு வருடங்களுக்கு செயற்படும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபையின் தலைவர் நஷ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ப்ரெண்டன் மெக்கலம் நியமனம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும்…..

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ரோட்ஸ், பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்தார். இவரின் பயிற்றுவிப்பின் கீழ் பங்களாதேஷ் அணி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடியதுடன், 8வது இடத்தை பிடித்திருந்தது. உலகக் கிண்ணத்தின் பின்னர் ஸ்டீவ் ரோட்ஸ் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக புதிய ஒரு பயிற்றுவிப்பாளரை நியமிக்கும் நடவடிக்கைகளை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மேற்கொண்டிருந்தது.

இதன் அடிப்படையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆத்தர், ரசல் டொமிங்கோ, நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன் ஆகியோர் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு முன்னணி விண்ணப்பதாரர்களாக இருந்தனர். 

இவர்களுடன், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சந்திக்க ஹதுருசிங்கவும் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், நீண்டகால திட்டங்களுக்கு ஏற்ற வகையில், ரசல் டொமிங்கோ மாத்திரமே இருப்பதாக தெரிவித்து, அவரை இரண்டு வருடங்கள் ஒப்பந்தம் ஊடாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இணைத்துள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளில் பங்களாதேஷ் அணி சிறப்பாக செயற்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற  நாடுகளில் முன்னேற்றத்தை அடையும் முகமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பயிற்றுவிப்பாளர் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை குறித்து, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஷ்முல் ஹசன் குறிப்பிடுகையில், “ரசல் டொமிங்கோ, பங்களாதேஷ் தேசிய அணி, ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணி என்பவற்றை ஒன்றிணைக்கும் வகையிலான திட்டமொன்றை எம்மிடம் கூறினார்.

மீண்டும் கோஹ்லி அசத்த ஒருநாள் தொடர் இந்தியா வசம்

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு….

அதுமாத்திரமின்றி முழுநேரமும் எமது நாட்டில் இருந்து பணிபுரிவதற்கான ஒப்புதலை அவர் அளித்துள்ளதுடன், அணி மீதான சிறந்த ஈர்ப்பினை அவர் கொண்டுள்ளார். கிரிக்கெட் சபை என்ற ரீதியில் முழுநேரமும் வீரர்களுடன் இருந்து செயற்படும் பயிற்றுவிப்பாளர் ஒருவர் எமக்கு தேவை. அதன் காரணமாகவே ரசல் டொமிங்கோவை பயிற்றுவிப்பாளராக தெரிவுசெய்துள்ளோம்” என்றார்.

புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ரசல் டொமிங்கோ எதிர்வரும் 21ம் திகதி தனது பணியை பங்களாதேஷ் அணியுடன் இணைந்து ஆரம்பிப்பார் என கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<