சங்கக்கார தொடர்பில் நீங்கள் அறியாதவையை கூறும் ரசல் ஆர்னல்ட்

153

இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பக்கூடியவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தொடர்பிலான சில விடயங்களை  இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் வெளிப்படுத்தியுள்ளார்.

குமார் சங்கக்கார தேசிய அணியில் விளையாடுதவதற்கு முன்னர் உள்ளூர் கழகமான NCC அணியில் விளையாடியிருந்தார். இந்த நிலையில், சங்கக்காரவை கெளரவிக்கும் விஷேட நிகழ்வு ஒன்றினை கடந்த ஐந்தாம் திகதி NCC கழகம் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.

நான் இலங்கை அணிக்கு ஆடுவேன் என்ற போது அனைவரும் சிரித்தனர் – சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்……

குமார் சங்கக்கார NCC  கழகத்தில் விளையாடிய போது, குறித்த கழகத்தில், ரசல் ஆர்னல்டும் விளையாடியிருந்தார். இந்த நிலையில், குறித்த காலப்பகுதியின் சில ஞாபகங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

“சங்கக்காரவை நான் முதன் முதலாக உள்ளக பயிற்சிக்கூடத்தில் கண்டேன். கண்டியிலிருந்து வருகைதந்த அவர் என்னிடம், நான் NCC  அணிக்காக விளையாட வேண்டும் எனக்கூறினார். அவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தை அதுதான்” என ரசல் ஆர்னல்ட் குறிப்பிட்டார்.

குமார் சங்கக்கார NCC  அணிக்காக விளையாட ஆரம்பித்த காலப்பகுதியில் பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்னர், மைதானத்துக்கு வந்துவிடுவார் எனவும், ஆனால், அவர் கிரிக்கெட் விளையாடாமல் ஸ்னூக்கர் விளையாடுவதற்கே நேரத்துக்கு மைதானத்துக்கு வருவார் என்பதையும் ரசல் ஆர்னல்ட் நகைச்சுவையாக கூறியிருந்தார்.

அத்துடன், குமார் சங்கக்கார மாத்திரம் பயிற்சிக்கு வருவதில்லை. அவருடைய மனைவி யெஹாலியுடன், மைதானத்துக்கு வருவார். அவர்களுடன், ரசல் மற்றும் அவரது மனைவி அத்துடன், மைதானத்துக்கு வரும் சிலர் பயிற்சி முடிந்ததும், நடன வகுப்புக்கு செல்வார்கள் என்பதையும், இதில், குறித்த இருவருக்கும் நடனம் என்றால் அதிகம் பிடிக்கும் எனவும் ரசல் ஆர்னல்ட் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி, குமார் சங்கக்கார ஆரம்ப காலத்தில் எவ்வாறான தன்னம்பிக்கை கொண்ட வீரர் என்பதையும் ரசல் ஆர்னல்ட் வெளிப்படுத்த தவறவில்லை.

“குமார் சங்கக்காரவின் அப்போதைய நண்பர்கள் அசேல பத்திரன, சஞ்சீவ ஜயரத்ன, ரிதி கம்மானகெதர, ரங்கன ஹேரத் மற்றும் சரிந்த பெர்னாண்டோ. இதில், தெஹிவளை பக்கமிருந்த ரங்கன ஹேரத் மற்றும் சரிந்த ஆகியோர் 176 பஸ்ஸில் ஏறி, குமார் சங்கக்காரவை நாவலையில் வைத்து அழைத்துக் கொண்டு, ஏனையவர்கள் ராஜகிரியவில் இணைந்து பயிற்சிக்கு வருவர்.

Photos: Kumar Sangakkara’s felicitation ceremony at NCC

ThePapare.com | Waruna Lakmal | 05/09/2019 Editing and re-using images without permission of ThePapare.com…..

இவர்கள், அனைவரும் அதிகமாக தாமதமாகியே பயிற்சிக்கு வருவர். போட்டி நாட்களிலும் இவ்வாறு நடக்கும். இதற்கான காரணம் சங்கக்கார. அவரின் துடுப்பாட்ட மட்டை பயிற்சி. வீட்டில் மாத்திரமின்றி, மைதானத்துக்கு வரும் வரை சுமார் மில்லியன் தடவைகள் துடுப்பாட்ட மட்டையை சுத்திக்கொண்டும், பயிற்சி செய்துகொண்டுதான் இருப்பார். இவ்வாறான கடின உழைப்பு, கிரிக்கெட்டின் மீதுள்ள ஆர்வம் மற்றும் அவரது சக்திதான் இந்த அளவிற்கு அவர் வருவதற்கு காரணம்”

அதேநேரம், குமார் சங்கக்கார எப்படி பட்டவர்? கிரிக்கெட் மீதுள்ள அவரது ஆர்வம் மற்றும் அவரால் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை என்ற விடயங்களை ஒரே ஒரு சம்பவத்தின் போது தெரிந்துகொண்டதாகவும், ரசல் ஆர்னல்ட் குறிப்பிட்டார்.

“எமது NCC அணியின் அப்போதைய பயிற்றுவிப்பாளராக ரொமேஷ் ரத்நாயக்க இருந்தார். அணியின் விக்கெட் காப்பாளராக பிரசன்ன ஜயவர்தன இருந்தார். ஒருநாள் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது, குமார் சங்கக்காரவை பார்த்து ரொமேஷ் ரத்நாயக்க, எமது அணியில் பிரசன்ன ஜயவர்தன இருக்கிறார். நீ (சங்கக்கார) துடுப்பாட்ட வீரர் மற்றும் விக்கெட் காப்பாளராக விளையாடுவதற்கு வேறு ஒரு கழகத்துக்கு சென்றிருக்கலாமே? என கேட்டார்.

ரொமேஷ் ரத்நாயக்க கேள்வியை முடிக்கும் முன், குமார் சங்கக்கார அளித்த பதிலில் அவரை பற்றி நான் தெரிந்துகொண்டேன். குறித்த கேள்விக்கு குமார் சங்கக்கார, அந்த சவாலை ஏற்க தயாராக உள்ளேன்” என்றார். இந்த சம்பவம் குமார் சங்கக்கார எப்படியானவர் என்பதை எனக்கு காட்டியது. அவரை பற்றி தெரிவதற்கு இந்த ஒரு சம்பவம் போதும்” 

சங்கக்காரவினால் பெருமையடைகிறோம். அவரை பார்த்து கற்றுக்கொள்கின்றோம். அதற்கும் மேலும் மிகவும் பெருமிதம் அடைகிறோம் என குறிப்பிட்ட ரசல், இலங்கை அணியில் தனது இடத்தை குமார் சங்கக்கார பறித்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

“மூத்த வீரர்கள் செல்லும் போது அவர்களை ஒருபக்கம் தள்ளிவிட்டு, தனது திறமையால் குமார் சங்கக்கார முன்னிலை பெற்றுள்ளார். குறிப்பாக, இலங்கை அணியில் நான் மூன்றாம் இடத்தில் துடுப்பெடுத்தாடினேன். அதனை குமார் சங்கக்கார பறித்துவிட்டார். ஆனால், என்னை அந்த இடத்திலிருந்து நீக்கி, குமார் சங்கக்காரவை குறித்த இடத்துக்கு ஒருவர் கொண்டு வந்தார். அவர் எடுத்த அந்த முடிவு மிகவும் சிறந்த முடிவு” என்றார்.

இறுதியாக, ரசல் ஆர்னல்ட், “நான் கிரிக்கெட்டில் ஒரு அங்கமாகியதில் மகிழ்ச்சி. நான் பல கிரிக்கெட் ஜாம்பவான்களை பார்த்துள்ளேன். அதில், மைதானத்திலும் சரி, மைதானத்துக்கு வெளியிலும் சரி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். இதை யாரிடமும் நான் கேட்க தேவையில்லை. ஏனென்றால் ஆரம்பத்திலிருந்து அவரை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என கூறினார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<