73ஆவது ‘பிரெட்பி’ கிண்ணத்தை சுவீகரித்த ரோயல் கல்லூரி

240
Royal College - 73rd Bradby Shield Winner 2017

திரித்துவக் கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரிகளுக்கு இடையிலான 73ஆவது ‘பிரெட்பி’ (Bradby) கிண்ண இரண்டாம் கட்ட போட்டியிலும் 13-8 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று, ரோயல் கல்லூரி ‘பிரெட்பி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற முதல் கட்ட போட்டியில் 22-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று லீக் கிண்ணத்தை சுவீகரித்த ரோயல் கல்லூரியானது, 5 புள்ளிகள் முன்னிலையுடன் இப்போட்டியில் கலந்துகொண்டது. மறுமுனையில் லீக் கிண்ணத்தை ரோயல் கல்லூரியிடம் பறிகொடுத்த திரித்துவக் கல்லூரியானது, ‘பிரெட்பி கிண்ணத்தை வெல்ல வேண்டும் எனில் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது.

கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்,  மழையின் காரணமாக மைதானத்தில் சகதி நிறைந்த நிலையில் போட்டி ஆரம்பித்தது. போட்டியின் ஆரம்பத்தில் திரித்துவக் கல்லூரி அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. ரோயல் கல்லூரியின் 22 மீட்டர் எல்லையினுள் பந்தை நகர்த்தியும் திரித்துவக் கல்லூரியினால் ட்ரை வைக்க முடியவில்லை. எனினும் 4ஆவது நிமிடத்தில் திரித்துவக் கல்லூரிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. இதனை பயன்படுத்தி திரித்துவக் கல்லூரிக்கு 3 புள்ளிகளை லஷான் விஜேசூரிய பெற்றுக்கொடுத்தார். (ரோயல் கல்லூரி 00-03 திரித்துவக் கல்லூரி)

எனினும் தனது சொந்த மைதானத்தில் விளையாடும் ரோயல் கல்லூரியானது, மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடி ஆதிக்கம் செலுத்தியது. மழையின் காரணமாக பந்தை அதிகம் பரிமாற்றம் செய்து விளையாடாத ரோயல் கல்லூரியானது, தனது பலம் மிக்க முன் வரிசை வீரர்கள் மூலமாக பந்தை முன் நகர்த்தியது. ரோயல் கல்லூரி தனது பலம் மிக்க ரோலிங் மோல் மூலமும் மற்றும் பெனால்டி மூலமுமாக திரித்துவக் கல்லூரிக்கு அச்சுறுத்தல் வழங்கினாலும், திரித்துவக் கல்லூரி அவற்றை தடுத்தது.

எனினும் தமது 22 மீட்டர் எல்லைக்குள் ரோயல் கல்லூரிக்கு பெனால்டி வாய்ப்பொன்றை திரித்துவக் கல்லூரி வழங்கியது. இதனை வெற்றிகரமாக கம்பத்தினை நோக்கி உதைத்த மொகமட் ஷாகிர் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்து புள்ளிகளை சமனாக்கினார். (ரோயல் கல்லூரி 03-03 திரித்துவக் கல்லூரி)

பின்னர் திரித்துவக் கல்லூரியானது ரோயல் கல்லூரி செய்த தவறுகளை பயன்படுத்தி முன்னேறினாலும், புள்ளிகளைப் பெறத்தவறியது. ரோயல் கல்லூரியின் கோட்டையினுள் பெனால்டி வாய்ப்பொன்றை பெற்றுக்கொண்ட திரித்துவக் கல்லூரியானது, கம்பத்தினை நோக்கி உதையாது, வெளியே உதைத்து லைன் அவுட் மூலம் பந்தை நகர்த்த முற்பட்டாலும், அது தோல்வியடைந்தது. இது போன்ற தவறான தீர்மானங்கள் திரித்துவக் கல்லூரியின் தோல்விக்கு வழிவகுத்தது.

இரண்டு அணிகளும்  மேலதிக எந்த ஒரு புள்ளிகளையும் பெறாத நிலையில் முதல் பாதி முடிவுக்கு வந்தது.

முதல் பாதி: ரோயல்  கல்லூரி 03- 03 திரித்துவக் கல்லூரி

இரண்டாம் பாதியில் திரித்துவக் கல்லூரியானது புதிய மேற் சட்டைகளுடனும், புத்துணர்ச்சியுடனும் களத்தில் இறங்கியது. எனினும் ரோயல் கல்லூரியானது திரித்துவக் கல்லூரியின் கனவுகளை தகர்க்கும் வகையில் சிறப்பாக விளையாடியது.

கிடைத்த பெனால்டியின் மூலம், திரித்துவக் கல்லூரியின் கோட்டையினுள் பந்தை உதைத்த ரோயல் கல்லூரியானது, தனது பலம் மிக்க ரோலிங் மோல் மூலமாக பந்தை சிறப்பாக நகர்த்தியது. ரோயல் கல்லூரி முன் வரிசை வீரர்கள் சிறப்பாக செயற்பட்டனர். சில கட்டங்களின் பின்னர் ரோயல் கல்லூரியானது தனது முதல் ட்ரையை சசித கருணாரத்ன மூலமாக வைத்தது. மொகமட் ஷாகிர் கொன்வெர்சனை வெற்றிகரமாக பூர்த்தி செய்யத்தவறினார். (ரோயல் கல்லூரி 08-03 திரித்துவக் கல்லூரி)

தொடர்ந்து மேலும் ஒரு ட்ரை வைத்து தனது முன்னிலையை ரோயல் கல்லூரி அதிகரித்துக்கொண்டது. மீண்டும் ஒரு முறை ரோலிங் மோல் மூலமாக பந்தை நகர்த்திய ரோயல் கல்லூரியானது சில கட்டங்களின் பின்னர், தமது ப்ரொப் நிலை வீரரான ஹிமந்த கிருஷான் மூலமாக ட்ரை வைத்தது. திரித்துவக் கல்லூரியின் மோசமான தடுப்பு இரண்டாவது ட்ரை வைப்பதற்கு காரணமாக அமைந்தது. ரோயல் கல்லூரியை விட திரித்துவக் கல்லூரி வீரர்களின் மொத்த நிறை அதிகமாக காணப்பட்டாலும், ரோலிங் மோலில் ரோயல் கல்லூரி ஆதிக்கம் செலுத்தியமை ரோயல் கல்லூரியின் பலத்தை நிரூபித்தது. மொகமட் ஷாகிரின் கொன்வெர்சன் கம்பத்தில் பட்டு திரும்பியது. (ரோயல் கல்லூரி 13-03 திரித்துவக் கல்லூரி)

முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை சேர்த்து ரோயல் கல்லூரி 15 புள்ளிகள் முன்னிலையில் காணப்பட்டமையால். திரித்துவக் கல்லூரியின் மீதான அழுத்தம் அதிகமாகியது. திரித்துவக் கல்லூரி புள்ளிகளைப் பெற கடுமையாக முயற்சித்தாலும், முக்கிய வீரர்கள் செய்த சில தவறுகளினால் புள்ளிகளைப் பெறும் வாய்ப்பு நழுவியது. இறுதியில் 3 நிமிடங்களே எஞ்சி இருந்த நிலையில் திரித்துவக் கல்லூரி அவிஷ்க ப்ரியங்கர மூலமாக ட்ரை வைத்தது. ஷெனால் கொன்வெர்சனை தவறவிட்டார். தொடர்ந்து இரு அணிகளாலும் மேலதிக புள்ளிகள் ஏதும் பெறப்படாத நிலையில் போட்டி நிறைவுற்றது.

முழு நேரம்: ரோயல் கல்லூரி 13-08 திரித்துவக் கல்லூரி

இரண்டு போட்டிகளும் உள்ளடங்கலாக 35-25 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று, ரோயல் கல்லூரியானது ‘பிரெட்பி’ கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

திரித்துவக் கல்லூரியானது மிகச் சிறந்த போட்டியை வெளிப்படுத்தினாலும், சில மோசமான தீர்மானங்களினால் வெற்றியை தவறவிட்டது. பல பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தாலும், கம்பத்தினை நோக்கி உதைத்து 3 புள்ளிகளை பெற முயலாதது அவற்றில் ஒன்றாகும். மேலும் நட்சத்திர வீரர்களான போயகொட, தங்கே மற்றும் மாதன ஆகியோரின் சிறிய தவறுகள் அணிக்கு பெறும் பாதிப்பை ஏற்படுத்தின. திரித்துவக் கல்லூரி அதிக பெனால்டி வாய்ப்புகளை ரோயல் கல்லூரிக்கு வாரி வழங்கியதை காணக்கூடியதாக இருந்தது. இது போன்ற சிறு தவறுகளினால் திரித்துவக் கல்லூரி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

ரோயல் கல்லூரியானது தனது வழமையான நிதானமான ஆட்டத்தினால் இம்முறையும் வெற்றிவாகை சூடிக்கொண்டது.

புள்ளிகள் பெற்றோர்

ரோயல்  கல்லூரி

ட்ரை – சசித கருணாரத்ன, ஹிமந்த ஹிருஷன்

பெனால்டி – மொகமட் ஷாகிர் (1)

திரித்துவக் கல்லூரி

ட்ரை – அவிஷ்க ப்ரியங்கர

பெனால்டி – லஷான் விஜேசூரிய (1)