கொழும்பு, SSC விளையாட்டு மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற விறுவிறுப்பான புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையிலான 42ஆவது மஸ்டாங் கிண்ணத்துக்கான பெரும் சமரில், தொடர்ந்து நான்காவது தடவையாகவும் புனித தோமியர் கல்லூரி வெற்றியீட்டியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய றோயல் கல்லூரி தலைவர் புனித தோமியர் கல்லூரியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தார். அந்த வகையில் முதலில் துடுப்பாட களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக துளித் குணரத்ன மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரவிந்து கொடிதுவக்கு ஆகியோரை களமிறக்கியது.

சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த இவ்விரு துடுப்பாட்ட வீரர்களும் முதல் விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். எனினும், 15 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் துளித் குணரத்ன ரன் அவுட் முறையில் துரதிஷ்டவசமாக ஓய்வறை திரும்பினார்.

அதனையடுத்து விரைவாக ஓட்டங்களை குவிக்க எத்தனித்த தோமியர் கல்லூரி அதிரடி துடுப்பாட்ட வீரரான சிதார ஹப்புஹின்னவை தொடர்ந்து களமிறக்கியது. ரவிந்து கொடிதுவக்கு மற்றும் ஹப்புஹின்ன ஆகியோர் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 25 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். சிறப்பாக பந்து வீசிய ஹெலித விதானகே ஓட்டங்களை மட்டுப்படுத்திய அதேநேரம் சிதார ஹப்புஹின்னவை 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்து தோமியர் கல்லூரிக்கு அதிர்ச்சியளித்தார்.  

[rev_slider dfcc728]

.

அவரை தொடர்ந்து, களமிறங்கிய ரொமேஷ் நல்லப்பெரும நிதனமாக துடுப்பாடினார். நல்லப்பெரும மற்றும் கொடிதுவக்கு ஆகியோர் இணைந்து ஓட்டங்களை குவித்த அதே நேரம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தி அணியை மேலும் வலுப்படுத்தினர். எனினும், சிறப்பாக துடுப்பாடிய ரவிந்து கொடிதுவக்கு 95 ஓட்டங்களை பெற்றிருந்த போது துரதிஷ்டவசமாக பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

மூத்த துடுப்பாட்ட வீரரான ரொமேஷ் நல்லப்பெரும நிதானமாக துடுப்பாடி அரைச் சதம் பெற்றார். எனினும் மீண்டும் அதிரடியாக பந்து வீசிய ஹெலித விதானகே, ரொமேஷ் நல்லப்பெருமவை 53 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தார். அதேநேரம் மறுமுனையில் துடுப்பாடிய இஷேன் பெரேரா இறுதிவரை துடுப்பாடி ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை விளாசினார்.

இறுதியில் 50 ஓவர்கள் நிறைவில், புனித தோமியர் கல்லூரி 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 258 ஓட்டங்களை பதிவு செய்தது. சிறப்பாக பந்து வீசிய றோயல் கல்லூரி அணித் தலைவர் ஹெலித விதானகே 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனையடுத்து, கடின இலக்கை நோக்கி களமிறங்கிய றோயல் கல்லூரி, ஆரம்ப துடுப்பாட்ட வீரரான க்ரிசிக்கன் ரவிந்த்ரநாதன் ஓட்டமெதுவும் பெறாமலே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். எனினும் அவரை தொடர்ந்து களமிறங்கிய அஹான் விக்கரமசிங்க நிதானமாக துடுப்பாடி ஓட்டங்களை சேகரித்தார். அந்த வகையில் றோயல் கல்லூரி 10 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 19 ஓட்டங்களை மாத்திரம் பதிவு செய்திருந்தது.

எனினும், 10ஆவது ஓவரிலிருந்து அதிரடியாக துடுப்பாடிய றோயல் கல்லூரி 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்ட போதிலும், அஹான் மற்றும் லகிந்து, இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்றனர். மேலும், மத்திய வரிசை வீரர்களான பசிந்து சூரியபண்டார மற்றும் கவிந்து மதரசிங்க ஆகியோர் தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 103 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் இருந்தது கொழும்பு றோயல் கல்லூரி.

அதனை தொடர்ந்து, களமிறங்கிய றோயல் கல்லூரி அணித் தலைவர் ஹெலித விதானகே மற்றும் தெவிந்து சேனாரட்ன தங்களுக்கிடையில் 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்ட அதேநேரம் நெருக்கடியில் இருந்த அணியை மீட்டு தோமியர் கல்லூரியை அச்சுறுத்தினர். சிறப்பாக துடுப்பாடிய அணித் தலைவர் ஹெலித விதானகே 33 ஓட்டங்களை பெற்ற நிலையில் துரதிஷ்டவசமாக பவித்த ரத்னாயக்கவின் பந்து வீச்சில் டினுரா குணவர்தனவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து துடுப்பாடிய தெவிந்து சேனாரட்ன 71 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு வெற்றி இலக்கை அடைய வழிநடத்திய நிலையில், துரதிஷ்டவசமாக ரொமேஷ் நல்லப்பெருமவின் அற்புதமான பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பின் வரிசை வீரர்களும் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 11 ஓட்டங்களால் கொழும்பு றோயல் கல்லூரி தோல்வியை தழுவியது.

அதிரடியாக பந்து வீசிய பவித் ரத்நாயக்க 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கழன பெரேரா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியும் தோமியர் கல்லூரியின் வெற்றியை உறுதிப்படுத்தனர்.  

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை258/7 (50) – ரவிந்து கொடிதுவக்கு 95, ரொமேஷ் நல்லப்பெரும 53, இஷேன் பெரேரா 36, ஹெலித விதானகே 4/42, கனித் சந்தீப 2/45

றோயல் கல்லூரி, கொழும்பு – 247/9 (50) – தெவிந்து சேனாரட்ன 71, லகிந்து நாணயக்கார 44, ஹெலித விதானகே 33, பவித் ரத்நாயக்க 3/37, கழன பெரேரா 2/47

விருதுகள்

சிறந்த துடுப்பாட்ட வீரர்

  • தெவிந்து சேனாரட்ன (றோயல் கல்லூரி)
  • ரவிந்து கொடிதுவக்கு (புனித தோமியர் கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர்

  • ஹெலித விதானகே (றோயல் கல்லூரி)
  • பவித் ரத்நாயக்க (புனித தோமியர் கல்லூரி)

சிறந்த புதுமுக வீரர்

  • தெவிந்து சேனாரட்ன (றோயல் கல்லூரி)

போட்டியின் ஆட்ட நாயகன்

  • ரவிந்து கொடிதுவக்கு (புனித தோமியர் கல்லூரி)