வரலாற்றை மாற்றவுள்ள றோயல் – தோமியரின் 140ஆவது நீல நிறங்களின் சமர்

150

உலகின் மிகவும் பழைமையான கிரிக்கெட் தொடரில் 2ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள நீல நிறங்களின் சமர் என்று அழைக்கப்படும் கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் கிரிக்கெட் சமர், 140 ஆவது தடவையாகவும் டி.எஸ் சேனநாயக்க ஞாபகார்த்த கேடயத்துக்காக கொழும்பு SSC மைதானத்தில் நாளை (07) முதல் எதிர்வரும் 09ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நூற்றாண்டு கால வரலாறு

உலக கிரிக்கெட் வரலாற்றில் பெருமை மிக்க வரலாற்றைக் கொண்ட புனித தோமியர் மற்றும் றோயல் சமர் 1879ஆம் ஆண்டு ஆரம்பித்த அதேநேரம் தொடர்ச்சியாக வருடம் தோரும் நடைபெற்றுவரும் உலகிலுள்ள இரண்டாவது போட்டியாகும். முதலாவதாக இந்த போட்டிகளுக்கு, ஒரு வருடத்துக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அடிலெய்ட் நகரிலுள்ள புனித பேதுரு கல்லூரி மற்றும் பிரின்ஸ் அல்பர்ட் கல்லூரிக்கும் இடையே நடைபெற்றுவரும் போட்டியாக இடம்பிடித்துள்ளது.

140ஆவது நீல நிறங்களின் சமர் ஊடகவியலாளர் மாநாட்டின் புகைப்படங்களைப் பார்வையிட…

இதேநேரம், இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையிலான அங்குரார்ப்பண நீல நிறங்களின் சமர் கிரிக்கெட் போட்டி 1880ஆம் ஆண்டு கொழும்பு காலி முகத்திடலில உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றுள்ளது. அன்று முதல் தொடர்ச்சியாக இப்போட்டியானது எந்தவொரு தடையுமின்றி நடைபெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதேநேரம் இவ்விரு கல்லூரிகளுக்காக விளையாடியிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் பின்னர் நாட்டின் புகழ்பெற்ற தலைவர்களாக உருவெடுத்துள்ளனர். புனித தோமியர் கல்லூரியைச் சேர்ந்த, இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ் சேனநாயக்க, மற்றும் அவரது மகனும், முன்னாள் பிரதமருமான டட்லி சேனாநாயக்க ஆகிய இருவரும் புனித தோமியர் கல்லூரிக்காக விளையாடியுள்ள அதேநேரம், றோயல் கல்லூரி சார்பாக இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன மற்றும் முன்னாள் பிரதமரான சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோரும் இந்த நாட்டின் தலைவர்களாக உருவெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருட நீலநிறங்களின் சமரில் றோயல் கல்லூரியின் அணித் தலைவராக கவிந்து மதாரசிங்கவும், புனித தோமியர் கல்லூரியின் தலைவராக சித்தார ஹப்புஹின்னவும் செயற்படவுள்ளனர். இவ்விரண்டு வீர்ரகளும் விக்கெட் காப்பாளர்கள் ஆவர்.

இவ்விரு பாடசாலைகளுக்கு இடையே இதுவரை நடைபெற்ற கிரிக்கெட் சமர்களில் றோயல் கல்லூரி 35 தடவைகளும், புனித தோமியர் கல்லூரி 34 தடவைகளும் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இதில் 1885ஆம் ஆண்டு நடைபெற்ற சமரில் றோயல் கல்லூரி 9 ஓட்டங்களுக்கு சுருண்டது. எனினும், இரண்டாம் நாள் போட்டி நடைபெறாவிட்டாலும் தோமியர் கல்லூரி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதாகவும், றோயல் கல்லூரிக்கு வெற்றி தோல்வியின்றி போட்டியை நிறைவுசெய்ததாகவும் கருதப்பட்டது.

இந்த சமரில் புனித தோமியர் கல்லூரி 2007ஆம் ஆண்டு அஷான் பீரிஸின் தலைமையில் இறுதியாக வெற்றியீட்டியதுடன், றோயல் கல்லூரி, இறுதியாக 2016ஆம் ஆண்டு கீஷாத் பண்டிதரத்னவின் தலைமையில் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. இதன்படி, டி.எஸ் சேனநாயக்க ஞாபகர்த்த கேடயத்தினை றோயல் கல்லூரி தக்கவைத்துக் கொண்டுள்ளது.

றோயல் கல்லூரி

பாடசாலை கிரிக்கெட்டில் டிவிஷன் 2 இல் விளையாடிவரும் றோயல் கல்லூரியில் இருந்து ஒருசில வீரர்கள் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்காக விளையாடியுள்ளனர். எனவே எந்தவொரு அணியையும் வீழ்த்துகின்ற பலமிக்க அணிகளில் ஒன்றாக றோயல் கல்லூரி விளங்குகின்றது.

அத்துடன், இம்முறை பருவகாலத்தில் டிவிஷன் 2 பிரிவில் தோல்வியைத் தழுவாத அணிகளில் ஒன்றாக வலம்வந்து கொண்டிருக்கின்ற றோயல் கல்லூரி, இதுவரை ஐந்து போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. இதில் அணித் தலைவர் கவிந்து மதாரசிங்க மத்திய வரிசையில் களமிறங்கி அவ்வணிக்காக முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை பருவகாலத்தில் முழங்கால் உபாதையினால் பாதிக்கப்பட்டு விளையாடாமல் இருந்த அவர், இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 50 சதவீததுக்கும் அதிகமான துடுப்பாட்ட சராசரியையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த வருடம் அணித் தலைவராக செயற்பட்ட பசிந்து சூரியபண்டார, இம்முறை பருவகாலத்தில் அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த முக்கிய வீரராவார். தனது 4ஆவது நீல நிறங்களின் சமரில் விளையாடவுள்ள அவர், இவ்விரண்டு அணிகளிலும் உள்ள அனுபவமிக்க வீரரும் ஆவார். அத்துடன், இந்தப் பருவகாலத்திற்கான பாடசாலை கிரிக்கெட் தொடரில் 86.66 என்ற சராசரியுடன் 800 ஓட்டங்களை பெற்றிருக்கின்றார்.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய மற்றுமொரு வீரரான கமில் மிஷார, இம்முறை சமரில் றோயல் கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கவுள்ளார். இந்தப் பருவகாலத்தில் ஆனந்த கல்லூரிக்கு எதிராக நடைபெற்ற பாரம்பரியமிக்க போட்டியில் 250 ஓட்டங்களைக் குவித்த அவர், றோயல் கல்லூரி சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்

கிஷான் பாலசூரிய மற்றும் கௌஷான் குலசூரிய ஆகியோர் சுழல் வீரர்களாக றோயல் கல்லூரிக்கு வலுச்சேர்க்கவிருக்கின்றனர். இந்தப் பருவகாலத்தில் இவ்விரண்டு வீரர்களும் 75 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இதேநேரம், SSC ஆடுகளத்தில் கவிந்து பத்திரன மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் வேகப்பந்துவீச்சில் மிரட்டுவார்கள் என நம்பப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, அண்மைக்காலமாக பாடசாலை கிரிக்கெட்டில் ஜொலிக்காத மனுல பெரேரா மற்றும் டெங்குக் காய்ச்சலினால் சிகிச்சை பெற்றுவருகின்ற தெவிது சேனாரத்ன ஆகிய இருவரும் இம்முறை நீல நிறங்களின் சமரில் இடம்பெறவில்லை. எனினும், இவ்விரண்டு வீரர்களும் கடந்த வருட சமரில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

றோயல் கல்லூரி பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்ட விபரம் விபரம்

பந்துவீச்சு

Name Overs Runs Wickets 5W Best Avg
Gishan Balasooriya 234.1 583 42 3 6/29 13.88
Kawshan Kulasooriya 239.5 675 36 2 7/71 18.75
Manula Perera 131.4 307 26 2 5/28 11.8
Lahiru Madushanka 141.4 435 21 1 5/37 20.71
Kamil Mishara 104.5 305 19 1 6/31 16.05
Kavindu Pathirathne 102.2 346 11 3/14 31.45
Dimal Wijesekara 50 154 5 1 5/40 30.8
Name M I 100s 50s HS Total Avg.
Pasindu Sooriyabandara 11 14 2 4 202* 780 86.66
Ahan Wickramasinghe 12 14 2 4 135* 651 54.25
Isiwara Dissanayake 13 16 1 2 113 574 35.88
Kamil Mishara 9 10 1 1 250 513 51.3
Bhagya Dissanayake 11 10 1 1 142 343 34.3
Thevindu Senarathne 11 11 1 1 100* 330 41.25
Kavindu Madarasinghe 9 8 1 1 104* 265 51.2

துடுப்பாட்டம்

றோயல் கல்லூரி அணி விபரம் – இசிவர திஸாநாயக்க, கமில் மிஷார, அஹான் விக்ரமசிங்க, பசிந்து சூரியபண்டார, கவிந்து மதாரசிங்க (தலைவர்), பாக்ய திஸாநாயக்க, திதிர வீரசிங்க, டிமல் விஜேசேகர, கவிந்து பத்திரன, லஹிரு மதுஷங்க, கௌஷான் குலசூரிய, கிஷான் பாலசூரிய

புனித தோமியர் கல்லூரி

நாட்டின் அதிசிறந்த சகலதுறை வீரரைக் கொண்ட பாடசாலையான புனித தோமியர் கல்லூரி, இம்முறை பருவகாலத்தில் பிரிவு ஒன்றில் விளையாடி வருவதுடன், இதுவரை நடைபெற்ற 17 போட்டிகளில் 6 இல் வெற்றிபெற்றுள்ளது.

இம்முறை நீல நிறங்களின் சமரில் புனித தோமியர் கல்லூரியின் தலைவராக இடதுகை துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான சிதார ஹப்புஹின்ன செயற்படவுள்ளார். இம்முறை பருவகாலத்தில் 2 சதங்களுடன் 824 ஓட்டங்களைக் குவித்துள்ள அவர் 90.8 என்ற துடுப்பாட்ட சராசரியையும் கொண்டுள்ளார். அத்துடன், 664 ஓட்டங்களைக் குவித்துள்ள ஷலின் டி மெல் அவருக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்துள்ளார்.

இதேநேரம், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ள ரவிந்து டி சில்வா, அந்த அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கி வலுச்சேர்க்கவுள்ளார். இம்முறை பருவகாலத்தில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 50 மேற்பட்ட துடுப்பாட்ட சராசரியுடன் 500 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

அத்துடன், சகலதுறை வீரரான கலன பெரேரா, புனித தோமியர் கல்லூரியின் முக்கிய வீரராக இடம்பிடித்துள்ளார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அவர், இப்பருவகாலத்தில் 75 விக்கெட்டுக்களையும் 400 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த வருடம் அணியை வழிநடத்தியவரும், முன்னணி பந்துவீச்சாளருமான டிலோன் பீரிஸ் சுழலில் மிரட்டவுள்ளார். இப்பருவகாலத்தில் 70 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள அவர், வெஸ்லி கல்லூரிக்கு எதிரான போட்டியில் 26 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். அத்துடன், டில்மின் ரத்னாயக்க (39), ஷென்னோன் பெர்னாண்டோ (38) ஆகியோர் சுழல் வீரர்களாக தோமியர் கல்லூரிக்கு வலுச்சேர்க்கவிருக்கின்றனர்.

இதேவேளை, உபாதை காரணமாக மனீஷ ரூபசிங்கவுக்கு இம்முறை சமரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் 15 வயதுடைய ரையன் பெர்னாண்டோவை அணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புனித தோமியர் கல்லூரியின் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்ட விபரம்

பந்துவீச்சு

Name Overs Runs Wickets 5W Best Avg
Kalana Perera 307.5 917 76 4 8/01 12.07
Dellon Peiris 384.0 999 74 3 7/26 13.50
Dilmin Rathnayake 171.5 575 39 2 5/36 14.74
Shannon Fernando 223.2 474 36 0 4/40 13.17
Kishan Munasinghe 128.0 328 15 0 2/03 21.87
Thevin Eriyagama 77.0 208 13 1 5/09 16.00
Shalin De Mel 50.0 177 8 0 2/22 22.13

துடுப்பாட்டம்

Name M I 100s 50s HS Total Avg.
Sithara Hapuhinna 16 22 2 4 142 824 43.44
Shalin De Mel 16 23 2 2 151 664 34.90
Ravindu De Silva 10 10 2 1 122 486 54.00
Kalana Perera 15 20 1 1 108 439 23.10
Umayanga Suwaris 14 16 1 3 107 412 27.50
Kishan Munasinghe 17 18 0 2 66 361 21.20
Dellon Peiris 16 17 0 2 54 331 22.1

புனித தோமியர் கல்லூரி அணி விபரம் – சிதார ஹப்புஹின்ன (அணித் தலைவர்), ஷெலின் டி மெல், ரையன் பெர்னாண்டோ, கிஷான் முனசிங்க, ரவிந்து டி சில்வா, யொஹான் பெரேரா, உமயங்க சுவாரிஸ், கலன பெரேரா, டிலோன் பீரிஸ், தெவின் எரியகம, டில்மின் ரத்னாயக்க, ஷென்னோன் பெர்னாண்டோ

டயலொக் அனுசரணை

இலங்கை பாடசாலை கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவமும், பழைமை வாய்ந்த இப்போட்டிக்கு தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகின்றது.

அத்துடன், இப்போட்டியானது நற்பணி நிதி திரட்டும் நோக்கில் இடம்பெறுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதில் பெறப்படும் ஒவ்வொரு ஓட்டத்துக்கும் தலா ஆயிரம் ரூபா பணமும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 10 ஆயிரம் ரூபா வீதமும் டயலொக் நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது.

இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை ThePapare.com ஊடாகவும் டயலொக்அலைவரிசை 77 ஊடாகவும்,MyTV செயலி ஊடாகவும் ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க